Header Ads Widget

Responsive Advertisement

தன் பிழைகளை உணருகிறவன்

கட்டுரையை எழுதியவர் சகோ.மைகோயம்பத்தூர்
தன் முதுகு தனக்கேதான் தெரியாது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆம். நம்முடைய தவறுகள் நமது மனதிற்கும், கண்களுக்கும் தெரியாமல் போய்விடும். மனம் ஒரு குரங்கு. அந்த மனதிற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதில் ஒரு அலாதியான பிரியம் உண்டு.
இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது தவறுகளை உணருவானேயானால், இந்த உலகம் ஒரு பரலோகமாக மாறிவிடும். தன் தவறுகளை உணரக்கூடிய இருதயம் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படுமானால், நீதிமன்றங்களே தேவையில்லை, வழக்கறிஞர்களுக்கு வேலையே இல்லாமற்ப்போய்விடும். ஒவ்வொரு குடும்பத்திலுள்ள அப்பா, அம்மா, பிள்ளைகள், கணவன், மனைவி ஒவ்வொருவரும் தங்களது தவறுகளை உணர்ந்தால், நமது இல்லம் ஒரு குட்டி பரலோகமாக மாறிவிடும். நமது சபையிலுள்ள பிஷப், போதகர், கமிட்டி அங்கத்தினர், சபை மக்கள் ஒவ்வொருவரும் தங்களது தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக்கொள்ள முன்வருவார்களானால், இந்த உலகத்தில், சபைகளில் மாபெரும் எழுப்புதல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
  உண்மையில் பார்க்கப்போனால், மக்களின் தவறுகளை அவர்களுக்கு உணர வைப்பதுதான் உண்மையான எழுப்புதல்.
   "நமது தவறுகளை நாமாகவே உணருவது". நமது தவறுகளை உணருவது மிகக்கடினமான செயல், கசப்பான அனுபவம். நமது எதிரிகளின் தவறுகளைக் கண்டுபிடிப்பது மிக எளிதானது, இன்பமானது. ஆனால் நமது தவறுகளை நாம் ஒத்துக்கொள்வது மிகக்கடினம். நமது தவறுகளை நாமாகவே உணருவது ஒரு உன்னதமான குணம், உன்னத அனுபவமும் ஆகும். நாமாகவே உணரமுடியாவிட்டாலும் நமது தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அதற்கு செவிமடுத்து அதைத் திருத்திக்கொள்ளவாவது நாம் முன்வரவேண்டும். வேதத்தில் பலரது தவறுகளைப் பல தீர்க்கதரிசிகளும், மற்றவர்களும் சுட்டிக்காண்பித்தபோது, பலர் கோபப்பட்டிருக்கிறார்கள். சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டுமிருக்கிறார்கள். உதாரணமாக தாவீது தனது தவறை நாத்தான் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டியபோது தாவீது ஒத்துக்கொண்டான். ஆனால் சவுலின் தவறைச் சாமுவேல் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டியபோது அதை சவுல் ஒத்துக்கொள்ளாமல் பூசி மெழுகுகிறான். உலகம் முழுவதும் காணப்படும் பிரச்சனையும் இதுதான்.
  உசியா இராஜா (2 நாளா 26:19) செய்த தவறை (பலிபீடத்தில் பலியிடுவது) அசரியா ஊழியக்காரன் சுட்டிக்காட்டியபோது, அவன் கோபமடைந்து அந்த ஊழியக்காரனை தாக்க முற்ப்பட்டபோது, உசியா இராஜாவின் நெற்றியில் குஷ்டரோகம் திடீரெனத் தோன்றியது. அதுவே அவனது இராஜ வாழ்க்கைக்கு முடிவாகவும், முற்றுப்புள்ளியாகவும் மாறியது.
  யெரோபயாம் என்ற (1ராஜா 13:4) இஸ்ரவேலின் (முதல்) இராஜா செய்த தவறை யூதாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி சுட்டிக்காட்டியபோது, அந்த இராஜா அவனைக் கைதுசெய்யக் கையை நீட்டினான். ஆனால் இராஜாவின் கை மரத்துப்போயிற்று. இந்தநிலையில் உடனே ராஜாதான் யாரைக் கைது செய்யும்படி கையை நீட்டினானோ, அவனைப் பார்த்து, தயவுசெய்து எனக்காக ஆண்டவரிடத்தில் வேண்டுதல் செய் என்று கெஞ்சிக்கேட்டான். உடனே தீர்க்கதரிசியும் வெறுப்படையாமல் இராஜாவிற்காக ஜெபிக்கிறான். இராஜாவின் கை முன்போல மாறிவிடுகிறது. இந்த இராஜா முதலில் கோபப்பட்டாலும், உடனே தனது தவறை உணருகிறான்.
  இதுபோலவே, உசியா ராஜாவும் மன்னிப்புக்கேட்டிருந்தால், அவனுக்கு வந்த குஷ்டரோகம் அவனைவிட்டுப் போயிருக்கும். ஆனால், அவன் தனது தவறை உணரவோ, அறிக்கையிடவோ, திருத்திக்கொள்ளவோ முன்வராத ஒரே காரணத்தால் வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாகவே பாளையத்துக்கு புறம்பே வாழ்ந்து மரித்தான். என்ன பிடிவாதம்! என்ன பரிதாபம்! தன் தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ளாத எந்த மனுஷனுக்கும் இதே முடிவுதான் ஏற்படும். இது நம் எல்லாருக்கும் ஒரு சிவப்பு அடையாள எச்சரிக்கை ஆகும்.
  உலகப்புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரான டாக்டர்.ராபர்ட் என்பவரைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி உண்டு. தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் யாராவது தவறு கண்டுபிடித்தால், அதை அவர் மனப்பூர்வமாக வரவேற்று, தனது தவறை உடனே திருத்திக்கொள்வாராம்.
  தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மனிதனை வேதம் (நீதி 9:7-9) ஞானமுள்ளவன் என்றும் அதற்கு மாறாக தனது தவறுகளை சுட்டிக்காண்பிக்கப்படும்போது கோபமடைகிறவனை வேதம் முட்டாள் என்றும் அழைக்கிறது. மற்றவர்கள் நமது தவறுகளை சுட்டிக்காண்பிக்கும்போது அதற்கு நாம் செவிமடுப்போமானால் நாம் ஞானத்தின் பாதையில் நடக்கிறவர்களாக காணப்படுவோம். ஆம்! எல்லோரும் தவறு செய்திருக்கிறோம், பாவம் செய்திருக்கிறோம். இதை வாசிக்கிற நீங்களும், இதை எழுதுகிற நானும், இதை அச்சடிக்கிற அச்சகத்தாரும், இதை போஸ்ட் பண்ணுகிறவர்களும் - எல்லோரும் தவறு செய்தவர்கள்தான். மனிதன் செய்யும் தவறுகளைப்பற்றி ஒருவர் இப்படியாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். நாம் ஒரு தவறு செய்துவிட்டால், அதை உணர்ந்து அந்த தவற்றின் மூலமாக ஒரு வாழ்க்கைப் பாடத்தை நாம் கற்றுக்கொள்வோமானால் அது ஒரு தவறு அல்ல, மாறாக அது ஒரு வழிகாட்டியாக, ஒரு ஆசானாக மாறிவிடுகிறது. ஆனால் நாம் செய்த தவறு மூலமாக பாடம் எதுவும் நாம் கற்றுக்கொள்ளத் தவறும்போதுதான், அந்தத் தவறு ஒரு உண்மையான தவறாக மாறுகிறது.
  இப்போது நாம் செய்த தவறுகளை நாம் உணருவதற்கு என்ன செய்யவேண்டும் என்று நாம் ஆராயப் போகிறோம். இது ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கசப்பாக இருக்கும். அதை ஜீரணிப்பது கஷ்டம்தான். என்ன செய்வது நமது வியாதியைப் போக்குவதற்கு டாக்டர்கள் கொடுக்கும் சில மருந்துகூடக் கசப்பாகத்தான் இருக்கிறது. அதைச் சாப்பிட்டால்தானே குணமடையமுடியும். நமது தவறுகளை நமக்கு உணர்த்துவதற்கு ஆண்டவர் பல ஏதுக்களை பல வழிமுறைகளை இந்த உலகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இந்த ஏதுக்கள் நமது தவறுகளை உணர உதவும் கண்ணாடிகள். நமது முகத்திலுள்ள சில அழுக்குகளை அடையாளம் கண்டுபிடித்து, அதை நீக்குவதற்குக் கண்ணாடி நமக்கு உதவுபதுபோல் இந்த ஏதுக்களும் நமது அக அழுக்குகளை நீக்க உதவுகிறது. அதுபோல ஒரு மாணவனின் குறைகளை ஒரு ஆசிரியர் கண்டுபிடித்து சுட்டிக்காண்பிப்பதுபோல, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில ஆலோசனைகளை, நமது தவறுகளை நாம் அறிந்துக்கொள்ள உதவும் ஆசிரியர்களாகச் செயல்படுகின்றன.
