Header Ads Widget

Responsive Advertisement

காக்கைக்கு தன் குஞ்சு (சிறுகதை)

அது காகங்களின் இனப்பெருக்க காலம், அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த இரு காகங்களில் பெண்காகம் முட்டையிடத் தயாரானது, ஆகவே தன் இனையான ஆண் காகத்தோடு இனைந்து அந்த கிராமத்தில் இருந்த பெரிய வேப்பமரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் கிளை ஒன்றைத் தேர்ந்தெடுத்து முள், குச்சிகள், கயிறு, இன்னும் காய்ந்த புற்கள் இவைகளைக் கொண்டு அழகிய கூடு ஒன்றைக் கட்டின. முட்டையிடும் காலம் ஆகையால் அந்தப் பெண் காக்கைக்கு அதிகமான தீனி வேண்டும் ஆகையால் ஆண் காக்கை தனக்குக் கிடைத்த சின்னச் சின்ன உணவுகளைக் கூட தன் பெண்காக்கையை அழைத்து உணவு கொடுக்கும். இரண்டும் மாலை நேரங்களில் தாங்கள் கட்டிய கூட்டின் அருகிலேயே அமர்ந்து ஓய்வெடுக்கும்.

பெண் காக்கை முட்டையிடும் நாள் வந்தது, நாளொரு முட்டையாக இரண்டு அழகிய முட்டைகளை இட்டது, முட்டைகளை இட்ட நாள் முதல் ஆண் காக்கை அந்த மரத்தைச் சுற்றி ஏதாவது பூனைகள் மற்றும் நாய் மனிதர்கள் என யார் கடந்து சென்றாலும் எச்சரிக்கை ஒலி எழுப்பி பெண் காகத்தை எச்சரிக்கும், பெண் காகமும் எச்சரிக்கையடையும், சில சமயம் அந்த மரத்தின் மிக அருகில் வரும் ஆடு, மாடு, போன்ற விலங்குகள் உட்பட மனிதர்களையும் பறந்து வந்து கொத்தி கொத்தி அங்கிருந்து விரட்டி கொண்டே இருக்கும். பெண் காகம் தன் முட்டைகளை அடைகாக்கும் நாட்களில் சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் தன் முட்டைகளைக் காப்பதிலேயே அதிக கவனம் செலுத்தும், ஆண்காகமும் தன் கூட்டுக்கு மிக அருகிலேயே உணவு தேடிக்கொண்டு உயிர்வாழும், மாலை நேரங்களில் ஆண் காகம் தன் கூட்டுக்கு அருகிலேயே தூங்கும்,

அந்த அந்தி சாயும் நேரங்களில் ஒரு ஆண் குயில் மிக மிக அழகான குரலால் பாடி தன் இனையை அழைக்கும், அப்படிப்பட்ட இனிமையான அந்த குயிலின் பாடலை இந்த இரு காகங்களும் கேட்டு இரசித்துக் கொண்டே தூங்கச் செல்லும், நாட்கள் கடந்தது, காக்கையின் முட்டை பொறிக்கும் நாட்கள் வந்தது, சிறகுகள் இல்லாத அழகாக இரு குஞ்சுகள் அந்த முட்டைகளில் இருந்து பொரிந்து வெளியே வந்தன. அன்று முதல் பெண்காக்கை தன் குஞ்சுகளுக்கு உணவு சேகரித்துக் கொண்டுவந்து அதன் அலகுகளால் ஊட்டிவிடும். இப்போதும் மாலை நேரங்களில் குயில் கூவும் சத்தம் தான் அந்தக் குஞ்சுகள் மற்றும் இரு காகங்களுக்கும் பொழுது போக்கு,

குஞ்சுகள் வளர்ந்தன, சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன, இதனால் பெண்காகம், தன் இனையான ஆண்காகம் ஓய்வெடுக்கும் இடத்தின் அருகில் அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தது, இறுதியாக அந்த குஞ்சுகள் பறக்கும் நாள் வந்தது முழு வளர்ச்சியடைந்த அந்தக் குஞ்சுகள் தன் பெற்றோரைவிட மாறுபட்டு குரல் கொடுக்க ஆரம்பித்தன. உருவத்திலும் கொஞ்சம் மாறி இருந்தன.

அந்தக் காகங்களுக்கு அப்போது தான் புரிந்தது, அந்தக் குஞ்சுகள் காகங்கள் அல்ல குயில்கள் என்று, இத்தனை நாட்கள் இப்படிப் பாதுகாத்து வளர்த்தது தன்னுடைய குழந்தைகள் அல்ல என்று அந்த காகங்கள் அறிந்து ஏமாந்து போயின. அதன் பின் சிறிதும் தாமதிக்காமல் அந்தக் குஞ்சுகளைக் கொத்திக் கொத்தி விரட்ட ஆரம்பித்தன, சூழ்னிலையைப் புரிந்து கொண்ட மற்ற அயலகக் காக்கைகளும் சேர்ந்து கொண்டு அந்தக் குஞ்சுகளை விரட்ட ஆரம்பித்தன, அந்தக் குஞ்சுகள் வெகுதூரம் துரத்தப்பட்டு மறைவான இடம் ஒன்றில் தஞ்சமடைந்து ஒழிந்து கொண்டன. அப்போதுதான் அந்த காக்கைகளுக்குப் புரிந்தது தங்கள் கூட்டை நோட்டம் விட்ட குயில் ஒன்று, இரண்டு காகங்களும் இரைதேடப் பறந்து சென்ற நேரத்தைத் தெரிந்து கொண்டு அந்த சமயத்தில் காக்கையின் முட்டையை கொத்தி குடித்துவிட்டு ஓடுகளை அப்புறப்படுத்தி தன்னுடைய முட்டைகளை இட்டுச் சென்றது என்று.

பிரியமானவர்களே இப்படித்தான் சாத்தான் உலகமெங்கும் சுற்றித் திரிந்து என்னதான் மனிதர்கள் உத்தமமாய் வாழ வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்தாலும், அவர்கள் ஏமாந்த நேரத்தில் மனிதர்களாகிய நம்முடைய இருதயத்தின் நினைவுகளிலோ, செயல்களிலோ, தீமையான தன்னுடைய விதைகளை விதைத்துச் சென்றுவிடுகிறான். அவைகள் நம்மையும் அறியாமல் வளர்ந்து விருட்சமாக மாறும் நாட்கள் வரை அவைகளை நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை, மாறாக அது பிரச்சனைகளைக் கொடுக்க ஆரம்பிக்கும் போதுதான் நமக்கு அந்தத் தீமை குறித்து அறிந்து கொள்ள முடிகிறது, அன்றுதான் இந்த காகங்களைப் போல நாம் ஏமாற்றப்பட்டதையும், அவமானங்களையும் அடைகிறோம், இப்படிப்பட்ட தீமையான விதையிலிருந்து உண்டான‌ சிந்தைகள் மற்றும் செயல்களையும் அனுதினமும் நாம் வேதத்தை தியானித்து வேத வெளிச்சத்தில் நம் சிந்தனைகள் மற்றும் செயல்களை ஆராய்ந்து, வயல் வெளியில் உள்ள களைகளைக் களைவது போல தீமையான விதைகளை நம்மிலிருந்து அனுதினமும் களைந்து நம்மைப் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாய்ப் பெற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாமல் இருப்போமாக....‌

Post a Comment

0 Comments