இவைகளில் சிலவற்றைக் கீழே கொடுக்கிறேன். கவனமாய் வாசியுங்கள்.
1. முதலில் நமக்கு கற்றுக்கொள்ளவிரும்பும் மனப்பக்குவம் நமக்கு தேவை. (25:4,5)
2. காலமும், நமது வயதும் நமது தவறுகளை காட்டும் கண்ணாடிகள். (தீத்து2:2, யோபு 32:7).
3. நம்மோடு பழகுபவர்களும், நமது சூழ்நிலைகளும் நமது தவறுகளை சுட்டிக் காட்டுகின்றன.
4. வேதவசனம் (எபி 4:12) நமது தவறுகளை எடுத்துரைக்கும் ஒரு உரைகல்.
5. நமது இருதயம் (1யோ 3:20) நமது உள் மனதில் உள்ள சாட்சிக்கூண்டு - நீதிமன்றம் ஆகும். விமானத்தில் உள்ள கருப்புப்பெட்டி (Black box) போல.
1. கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்:
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும், உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும் (சங் 25:4).
தவறுவது மனித சுபாவம் (To error is human) - என்னென்ன தவறு என்று நான் இங்கே பட்டியல் போட்டுக் காண்பிக்கவிரும்பவில்லை. இருப்பினும் மேலோட்டமாக, பொதுவாக சில தவறுகளை நாம் அனைவரும் அடிக்கடி செய்கிறோம். சிலருக்கு முன்கோபம் அடிக்கடி வருகிறது. கோபத்தில் ஏதேதோ பேசிவிடுகிறோம். அவசரத்தில் ஒரு பொய் சொல்லிவிடுகிறோம். பேசக்கூடாத சில வார்த்தைகளைப் பேசக்கூடாத சமயத்தில் பேசிவிடுகிறோம். இப்படி மனிதன் செய்யும் தவறுகளுக்கு எல்லையே கிடையாது. நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்பது நமக்கு நன்கு தெரியும். அந்த தவறுகளை நாம் களைய வேண்டுமானால் அதற்கு முதல்படி என்ன தெரியுமா?
மினி ஆன்மீக ஆப்ரேஷனுக்கு உங்கள் சம்மதம் தேவை.
என் வாழ்க்கையில் என்னிடத்தில் காணப்படும் தவறுகளை நான் களைய விரும்புகிறேன் என்ற விருப்பம் நமது இருதயத்தில் இருக்கவேண்டும். மருத்துவர்கள் சில ஆப்ரேஷன் செய்யவேண்டுமானால் அந்த நோயாளி தனது டாக்டரோடு ஒத்துழைக்கவேண்டும். அந்த நோயாளி எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம் என்று அடம் பிடித்து, சண்டை போடுகிறவராக இருப்பாரானால் மருத்துவரால் அந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடிக்க இயலாது. இந்த ஆப்ரேஷன் உங்கள் சரீரத்திற்குள் காணப்படும் சில கோளாறுகளை, சில வேண்டாத உறுப்புகளை நீக்கி, உங்கள் சரீரம் சீராகச் செயல்பட உதவுகிறது. அதுபோலவே உங்களது உள்ளான மனிதனிடத்தில் காணப்படும் சில தவறுகளை இங்கே சுட்டிக் காட்டப்படுவதற்கும் அதை அகற்றுவதற்கும் உங்களது ஒத்துழைப்பு மிகமிக அவசியம். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் சில தவறுகள், உங்கள் அன்றாட வாழ்க்கையின் அணுகுமுறையிலும், பழக்கவழக்கத்திலும், பேச்சிலும், செயலிலும் காணப்படும் தவறுகளையும், கோளாறுகளையும் அகற்ற முயலுவதும் ஒரு மினி ஆன்மீக ஆப்ரேஷன்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
இதற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்து, மனரீதியாக ஒப்புதல் அளித்து, ஒத்துழைக்கவேண்டும். தன் தவறுகளை உணருகிறவன் யார்? என்ற தாவீது (சங் 19:12)ல் ஆச்சரியப்படுவதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. அதாவது, தன் தவறுகளை உணருகிற மனப்பக்குவம் கொண்டவர்கள் இந்த உலகத்தில் வெகு சிலரே, அந்த சிலரில் நீங்களும் ஒருவராக இருங்கள்.
என்னிடத்தில் என்ன தவறு இருக்கிறது? நான் ஒரு பூரண புருஷன் என்று சிலர் வாதிப்பார்கள் அல்லது மனதிற்குள் எண்ணிக்கொண்டிருப்பார்கள். தங்களது தவறுகளை அறிந்துக்கொள்ள எல்லோரும் விரும்பமாட்டார்கள். ஒரு சிலருக்குத்தான் அப்படிப்பட்ட மனப்பக்குவம் இருக்கும். இதை வாசிக்கும் நீங்கள் எப்படியோ, எனக்கு தெரியாது. இச்செய்தியைத் தொடர்ந்து வாசிப்பதை நிறுத்தினாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஆனால் நீங்கள் தொடர்ந்து இச்செய்தியைப் படிப்பீர்களானால் அதற்காக வருத்தப்படமாட்டீர்கள் என்று உறுதியளிக்கிறேன்.
சாக்ரட்டீஸின் கூற்று:
உன்னை நீயே அறிவாய் என்ற சாக்ரடீசின் அறிவுரையில் உனது உண்மையான பெலத்தை மாத்திரமல்ல. உனது தவறுகளையும் பெலவீனங்களையும் சேர்த்து நாம் அறிவோம் என்ற ஆலோசனை இதில் மறைந்து காணப்படுகிறது. நம்முடைய தவறுகளை அறிய விரும்பாமல் இருப்போமானால், அதுவே மிகப்பெரிய தவறாக மாறிவிடும். நமது தவறுகளை நாம் அறிந்துக்கொள்வதின் நோக்கம் என்ன? அந்த தவறுகளுக்காக ஆண்டவர் நம்மைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி சிறையில் அடைக்கப்போகிறாரா? இல்லவே இல்லை.
அந்தத் தவறுகளைக் களைந்து ஆண்டவர் தமது இருதயத்திற்கு ஏற்றவர்களாய் நம்மை மாற்றி, எஜமானனுக்கு உபயோகமுள்ள நல்ல பாத்திரமாக நம்மை உருவாக்க விரும்புகிறார். தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அந்தத் தவறை உணர்ந்து அதை திருத்திக்கொண்டு ஆம் இந்த விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன் என்று உள்ளூர உணர்வதுதான் நமக்குள் மறைந்து கிடக்கும் தெய்வீகத் தன்மையின் ஒரு பகுதியாகும். ஒரு நல்ல மனிதனுக்கும், கெட்ட மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். நல்ல பண்புள்ள மனிதன் தனது தவறை உணருகிறான். ஆனால் கெட்ட மனிதனோ அந்த தவறை உணர மறுக்கிறான்.
  சவுல், தாவீது இந்த இரண்டு பேர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். இருவருமே தவறு செய்தார்கள். உண்மையிலேயே பார்க்கப்போனால் சவுல் செய்த தவறைப் பார்க்கிலும் தாவீது செய்த பாவம் மிகப்பெரியது. சவுல் கொள்ளையின்மேல் ஆசை வைத்து ஆண்டவர் தனக்குக் கொடுத்த கட்டளையை மீறினான். ஆனால் தாவீதோ இன்னொருவனுடைய மனைவியைக் கெடுத்தான். அதன்பின்பு அந்தப் பெண்ணை அடைவதற்காக அவளது கணவனையும் திட்டமிட்டுக்கொன்றான். தாவீது செய்தது பயங்கரமான பாவம் ஆகும்.
தாவீது Vs சவுல்:
ஆனால் இந்த இருவருக்குமுள்ள வித்தியாசம் சவுல் தான் செய்த சிறிய தவறை (தாவீது செய்த தவறோடு ஒப்பிடும்போது) சவுல் உணரவோ, ஒத்துக்கொள்ளவோ மறுத்தான். ஆனால் தாவீதோ தான் செய்த இமாலயத் தவறை - ஒத்துக்கொண்டு, அறிக்கையிட்டு, தான் செய்த தவறை உணர்ந்தான். இதன் விளைவு இந்த இருவரது முடிவுகளும் நேர்மாறாக இருந்தது. சவுல் ஆண்டவரால் கைவிடப்பட்டவனாக யுத்தகளத்தில் சாகடிக்கப்பட்டான். மாறாக, தாவீது ஆண்டவரது இருதயத்திற்கு ஏற்றவனாக ஒரு பூரண வாழ்க்கையை வாழ்ந்து முடித்தான்.
விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளரின் முதல் வேலை என்ன?
நமது தவறுகளை நாம் அடையாளம் கண்டுபிடித்து அந்தக் குறையைக் களைய முயற்சிப்பது நமது வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு நாம் எடுத்து வைக்கவேண்டிய முதல்படி என்று நான் கூறினால் மிகையாகாது. டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி-விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களைக் (Coach) கேட்டுப்பாருங்கள். விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்துவதற்கு அவர்கள் எடுக்கும் முதல்படி - ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தவறுகள், குறைகள், பெலவீனங்கள் என்ன என்பதைத்தான் முதலாவது அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள். அதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவிப்பார்கள். இதை வாசிக்கிற நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரது சமூகத்திற்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, ஆண்டவரே, என்ன ஆராய்ந்து பாரும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று சோதித்துப்பாரும், ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்கிற தவறுகளை, பெலவீனங்களை அகற்றிப்போடும் என்று ஒப்புக்கொடுக்க முன்வரவேண்டும்.
2. காலம் - நமது வயது:
முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் (யோபு 32:7). மகன் தான் செய்த தவறுகளை அவன் அப்பாவாக மாறும்போதுதான் தெரியவரும். சில தவறுகளை நமக்கு வயது வரும்போதுதான் உணரமுடிகிறது. சிறுவயதில், வாலிபப் பிராயத்தில் நாம் செய்த சில தவறுகள் - நாம் அந்தத் தவறுகளை நடப்பித்த காலகட்டத்தில் சரியாகத்தான் தோன்றியது. ஆனால் காலம் கடந்த பின்புதான் சரியென்று தோற்றமளித்த பல செயல்கள் உண்மையாகவே அவைகள் தவறுதான் என்று இப்பொழுது தெரிகிறது. இப்போது உணரமுடிகிறது. மகன் செய்யும் தவறு அந்த மகன் அப்பாவாக மாறும்போதுதான் புரியும். அந்த தந்த வயது வரும்போதுதான் சில விஷயங்களில் நமக்குத் தெளிவு ஏற்படுகிறது. நமது பார்வை சரியான கோணத்தை அடையமுடிகிறது. ஆம்! காலம் ஒரு நல்ல ஆசிரியர்.
இந்தக் கருத்தைத்தான் பவுல் அப்போஸ்தலன் இப்படியாக எழுதுகிறார். நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், யோசித்தேன். (ஆனால்)நான் புருஷனானப்போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். நான் குழந்தையாக இருந்தபோது, நான் குறைந்த அறிவுள்ளவனாக இருந்தேன். அப்பொழுது எல்லா விஷயங்களையும் கண்ணாடி மூலமாக ஒரு நிழலைப்போல பார்த்தேன். ஆனால், நான் பெரியவனான போது, எல்லா விஷயங்களையும் நேரில் முகமுகமாய்ப்பார்த்து, ஒன்றை எப்படி அறியவேண்டுமோ, அந்தப் படியே அதை அறிந்துக்கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்பட்டது என்று எழுதுகிறார் (1கொரி 13:11,12).
இளங்கன்று (கடவுளுக்குப் பயப்படும்) பயமறியாது:
  இளங்கன்று பயமறியாது என்றொரு பழமொழி என் நினைவிற்கு வருகிறது. இதனுடைய இன்னொரு அர்த்தம். இளம்வயதில், நாம் எது நல்லது, எது கெட்டது? எது பாவம்? எது புண்ணியம்? என்று அறிய இயலாது என்று நாம் கூறலாம். நான் பள்ளியில் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்பொழுது என் வாயிலிருந்து நிறைய மோசமான, முரட்டுத்தனமான, அசிங்கமான வார்த்தைகள்தான் வரும். அந்த வயதில் இப்படிப் பேசுவது தவறு என்பதை நான் கொஞ்சம்கூட உணரவில்லை. படிப்பில் என் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். அதுபோலவே குறும்பு பண்ணுவதிலும் முதலாவதாக இருந்தேன்.
அந்த வயதில் பள்ளிக்கூடத்தில் பலமுறை தண்டனையாக நான் பெஞ்சின்மேல் ஏறி நின்றிருக்கிறேன். காரணம், இது தவறு என்று நான் அப்பொழுது உணரவில்லை. பின்பு ஒரு நாள் என் உறவினர் ஒருவர் மூலமாகவும், இன்னொரு நண்பன் மூலமாகவும் இப்படிச் செய்வது தவறு என்று உணர்த்தப்பட்டேன். நன்றாகப் படிப்பதைக் காட்டிலும் நல்ல மாணவன் என்று பெயர் வாங்குவதுதான் முக்கியம். கெட்ட பையன் என்று பெயர் வாங்குவது சுலபம். ஆனால் நல்ல பையன் என்று பெயர் வாங்குவது மிகக் கடினம் என்ற ஆலோசனை என் கண்களைத் திறந்தது.
என் பெயரைக் குறிப்பிட்டு நீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குப்போனால், இந்த மாதிரி நீ பேசக்கூடாது, அது நாகரீகம் அல்ல என்ற என் நண்பனின் வார்த்தைகள். சாதாரணமாக அவன் சொன்ன அந்த சில வார்த்தைகள்தான் என் தவறை உணரச் செய்தது. அப்பொழுது எனக்கு வயது 15. பின்பு எனது 16வது வயதில் கல்லூரியில் பி.யு.சி படிக்க ஆரம்பித்தபோது, என் பேச்சு, என் பழக்கவழக்கம், அணுகுமுறை தலைகீழாக மாறியது. கெட்ட வார்த்தைகள், முரட்டுத்தனமான வார்த்தைகள் பேசுவதை நிறுத்திவிட்டு, கண்ணியமாக நடக்க ஆரம்பித்தேன். காரணம், யாரோ ஒருவர் என் தவறைச் சரியான நேரத்தில், என் இளம் வயதின் தவறுகளைச் சுட்டிக்காண்பித்தார்கள். இதை வாசிக்கிற நீங்கள் சிறுவயதாக இருக்கலாம். வாலிபராக இருக்கலாம். நடுத்தர வயதாக இருக்கலாம். வயதில் உங்களுக்கு மூத்தவர்கள் உங்களது சில தவறுகளைச் சுட்டிக்காண்பிக்க இடம் கொடுங்கள்.
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, ஆனால் ஏலியின் மகன்களுக்கு பல சூடு:
ஏலியின் குமாரர்கள்: ஏலி ஒரு பிரதான ஆசாரியன். அதாவது இன்றைய பிஷப்பிற்குச் சமானம். ஆனால் ஏலியின் குமாரர்கள் கர்த்தருக்கென்று படைக்கப்படுகிற காணிக்கையை துஷ்பிரயோகம் செய்தார்கள். இந்த ஏலியின் குமாரர்களின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரியதாயிருந்தது என்று வேதம் கூறுகிறது (1சாமு 2:17). ஏலியின் மகன்கள் காணிக்கையை கொள்ளையடித்தது மாத்திரமல்ல, ஆசாரிப்புக் கூடாரத்தில் கூடிவரும் பெண்களோடு தவறாகவும் நடந்துக்கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட ஏலி தன் பிள்ளைகளை அழைத்து என் குமாரரே, இது வேண்டாம் என்று ஆலோசனை சொன்னான். ஆனால் அவர்களோ தகப்பன் ஆலோசனைக்குச் செவிகொடுக்க மறுத்தார்கள். அதன் விளைவு அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் தீர்மானித்தார். நல்ல மாட்டிற்குத்தானே ஒரு சூடு.
  இதை வாசிக்கிற வாலிபனே, வாலிப சகோதரியே! உன்னைப் பெற்றெடுத்த அப்பா, அம்மா பேச்சை, அவர்களது ஆலோசனையை உதாசீனம் செய்கிறாயா? அவர்கள் உன் நலனுக்காகத்தான் சொல்கிறார்கள். நன்றாகப் படி, ஊர் சுற்றாதே, கெட்ட பிள்ளைகளோடு பழகாதே, வீட்டிற்கு லேட்டாக வராதே, சினிமாவிற்குப் போகாதே, புகைப் பிடிக்காதே, மதுபானம் அருந்தாதே, கெட்ட புத்தகங்களைப் படிக்காதே, கெட்ட வார்த்தைகளைப் பேசாதே, இச்சையைத் தூண்டும் வீடியோ படங்களைப் பார்க்காதே, ஏதாவது வேலைக்குப் போ, வீட்டில் சும்மா உட்கார்ந்து பொழுதை போக்கடிக்காதே, ஆலயத்திற்குப் போ, ஜெபக்கூட்டத்திற்குப் போ, பணத்தை அனாவசியமாகச் செலவழிக்காதே, பொறுப்பாக நடந்துக்கொள். இப்படியெல்லாம் உனக்கு நல்ஆலோசனைகள் கொடுக்கப்படுகிறது. அதை அசட்டை பண்ணாதே! நான் மேலே எழுதிய இதே ஆலோசனையைத்தான் சாலமோனும் கூறுகிறார். வாலிபனே, உன் மனதை நல்வழியில் நடத்து, மதுபானப்பிரியன், குடிகாரன், போஜனப்பிரியன் இவர்களோடு சேராதே - உன்னைப்பெற்ற தகப்பனுக்கும், தாயிற்கும் செவிகொடு - அவர்களது ஆலோசனைகளை அசட்டை செய்யாதே (நீதி 23:19-22). இப்படிப்பட்ட ஆலோசனைகளுக்கு நீ செவி கொடுத்தால் உன் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையும்.
ரெகொபெயாம் செய்த தவறு :
சவுல், தாவீது, சாலமோன் - இவர்கள் மூவரின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும் ஒரே தேசமாக இருந்தது. ஆனால் சாலமோனின் மகன் ரெகொபெயாம் ஆட்சிக்கு வந்தபோது 12 கோத்திரங்களும் இரண்டாகப் பிரிந்தது. அதற்கு மூலக்காரணம் ரெகொபெயாமின் வாலிப நண்பர்கள். தேசத்தில் அரசாங்க வரிப்பளுவைக் குறைக்கவேண்டுமென்று - மக்கள் குரல் எழுப்பியபோது, மக்களின்மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்கலாமா? வேண்டாமா? என்பதை ரெகொபெயாம் ராஜா முதியோரிடத்திலும், தன் வயதுள்ள வாலிபர்களிடமும் இரு சாராரிடத்திலும் ஆலோசனை கேட்டான். முதியோர் வரியைக் குறைத்துவிடு என்றும், வாலிபர்கள் வரியைக் குறைக்கக் கூடாது என்றும் ஆலோசனை சொன்னார்கள். காரணம், வரியின் வலி முதியோர்களுக்குத்தான் தெரியும் - வாலிபர்களுக்கு அல்ல. முதியோர் ராஜாவாகிய தனக்குத் கொடுத்த நல்ல ஆலோசனையைத் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்த வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டு, என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் தண்டித்தான். நான் உங்களை தேள்களினால் தண்டிப்பேன் என்ற கடினமான பதிலை மக்களுக்குக் கொடுத்தான். இந்த ஒரே காரணத்தினால் ஒன்றாயிருந்த ராஜ்யம் இஸ்ரவேல், யூதா என்று இரண்டு தேசமாகப் பிரிந்தது. (ஒன்றாயிருந்த இந்தியக் துணைக்கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிந்ததுப்போல).
வாலிபப் வயசுக்கோளாறு :
பல வாலிபர்களை நான் கவனித்திருக்கிறேன். அந்த வயதில் வாலிபப் முறுக்கில் - அவர்கள் தங்களது அப்பா, அம்மா சொல்லும் யோசனையைக்காட்டிலும், தன் நண்பர்கள் கொடுக்கும் ஆலோசனையைத்தான் வேதவாக்காகக் கருதுவார்கள். இதைத்தான் சிலர் வயசுக்கோளாறு என்று அழைக்கிறார்கள். கெட்ட குமாரனுடைய கதையில் (லூக் 15:13) இந்த வயசுக்கோளாறினால்தான் இளையமகன் அப்பாவின் வீட்டைவிட்டு வெளியேறி தான்தோன்றித்தனமாய் வாழ்ந்து, பணத்தையெல்லாம் செலவழித்துவிட்டு இறுதியில் பன்றியை மேய்த்து, அந்தப் பன்றியின் தவிடுகூடக் கிடைக்காமல் அவதிப்படுகிறான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லோராலும் கைவிடப்பட்டுத் தெருவில் அலையும்போதுதான் அவனுக்குப் புத்தி தெளிகிறது. தன் அப்பாவின் வீட்டை நினைக்கிறான். வெயிலில் அலைந்தால்தான் நிழலின் அருமை தெரியும். கெட்டபின்புதான் எட்டு புத்தி வரும் என்பார்கள். இதை வாசிக்கிற வாலிபனே! இந்தச் செய்தி உனக்குத்தான் - வாலிப முறுக்கத்தில் வயசுக்கோளாறினால் - நீ தற்சமயம் பல தவறுகளைச்செய்து கொண்டிருக்கிறாய். அந்தத் தவறுகளினால் உன் குடும்பத்தின் சமாதானம் குலைந்துவிட்டது. உன் வீட்டின் பெருமை, தன்மானம் அழிந்துகொண்டுயிருக்கிறது என்பதை உணருகிறாயா? உன் பெற்றோரின் ஆலோசனைகளுக்கு நீ செவிகொடு. அவர்கள் உனக்கு நல்லதைத்தான் சொல்லுவார்கள். உன்னைக்காட்டிலும் அவர்கள் வயதில் மூத்தவர்கள் அவர்கள் பேச்சைக்கேள். சாலமோனின் மகன் ரெகொபெயாம் பெரியவர்களின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டதினால்தான் தாவீது ஆண்ட ராஜ்ஜியம் இரண்டாக உடைந்தது. அதுபோல உன்னுடைய நண்பர்களின் ஆலோசனையின் படி தொடர்ந்து நீ நடப்பாயானால் உன் குடும்பம்கூட இரண்டாகப் பிரியும் ஒரு அபாயகரமான சூழ்நிலை உருவாகலாம். உன் குடும்பம் என்ற தாவீதின் ராஜ்ஜியத்திற்கு நீ ஒரு ரெகொபெயாமாக மாறிவிடாதே!
ஒரு சிலபிள்ளைகள் இருக்கிறார்கள். தனது திருமணத்திற்கு முன்பாகவே அப்பாவைப் பார்த்து - எனக்குரிய பங்கைத் தனியாக - இப்பொழுதே பிரித்துக்கொடுத்துவிடுங்கள் - நானாகவே - தனியாக வியாபாரம் - தொழில் செய்துக்கொள்கிறேன் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அப்பா! தம்பி, உனக்குத் திருமணம் ஆகட்டும், தங்கையின் படிப்பு, திருமணம் முடியட்டும் - அதுவரை பொறுத்திரு என்று கூறும் ஆலோசனையைக் கேட்க மாட்டார்கள். இது குடும்பத்தின் சமாதானத்தைக் குலைக்க வழிவகுக்கிறது. அப்பா சொத்தை யார் அள்ளிக்கொண்டு போகப்போகிறார்கள். அது உனக்குத்தான் வரும், அவசரப்படாதே!
  உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது, தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்று வேதம் நம்மை கடுமையாக எச்சரிக்கிறது. (மாற்கு 7:10).
3. சூழ்நிலைகளும், நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களும்:
கழுதை வழியைவிட்டு வயலிலே விலகிப்போயிற்று, கழுதையைப் பிலேயாம் திரும்பவும் அடித்தான். கழுதை சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச்சுவரோடு நெருக்கிற்று, திரும்பவும் பிலேயாம் கழுதையை அடித்தான் (இறுதியாக) கழுதை விலக வழியில்லாத இடுக்கமான இடத்தில் கழுதை படுத்துக்கொண்டது (எண் 22:23-27).
நமது வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆண்டவர் அலாரமாக பயன்படுத்துகிறார்.
சில சந்தர்ப்பங்களில் சூழ்நிலையின் வாயிலாக ஆண்டவர் நமது தவறைச் சுட்டிக்காண்பிக்கிறார் - என்ற உண்மைக்கு பிலேயாமின் கழுதை நமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. நம்மை எச்சரிப்பதற்கு, நமது தவறுகளைச் சுட்டிக்காண்பிப்பதற்கு ஆண்டவர் நம்மைச் சுற்றிலும் இருக்கிற சூழ்நிலைகளை ஒரு தூதனாக அனுப்புகிறார். வானில் கருமேகங்கள் வருமானால் விரைவில் மழை வரப்போகிறது என்று நாம் அடையாம் கண்டுக்கொள்கிறோம். அதுபோலவே நம்மை எச்சரிப்பதற்கு நமது சூழ்நிலைகள் ஆண்டவரது அலாரமாக மாறுகிறது.
  எனது நண்பர் ஒருவர் ஒரு சோகமான சம்பவத்தை என்னோடு பகிர்ந்துக்கொண்டார். நடுத்தர வயதுள்ள ஒரு சகோதரனும், சகோதரியும் ஏதோ அவசரமாக ஊருக்குப் புறப்பட்டு சென்றார்கள். அதுவும் மோட்டார் சைக்கிளில் இருவரும் 100 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு ஊருக்கு இரவு 7 மணிக்குமேல் -அவசரமாக புறப்பட்டார்கள். அருகிலுள்ள நண்பர்கள் - பலர் - அவர்களை இந்த இரவு நேரத்தில் போக வேண்டாம். அடுத்தநாள் காலையில் போகலாம் என்று தடுத்தனர். இப்படி அநேகர் தடுத்தும் புறப்பட்டுச்சென்ற அவர்கள் வழியில் ஒரு விபத்தில் சிக்கி இருவருமே விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போனார்கள். மரித்துப்போன அந்த தம்பதியினருக்கு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 2 பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவசரக்காரனுக்கு புத்திமட்டுமல்ல ஆயுசும் மட்டு.
பலர் ஒரு ஆலோசனை கொடுத்தால் அதை உதாசீனம் செய்வது - ஆபத்தில் முடியும். விபத்தில் சிக்கி மாண்டுப்போன அந்த குறிப்பிட்ட தம்பதியினரை ஆண்டவர் இரவு என்ற சூழ்நிலையைக் குறித்து நண்பர்கள் என்ற தூதர்கள் - வாயிலாக எச்சரித்தார். தவறு செய்யாதீர்கள் என்று ஆண்டவர் அலாரம் அடித்தார். ஆனால் அந்த எச்சரிப்பை அவர்கள் இருவரும் உதாசீனம் செய்தார்கள். அதன் விளைவு மரணம் - பிள்ளைகள் அனாதைகளானார்கள். என்ன பரிதாபம். ஒரு காரியத்தை நாம் செய்யும்போது அது பலருக்குத் தவறாகத் தோன்றுமானால், அதை தவிர்க்க முடியுமானால் அதை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. பலர் ஒரு விஷயத்தை தவறு என்று நமக்கு ஆலோசனை சொன்னால் அது நிச்சயம் தவறாக இருக்கவேண்டும் என்பது சட்டமல்ல, ஆனால் அக்கூற்றில் உண்மையில்லாமல் இல்லை, அது உண்மையிலேயே தவறாக இருப்பதற்குப் பல சாத்தியக்கூறுகள் உண்டு. அதை யாராலும் மறுக்கமுடியாது. சூழ்நிலை - நண்பர்கள் - உறவினர்கள் - இந்த ஏதுக்கள் மூலம் ஆண்டவர் இன்றைக்கும் நம்மோடு பேசுகிறார்.
பிலேயாம் தீர்க்கதரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்ரவேல் மக்களைச் சபிக்கும்படி பாலாக் என்ற மோவாபிய ராஜா பிலேயாமைக் கேட்டுகொண்டான். யாரையுமே, ஏன் நமது எதிரியைக்கூட நாம் சபிப்பது நல்ல செயலல்ல. இது யாவரும் அறிந்த உண்மை. இந்தச் சாதாரண விஷயம் பிலேயாம் என்ற தீர்க்கதரிசிக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாயிருக்கிறது. காரணம், இந்தப் பிலேயாம், பண ஆசையினால் உந்தித் தள்ளப்படுகின்றான்.
  பாலாக் ராஜா கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு, இஸ்ரவேலைச் சபிப்பதற்குச் சம்மதித்துப் புறப்படுகிறான். தன் எஜமான் எடுத்துள்ள முடிவு தவறானது என்பதைப் புரிந்துக்கொண்ட அவனது கழுதை தன் எஜமானனைத் தடுப்பதற்குப் பல எத்தனங்களையும், யுக்திகளையும் கையாள்கிறது. தன் எஜமானனுடைய கால்களைச் சுவரில் கொண்டுபோய் உரசுகிறது. அவனது கால் நசுங்குகிறது. பின்பு மிகவும் இடுக்கமான பாதை வழியாய்ச் செல்லுகிறது. ஆனாலும் கழுதையின் எல்லா முயற்சிகளும் தோல்வியடைகிறது. இவனாகவே உணருவான் என்று கர்த்தர் நினைத்தார் - அவன் இருதயம் கடினப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலை வாயிலாக ஆண்டவர் உரத்த குரலில் பிலேயாமோடு பேசினார். ஆனால் அவனது செவியோ மந்தமாகிவிட்டது.
  பிலேயாமிற்கு ஆண்டவர் கழுதையின் மூலமாகப் பேசியதுபோல நமக்கும்கூட சில மிருகங்கள் மூலமாக அல்லது சில நண்பர்கள் மூலமாக கர்த்தர் பேசுவார். அதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். நாகமான் என்ற சீரியா தேசத்து இராணுவ தளபதிக்கு அவன் வீட்டில் எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரப் பெண் மூலமாக ஆண்டவர் பேசினார்.
  அதுமாத்திரமல்ல, யோர்தான் நதியில் போய் நீ மூழ்கு என்று எலிசா சொன்னபோது, இந்த சீரியா தேசத்து தளபதிக்குப் பயங்கரமான கோபம் வந்து, இதற்காகவா நான் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தேன். எங்கள் தேசத்தில் இந்த யோர்தானைக் காட்டிலும் பெரிய நதிகள் இல்லையா? என்று கோபமடைந்து எலிசாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்தான்.
அந்த சமயத்தில் நாகமானின் படைவீரரில் ஒருவன் நாகமானைப் பார்த்து, தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி நீர் ஒரு பெரிய காரியத்தைச் செய்ய (உதாரணமாக 10 மலைகளைத் தாண்டி, 7 கடலைத் தாண்டி, 7 குகைகளுக்குள் சென்று ஒரு செடியின் இலையைப் பறித்துக்கொண்டுவா. இப்படிப்பட்ட கதை களைப்போல) சொல்லியிருந்தால் அதைச் செய்திருப்பீரல்லவா? அவர் சொன்னபடி யோர்தான் நதியில் போய் ஸ்நானம் பண்ணித்தான் பாருங்களேன்! இந்த எளிதான காரியத்தைச் செய்ய தயவுசெய்து தயங்கவேண்டாம் என்ற அருமையான ஆலோசனையைக்கூறி, இந்த நாகமான் செய்யவிருந்த ஒரு பெரிய தவறைத் தடுத்துவிட்டான்.
  தக்க சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழத்திற்கு சமானம் (2ராஜா 5:1,14).
இங்கே, பார்த்தீர்களா! ஒரு பெரிய தேசத்தின் Chief of Army இராணுவ தளபதியின் தவறை ஒரு சாதாரண சிப்பாய் Soldier சுட்டிக்காட்டுகிறான்.
தாவீதின் தவறை சுட்டிக்காட்டிய அபிகாயில்:
தாவீது சவுலுக்குத் தப்பியோடி வனாந்திரங்களிலும், காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்தக்கால கட்டத்தில் தாவீது அநேகருக்கு கூர்கா வேலை செய்து தன் பிழைப்பை நடத்திவந்தான். அவர்களில் நாபால் என்பவனும் ஒருவன். நாபாலின் ஆடுகளையும், மாடுகளையும் கொள்ளைக்காரக் கும்பலிருந்து இரவும், பகலும் பாதுகாத்தான். அதற்குக் கூலி கேட்டு சிலரை நாபாலிடம் அனுப்பினான். ஆனால் அந்த நாபால் கூலி கொடுப்பதற்குப் பதிலாக அவர்களைக் கேவலமாகப் பேசி, திட்டி, வெறுங்கையோடு திருப்பி அனுப்பிவிட்டான்.
அதைக் கேட்ட தாவீது கோபமடைந்து, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல நாபாலின் வீட்டை நோக்கி, அவனைப் பூண்டோடு அழிக்க வேகமாக வந்துகொண்டிருந்தான். இதைக் கேள்விப்பட்ட நாபாலின் மனைவி அபிகாயில், ஞானமுள்ள ஸ்தீரி தன் வீட்டைக்கட்டுகிறாள் என்ற வசனத்தின்படி தன் வீட்டிலுள்ள சில பொருட்களையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு தாவீதின் கோபத்தைத் தணிக்கப் புறப்பட்டாள். அவனை வழிமறித்து அவன் காலில் விழுந்து தன் கணவன் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டு காணிக்கை படைத்தாள். அன்றைய நாளில் தாவீது செய்யவிருந்த மாபெரும் இமாலயத் தவறை அவள் தடுத்துவிட்டாள். கோபக்காரனுக்கு (ஆத்திரகாரனுக்கு) புத்திமட்டு, கோபம் கண்களை மூடும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் தாவீதிற்கு மாத்திரமல்ல, நமக்கும் அடிக்கடி நடக்கும். அந்தசமயத்தில் தாவீது அபிகாயிலைப் பார்த்து, என்னைச் (எச்சரிக்க)சந்திக்க உன்னை அனுப்பிய இஸ்ரவேலின் தேவனுக்கு நன்றி. தேவையற்ற இரத்தம் சிந்தி, பழிவாங்காமல் என்னைத் தடைசெய்த நீ ஆசீர்வதிக்கப் படுவாயாக(1சாமு 25:2-35) என்று சொல்லி நன்றி கூறுகிறான். 32ம் வசனத்தில் நன்றியை கர்த்தருக்கும் கூறுகிறதை கவனியுங்கள். தன் பெரும் தவறிலிருந்து காப்பாற்ற ஒரு பெண்ணை அனுப்பி ஆலோசனை கொடுத்தது கர்த்தர் என்று தாவீது அறிந்துக்கொண்டான்.
நீ கோபமாயிருக்கையில் உங்கள் மனைவி ஏதாவது ஆலோசனை சொன்னால், அதைப் பொறுமையோடு கேளுங்கள். அந்த ஆலோசனை உங்கள் பணம், பிரயாசம் வீணாக விரயமாவதைத் தடுக்கமுடியும். ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழத்திற்கு சமானம். மெதுவான, சாந்தமான, பொறுமையான பதில், உக்கிர கோபத்தைத் தணிக்கும் என்ற சாலமோனின் வார்த்தை (நீதி 15:1) அபிகாயில் - தாவீதின் சந்திப்பில் 100க்கு 100 அப்படியே நிறைவேறியது. இதை வாசிக்கிற நீங்களும்கூட கோபத்தின் உச்சியில் செய்யவிருக்கும் இதுபோன்ற உங்கள் இமாலயத் தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காண்பிப்பதற்குத் தயவுசெய்து இடங்கொடுங்கள். எவரது யோசனையையும் கேட்பதற்கு நான் தயாராக இல்லை - என்று கூறவேண்டாம். அப்படி நீங்கள் சொன்னால் நீங்களே உங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்வதற்குச் சமானம் - என்பதை மறக்கவேண்டாம்.
தாவீதின் தவறைச் சுட்டிக்காட்டிய நாத்தான் தீர்க்கதரிசி:
தாவீது செய்த இன்னொரு பெரிய தவறு - உரியாவின் மனைவியை அடைவதற்காக, திட்டமிட்டு அவளது கணவனை யுத்தகளத்தில் மர்மமான முறையில் கொன்றுவிட்டான். இந்தத் தவறைச் சுட்டிக்காண்பிக்க நாத்தான் என்ற தைரியமுள்ள தீர்க்கதரிசி, தாவீதின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான். அங்கு தாவீதிற்கு ஒரு உவமையைக்கூறிவிட்டு, நீயே அந்த மனுஷன் என்று கூறுகிறான். கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்புச் செய்தாய். ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை அடைவதற்கு அவனை யுத்தகளத்தில் கொன்றுபோட்டாய். பட்டயம் உன் வீட்டை விட்டு விலகாது. அடுத்தவன் மனைவியை நீ ஒளிப்பிடத்தில் கெடுத்தாய். அதேபோல உன் மனைவிகளை இன்னொருவன் சூரிய வெளிச்சத்திலே, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகக் கெடுப்பான் என்று சாபமிடுகிறான். என்ன பயங்கரமான வார்த்தைகள் இது! ஒரு சாதாரண தீர்க்கதரிசி ஒரு மாபெரும் மன்னனைப் பார்த்து அவனது தவறுகளைப் பகிரங்கமாக, பச்சை பச்சையாக எடுத்துச் சொல்கிறான். அதுமட்டுமல்லாமல், அவனுக்கு தண்டனையை சாபமாக அறிவிக்கிறான். என்ன துணிச்சல் இது! இந்த நாத்தானுக்கு என்ன தைரியம்! இந்த இடத்தில் நாத்தான் தீர்க்கதரிசி மார்டின் லூத்தரையும் மிஞ்சிவிட்டார்.
இந்த மாதிரிப் பெரிய பதவியில் இருப்பவர்களது தவறுகளைப் பகிரங்கமாக யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை இரகசியமாக கொன்றுவிடுவார்கள் அல்லது வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால் தாவீதோ அப்படிச் செய்யவில்லை. இந்த மாதிரிச் சூழ்நிலைகளில்தான் யாராவது நாம் செய்த உண்மையான தவறுகளைச் சுட்டிக்காண்பிக்கும்போதுதான் - அந்த மனிதனின் உண்மையான குணம் - மறைந்து கிடக்கும் சுபாவங்கள் வெளிப்படுகிறது. இங்கே தாவீது நாத்தானின் கடினமான வார்த்தைகளைக் கேட்டவுடனே தனது தவறுகளை உணருகிறான், ஒத்துக்கொள்கிறான், உடனே தாமதிக்காமல் மன்னிப்பு கேட்கிறான்.
இதுதான் தாவீதிற்கும் - சவுலுக்குமுள்ள வித்தியாசம். சவுல் செய்த தவறைக் காட்டிலும் தாவீது செய்த தவறு மகாப் பெரியது. ஆனால் தாவீது தனது தவறை ஒத்துக்கொண்டான். மாறாக சவுலோ தனது தவறை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் தவறை நியாயப்படுத்துகிறான். அமலேக்கியரோடு யுத்தம் செய்து எல்லாவற்றையும் பூண்டோடு அழிப்பதற்குப் பதிலாக முதல் தரமான ஆடுகளையும், மாடுகளையும் தப்பவிட்டான். அவைகள் ஆண்டவருக்குக் காணிக்கை கொடுப்பதற்கு என்று கூறி தனது தவறைப் நியாயப்படுத்த முயற்சிக்கிறான்.
நீங்களும் நானும் எப்படி இருக்கிறோம்? சவுலைப் போலவா? அல்லது தாவீதைப் போலவா? நமது தவறுகளை உணர்ந்து, ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டு நமது வாழ்க்கையில் முன்னேறுவோம். உங்களது தவறை உங்கள் நண்பர்களோ, உறவினரோ, மனைவியோ, போதகரோ சுட்டிக்காட்டினால், அதை ஒத்துக்கொள்ளுங்கள். அது மாத்திரமல்ல, உங்கள் சூழ்நிலையின் மூலமாகக்கூட ஆண்டவர் உங்களது தவறுகளைச் சுட்டிக்காண்பிக்க முடியும். அதற்கும் கீழ்படிய இடம் கொடுங்கள்.
4. வேதவசனம் நமது தவறுகளை உணர்த்தும்:
இந்த வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, அவர்கள் இருதயத்திலே குத்தப்பட்டார்கள் (அப் 2:37).
நீதியைக் குறித்தும், இச்சையடக்கத்தைக் குறித்தும் பவுல் பேசியபோது, பேலிக்ஸ் பயந்துபோய், இப்பொழுது நீ போகலாம். எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன் என்றான். (அப் 24:25).
அப்பொழுது பேதுரு, சேவல் கூவுகிறதற்கு முன்பு, நீ என்னை 3 தடவை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தைகளை நினைத்து, வெளியே போய் மனங்கசந்து அழுதான். (மத் 26:75).
வேதவசனம் ஒருமுகம் பார்க்கும் கண்ணாடி, நமது முகத்தில் இருக்கும் வடுக்களை, அழுக்குகளை நாம் பார்க்க வேத கண்ணாடி நமக்கு உதவுகிறது. அதை உடனே நீக்க நாம் முயலவேண்டும். ஆண்டவரது வார்த்தையானது முகம் பார்க்கும் கண்ணாடி என்ற உண்மையில் மற்றொரு உண்மை மறைந்திருக்கிறது. அதாவது கண்ணாடியில் நமது முகத்தை நாமாகவே பார்க்கிறோம். மற்றவர்கள் சொல்லி அல்ல.
வீட்டில், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவும்போது, கடைகளில் இப்படி பல இடங்களில் வைக்கப்பட்ட கண்ணாடியில் நமது முகத்தை, தோற்றத்தை நாமாகவே பார்க்கிறோம். இது எதைக் குறிக்கிறது? நாமாகவே வேத வசனத்தை நமது வீட்டில் தனியாக வாசிக்கும்போது, தியானிக்கும்போது, அந்த வசனங்கள் மூலமாக நமது தவறுகளை உணருவது, இது நல்லதொரு பழக்கம். நாமாகவே வேத வசனத்தை வாசித்து அதன் மூலமாக நமது தவறுகளை உணருவது மிக உன்னதமானது.
ஒரு சீனா தேசத்துப் பெண்மணி வேதத்தை வாசித்துவிட்டு "ஐயோ, இதை நான் வாசிக்கும்போது அது என்னை உதைக்கிறது" என்று கூறினாள்.
நாஸ்திகனை மாற்றியது ஆண்டவரது வார்த்தை:
தன் வாழ்நாள் முழுவதும் நாஸ்திகனாக வாழ்ந்த எட்வின் ரஷ்வோர்க் என்ற மனிதன் ஒருநாள் வேதாகமத்தை வாசிக்க முடிவு செய்தானாம். ஒரு மணி நேரம் படித்துவிட்டு, தன் மனைவியைப் பார்த்து, இந்த பைபிள் உண்மையாய் இருக்குமானால், நாம் அனைவருமே தவறு செய்தது உண்மை. இன்னும் சில நாட்கள் படித்துவிட்டு, நாம் அனைவருமே தவறு செய்தவர்கள் மாத்திரமல்ல, நம் எல்லாருக்கும் தண்டனை உறுதி என்று கதறினானாம். அதன்பின் சிலநாள் கழித்து இன்னும் சிலநாட்கள் வேதத்தை படித்துவிட்டு, தன் மனைவியைப் பார்த்து, இந்த பைபிள் உண்மையாயிருக்குமானால் நாம் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. நம்மை ஆண்டவர் இரட்சிக்கமுடியும் என்று மகிழ்ச்சியோடு கூறினானாம். பார்த்தீர்களா? வேதவசனம் எப்படி மனிதர்களோடு படிப்படியாக கிரியை செய்கிறது?
  நமது வீட்டில் மாத்திரமல்ல, நாம் ஆலயத்திற்கோ அல்லது இன்னொரு வீட்டிற்கோ, பைபிள் சம்பந்தமான இன்னொரு இடத்திற்கோ நாம் செல்லும்போது அங்கு தொங்கவிடப்பட்டிருக்கும் வேத வசனங்கள், பைபிள் காலண்டர்கள் - இவைகள் மூலமாகக்கூட (ஹோட்டலில் கைகழுவும் இடத்தில் கண்ணாடியில் பார்ப்பதுபோல) நமது முகத்தை, சாயலை, நமது அழுக்கைப் பார்க்கமுடியும். நமது வீட்டை நாமாகவே துடைத்து சுத்தமாக்கிக் கொள்ளுகிறோம். நமது பாத்திரங்களை கழுவிக்கொள்ளுகிறோம். துணிமணிகளை சலவை செய்துக்கொள்கிறோம். இவை அனைத்துமே நம்மை நாமே - சுத்தம் செய்துக்கொள்ளும் ஒரு வழக்கம். அதுபோலவே நமது ஆன்மாவையும், வேதவசனத்தின் மூலமாக நாமே வாசித்து, தியானித்து நம்மை சுத்தம் செய்துக்கொள்வது நல்லதொரு பழக்கம். நீங்களாகவே உங்கள் தவறுகளை பைபிள் மூலமாகப் பார்க்கத்தவறினாலோ அல்லது தவறுகளை களைவதற்குச் சண்டித்தனம் பண்ணினாலோ, நமது தவறுகளைக் களைவதற்கு ஆண்டவர் மாற்றுவழிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அடுத்தவர்களது பிரசங்கத்தின் வாயிலாக ஆண்டவரது வசனம் வல்ல சம்மட்டியாக வெளிப்பட்டு நம்மை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிடும்.
  வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே (சங் 119:9).
  உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம் (யோ 17:17).
5. நமது இருதயமே நம் தவறுகளை உணர்த்தும்:
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்தைப் பார்க்கிலும் பெரியவராயிருக்கிறார் (1யோ 3:20). நமது தவறுகளை நமக்கு உணர்த்துவதற்கு ஆண்டவர் உபயோகப்படுத்தும் இன்னொரு உபகரணம் (Instrument) நமது மனசாட்சி. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் - என்ற பழமொழி இதற்கு ஒருசாட்சி. பல சந்தர்ப்பங்களில் யாருமே நம்மைப் பார்க்காதபோது நமது தனிமையில் நமது மனசாட்சி படும் பிரசவ வேதனைகளை மனசாட்சி நிமித்தம் நாம் வாதிக்கப்படும் காட்சிகளை யாராலும் பார்க்கமுடியாது. மனசாட்சியை கேமரா மூலம் காவல்துறையினர் படம்பிடிக்க முடியுமானால் இன்றைக்கு நீதிமன்றங்களே அவசியமில்லாமற் போய்விடும். நமது சரீரத்தில் ஓடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதற்கு ஆண்டவர் நமது இருதயத்தில் தமணி என்ற நரம்பு உறுப்பை வைத்திருக்கிறார். நாம் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப்படுத்த நுரையீரலை வைத்திருக்கிறார். இதுபோல நமது சரீரத்தில் ஏற்படும் பல கோளாறுகளை, தவறுகளைச் சரிசெய்வதற்கு ஆண்டவர் பல உறுப்புகளை நமது சரீரத்திற்குள்ளேயே உண்டாக்கி, இத்தவறுகள் அனைத்தும் தானாகவே களையப்பட்டு சரி செய்துகொள்ளும் ஒரு இயந்திரத்தை (Self Correcting Mechanism) நமது சரீரத்திற்குள்ளே வைத்திருக்கிறார். அதுபோல செயல்படும்படியாகத்தான் மனிதன் தான் செய்யும் தவறுகளை, பாவங்களைச் சரிசெய்யும் நோக்கத்தோடுதான் இந்த மனச்சாட்சியையும் ஆண்டவர் மனிதனுக்குள் சிருஷ்டித்தார். ஆனால் மனிதன் இந்த மனச்சாட்சியை ஒரு பொம்மையாக, கைப்பாவையாக மாற்றிவிட்டான். ஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஏமாற்றலாம். ஆனால் அவனது மனச்சாட்சியை ஏமாற்றமுடியாது.
ஆண்டவர் மனிதனைச் சிருஷ்டித்தபோது அவனுடைய மனுஷீகத் தன்மையுடன் தமது தெய்வீகத் தன்மையையும் கலந்து உருவாக்கினார். மனுஷனுக்குள் ஆண்டவர் தனது தெய்வீகத் தன்மையில் கொஞ்சத்தை கடன் கொடுக்க எண்ணி, அவனுக்குள் மனச்சாட்சி என்ற தனது தெய்வீக முத்திரையைப் பதித்துவிட்டார். வெளி உலகிற்கு அவன் பச்சோந்தியைப்போல பல வேஷங்களைப் போட்டாலும், அந்த மாறுவேடங்கள் வெளி உலகிற்குத்தான். ஆனால் அவனது உண்மையான சுயரூபம் என்ன என்பது அவனது மனச்சாட்சிக்கு நன்கு தெரியும். மற்றவர்களை ஏமாற்றலாம். முடிந்தால் உலகத்தையே ஏமாற்றலாம். ஆனாலும் அவனது உண்மையான மனச்சாட்சியை ஒரு மனிதனால்கூட ஏமாற்றவே முடியாது. இந்த மனச்சாட்சி என்பது விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள Black Box-போல, விமானம் விபத்துக்கு உள்ளாகிவிட்டால், இந்த Black Box-ற்குள் விபத்திற்கு சற்றுமுன் என்னென்ன நடந்தது என்பதை அது பதிவு செய்து வைத்திருக்கும், அதை யாராலும் தொடமுடியாது. விபத்திற்குப்பின்பு அதை எடுத்து அதற்குள் பதிவுசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் விசாரணை நடக்கும். அதுபோல ஆண்டவர்கூட ஒவ்வொரு மனிதனையும் நியாயம் விசாரிக்கும்போது, ஒவ்வொரு மனிதனுடைய மனச்சாட்சி - என்ற Black Box-ஐ வைத்துக்கொண்டு விசாரணை நடத்துவாரோ என்று நான் யோசிக்கிறேன். நமது மரணத்திற்குப்பின்பு, அந்த மனிதன் என்ற விமானத்திற்குள் இருந்த மனச்சாட்சி ஆண்டவரது கரத்தில் ஒப்படைக்கப்படும் என்று நம்புகிறேன்.
விபச்சாரத்தில் ஈடுப்பட்ட ஒரு பெண்ணை கையும் களவுமாகப் பிடித்து பரிசேயரும், சதுசேயரும் இயேசுவினிடத்தில் கொண்டு வருகிறார்கள். இந்த பெண்ணைப்பற்றி என்ன சொல்லுகிறீர்? என்று தன்னைக் கேள்வி கேட்டு நச்சரித்த அந்த மனிதர்களைப் பார்த்து இயேசு, உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள்மேல் கல்லெறியட்டும் என்று கூறுகிறார். இந்த வார்த்தையைக் கேட்டவுடனே, அவர்களது மனச்சாட்சியால் குத்தப்பட்டு பெரியோர் தொடங்கி சிறியோர்வரை ஒவ்வொருவராக அந்த இடத்தைவிட்டுக் கடந்து போய்விட்டார்கள் (யோ 8:3-9). இந்த சம்பவத்திலும் ஒவ்வொரு மனிதனும் தனது மனச்சாட்சியினால் கடிந்துக்கொள்ளப்பட்டு, தனது தவறுகளை உணர்ந்துபோய்விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாபால் இருதயம் வாதிக்கப்பட்டது:
நாபால் தான் தாவீதிற்கு செய்நன்றி மறந்த துரோகச்செயலை எண்ணி எண்ணி, அவனது மனம் அவனைப் பத்து நாட்களாக வாதித்தது. அவனது இருதயம் அவனை வாதித்த காரணத்தினால் அவன் இறுதியாக செத்துப்போனான் (1சாமு 25:38). இச்சம்பவத்தில் இன்னொரு உண்மையையும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இந்த நாபால் தனது இருதயத்தில், தான் தாவீதிற்குச் செய்தது தவறு என்று இவன் உணர்ந்தபோது, இவன் என்ன செய்திருக்கவேண்டும்? எழுந்து தாவீதினிடத்திற்குச் சென்று, என்னை மன்னியும் என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டிருந்தால், நிச்சயமாகத் தாவீது அவனை மன்னித்திருப்பான். அவன் செத்திருக்கமாட்டான். அதற்கு மாறாக அவனது இருதயத்தைக் கடினப்படுத்தி, கல்லாக மாறியபோது அவன் மாரடைப்பினால் செத்துப்போனான். சிலருக்கு தன் குற்ற மனச்சாட்சியினால் வாதிக்கப்பட்டு என் மனைவிக்கு அல்லது என் புருஷனுக்கு துரோகம் செய்துவிட்டேனே என்று கவலைபட்டு அதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரித்தவர் பலர். இதுபோலவே, நாம் சில தவறுகளைச் செய்த பின்பு, சில நாட்கள் கழித்து நாம் செய்தது தவறு என்று நமது இருதயம் கடிந்துக்கொள்ளுமானால், உடனே நாம் எழுந்து சென்று யாரிடம் தவறு செய்தோமோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. இதை விரைவில் செய்யவேண்டும். அதை நாம் செய்யத் தவறும்போது, அடிக்கடி கடிந்துக்கொள்ளப்பட்டும் தனது இருதயத்தைக் கடினப்படுத்துகிறவன், சடுதியில் சகாயமின்றி நாசமடைவான். (நீதி 29:1) என்ற வேதவாக்கியம் நம்மில் நிறைவேறிவிடும். சடுதி மரணம் ஜாக்கிரதை! இயேசுவே என்று கூப்பிடக்கூட நேரம் கிடைக்காது. சடுதி மரணம் என்று வேதம் எச்சரிக்கிறது. ஜாக்கிரதை! இதுதான் நாபாலின் வாழ்க்கையிலும் நடந்துவிட்டது. அவனது இருதயம் கல்லைப்போலாகிச் செத்துவிட்டான். அதாவது அவனுக்கு இருதய மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு இறந்துவிட்டான். இப்படிப்பட்டவர்களின் மனச்சாட்சியை சூடுண்ட மனச்சாட்சி என்று வேதம் கூறுகிறது. (1தீமோ 4:1). அதாவது திருந்துவதற்கு மனமில்லாமல் ஆண்டவரிடத்தில் சூடு வாங்கியவர்கள். அதற்கு மாறாக நமது மனச்சாட்சி கடிந்துகொள்ளப்பட்டு (யோ 8:9) பின்பு நமது தவறுகளைத் திருத்திக்கொண்டு நல்மனசாட்சியுள்ளவர்களாய் (அப் 23:1) வாழ நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
செய்தி சுருக்கம்:
நமது தவறுகளை நாம் அடையாளம் கண்டுபிடித்து, அதை திருத்திக் கொள்ளவேண்டும் என்ற செய்தியை இதுவரை சிந்தித்தோம். இதில் 5 வழிகளைப்பற்றி ஆராய்ந்தோம்.
  முதலாவது, நமது தவறுகளை நாம் அறிந்துக்கொள்ளும் விருப்பம் நமக்கு இருக்கவேண்டும்.
  இரண்டாவதாக காலமும் நமது வயதும் நமது தவறுகளை எடுத்துச் சொல்லும் என்பதை மறந்துவிடாதீர்கள். முதியோரின் ஆலோசனைக்குச் செவிமடுக்க உங்களை ஒப்புக்கொடுங்கள். நீங்கள் வாலிபராக அல்லது வயதில் சிறியவராக இருப்பின், உங்கள் தவறுகளைத் தவிர்க்க, உங்களது பெற்றோரின் ஆலோசனையைக் கேளுங்கள். வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டு ராஜ்ஜியத்தையே இரண்டாகப் பிரித்த ரெகொபெயாம்போல நீங்களும் போய்விடவேண்டாம்.
  மூன்றாவதாக உங்களது தவறுகளை அடையாளம் கண்டுபிடிக்க உதவும் உபகரணம் உங்களோடு இருப்பவர்கள், உங்களோடு பழகுபவர்கள், உங்களது சூழ்நிலைகள், பிலேயாமின் காலை கழுதை சுவற்றில் நசுக்கியதை மறக்கவேண்டாம். சூழ்நிலையின் மூலம் வரும் தடைகளில் எது ஆண்டவர் போடும் தடை, எது பிசாசு போடும் தடை என்று பகுத்தறியப் பழகுங்கள். நெகேமியா அலங்கத்தைக் கட்டியபோது சூழ்நிலைகள் பயங்கரத் தடையாக இருந்தது. இப்படிப்பட்ட தடைகள் போலித்தடைகள் - பிசாசின் தடைகள், ஆனால் பிலேயாம் இஸ்ரவேல் மக்களை சபிக்கச் சென்றபோது கழுதையின் மூலமாக வந்த தடை பிலேயாமிற்கு அவனது தவறுகளை உணர்த்துவதற்கு ஆண்டவர் அனுப்பிய உண்மையான தடை.
  நான்காவதாக ஆண்டவர் வசனத்தை நாம் வாசிக்கும்போது ஆண்டவர் நமது தவறுகளை உணர்த்துவார். இயேசு தன்னிடம் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்து, பேதுரு மனங்கசந்து அழுதான். கர்த்தருடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம், வல்ல சம்மட்டி. அடுத்தமுறை வேதத்தை வாசிக்கும்போது, ஆண்டவரே, என் தவறுகளை எனக்கு வசனத்தின்மூலம் உணர்த்தும் என்று ஜெபியுங்கள்.
  கடைசியாக உங்கள் தவறுகளை அறிவதற்கு வேறு எங்கும் அலையாமல், உங்களுக்குள்ளே குடியிருக்கும் மனச்சாட்சியைக் கேளுங்கள். உங்கள் மனச்சாட்சி நீங்கள் செய்யப்போகும் ஒரு செயலையே தவறு என்று சிவப்பு வெளிச்ச அடையாளத்தைக் காண்பித்தால் அதைச் செய்யாதீர்கள். அப்படிப்பட்ட நல்மனச்சாட்சியை உங்களுக்கு கொடுக்கும்படியாக ஆண்டவரிடத்தில் கேளுங்கள்.
  நம்மைநாமே நிதானித்து அறிவோமானால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம் (1கொரி 11:31).
  நான் சில சமயத்தில் முட்டாளாக நடந்திருக்கிறேன் என்று ஒப்புக்கொள்கிறவர்கள்தான் உண்மையான ஞானிகள். நம்முடைய தவறுகள் நமது ஆசிரியர்களாக மாற இடம் கொடுங்கள்.
  தன் பிழைகளை உணருகிறவன் யார்? (சங் 19:12).
  என் சகோதரரே, நாம் எல்லோரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம் (யாக் 3:1,2).
  நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். எனக்கு உபதேசம் பண்ணுங்கள். (அப்பொழுது) நான் மவுனமாயிருப்பேன். (யோபு 6:24).

Post a Comment

1 Comments

  1. பயனுள்ள நல்ல பதிவு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete