Header Ads Widget

Responsive Advertisement

உங்கள் உண்மையான விரோதியை அறிந்து கொள்ளுங்கள்

அன்பானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரின் முந்தையபதிவில் ஆத்துமாவைக்குறித்துப் பார்த்தோம் இந்த பதிவில் அந்த ஆத்துமாவை இடைமறித்து ஏமாற்றும் ஒரு சக்தியைப்பற்றிப் பார்ப்போம். பொதுவாக ஒருமனிதனைப்பார்த்து உங்கள் விரோதி யார் என்று கேட்டால் சிலர் நான் ரொம்ப நல்லவன் எனக்கு விரோதிகள் இல்லை என்றும், சிலர் ஒரு குறிப்பிட்ட நபரைச் சொல்லி அவர்தான் விரோதி என்றும் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் நமக்கு விரோதி மனிதர்கள் அல்லர், நம்முடைய விரோதி நம் கண்களுக்கு தெரியமாட்டான் ஆனால் நம் மனதோடு பேசுவான். நம் மனசாட்சி நியாயம் இல்லை என்று சொல்லுகிறதைக் கூட நம்மை செய்யச் சொல்லி தூண்டுவான். நம்மை தீமையான செயல்களுக்கு இட்டுச்சென்று வருந்த வைப்பான், அல்லது கஷ்டத்தில் மாட்டிவிட்டுவிடுவான். அவன் யார் ஆம் அவனைக்குறித்தே இனிவரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம்.

மனிதர்களுக்கு எதிரியை அடையாளம் காண முடியாவிட்டால் அவனைவிட்டு விலகுவது எப்படி சாத்தியமாகும்? ஆகவே அந்த எதிரியைக்குறிந்து நாம் அறிந்து கொள்வது அவசியம். பொதுவாக நாம் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கும் போது நம்முடைய மனம் சிந்திப்பதை கவனித்திருக்கிறீர்களா? நம் மனம் சிந்திக்கும் போது மனசாட்சி நன்மை தீமைகளை நமக்கு எச்சரித்துக் கொண்டிருக்கும் ஆனால் அங்கே மூன்றாவதாக சம்பந்தமே இல்லாமல் ஒருவன் நுழைந்து 100% தீமையான ஆலோசனைகளை தொடர்ந்து நமக்கு சொல்லிக்கொண்டே இருப்பான். மனசாட்சியை பேசவிடாமல் தடுக்க முயல்வான். ஒருவேளை மனம் அந்த பேச்சுக்கு செவிகொடுக்குமானால் அதோடு உரையாட ஆரம்பித்துவிடுவான். மாத்திரமல்ல தீமையை விதைக்க ஆரம்பித்துவிடுவான். அப்படி செவி கொடுக்கும் மனிதன் நிச்சயமாக தீமையான காரியங்களை செய்ய துணிந்து விடுவான்.


இந்த தாக்குதல் யாரொ ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு நடப்பதல்ல உலகில் பிறந்த யாராக இருந்தாலும் அவனுடைய தாக்குதலில் இருந்து தப்ப முடியாது இனி அவனுடைய குண்நலன்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பொய்யன்
அந்த விரோதி ஒரு பொய்யன் மாத்திரமல்ல பொய்களுக்கு தகப்பனாகவும் இருக்கிறான் அவன் பேசும் போது சொந்தத்தில் எடுத்து பொய் பேசுகிறான். அதாவது அவன் நம் மனதில் முதலாவது விதைப்பது பொய் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக‌ நீ அந்த பணத்தை திருடிவிடு, அவனைக் கொலை செய்துவிடு, அவனை அடி, மற்றவர்களைத் துன்பத்துக்குள்ளாக்கு, இதன் மூலம் உனக்கு நன்மை உண்டாகும் என்பது போன்ற பொயகளை அவிழ்த்து விடுவான். நாம் அவைகளுக்கு செவி சாய்க்கும் போது அதை நம்பி அவன் சொல்வது போல செய்து பிறகு தீமையில் சிக்கிக்கொள்கிறோம்.

ஆகவே அந்த எதிரி நமக்கு சொல்லும் ஆலோசனைகள் முதலில் பொய்யானவைகள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.



திருடன்
அந்த எதிரி ஒரு திருடன் ஆவான், அவன் நம் மனதோடு பேசி தீமையானவைகளை விதைத்து நம்முடைய சந்தோஷத்தையும் சமாதணத்தையும் திருடிக்கொண்டு போய்விடுவான். நாம் விழித்திராவிட்டால் நிச்சயமாக நாம் நம்முடைய எல்லாவற்றையும் அவனிடம் பரிகொடுத்துவிடுவது அதிக நிச்சயம், பொதுவாக அந்த விரோதி நம்முடைய மனதை கிட்ட இருந்து நம்மை ஆராய்ந்து நம் மனதை முதலில் அறிந்து கொள்வான். அதன் பின்பு நாம் பெவவீணமாக இருக்கும் இடத்தை அறிந்து அந்த இடத்தில் நம்முடைய மனதில் பேசத் தொடங்குவான். உதாரணமாக ஒரு மனிதன் பணம் சம்பாதிப்பதில் பெலவீணத்தை அந்த எதிரி தெரிந்து கொண்டால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதை அந்த மனிதனுக்கு போதித்து அவனை சிக்கலில் சிக்க வைப்பான். அல்லது ஒரு மனிதனுக்கு பெண்ணின் மீது கொண்ட மோகம் பெலவீணமாக இருந்தால் அந்த மனிதனை கொலையில் ஈடுபடுமளவு அந்த எதிரி தூண்டிவிடுவான். இதற்கான ஒரே நோக்கம் நம்முடைய சந்தோசத்தையும் சமாதாணத்தையும் திருடிவிடுவது ஆகும்.


குற்றம் சாட்டுகிறவன்
அந்த எதிரியின் மற்றுமொரு தந்திரம் குற்றம் சாட்டுவது ஆகும், அவன் தவறுகளைச் செய்யத் தூண்டுவது மட்டுமல்லாமல் அதன் பின்பு அதற்காக மனிதர்கள் மனசாட்சியால் குத்தப்பட்டு மனம் வருந்தும் போது உடனே வந்து குற்றம் சாட்டுவான். ஏன் இப்படி செய்தாய், போச்சு இனி எல்லாம் முடிந்தது இனி நீ வாழ்ந்து பிரயோஜனம் இல்லை பேசாமல் தற்கொலை செய்து கொள். இனி நீ வாழ்ந்து என்ன பயன்? என்று தூண்டுவான் மாத்திரமல்ல தொடர்ந்து வந்து குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதால் மனிதர்கள் மனதையும் உடலையும் பெலவீணமாக்கும் வேலையைச் செய்வான். இப்படி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகுபவர்கள் சோர்ந்து பெலவீணப்பட்டு இறுதியில் பயனற்றுக் போய்விடுவர், அல்லது போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிவிடுவர். இந்த குற்றம் சாட்டுதலும் ஒரு பொய் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.


சோதனைக்காரன்.
அடுத்ததாக அந்த விரோதி ஒரு மனிதனிடம் செய்வது சோதனைகளைக் கட்டவிழ்ப்பது ஆகும். சோதனைகள் என்பது அவனுடைய ஆலோசனைகளை நாம் கேட்க வேண்டும் என்று நிர்பந்திப்பது ஆகும். தொடர்ந்து நம்மிடம் வந்து நம்மை அந்த சோதனைக்குள்ளாக அகப்படச் செய்ய தொடர்ந்து ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பான். ஒரு கட்டத்தில் மனிதன் பொறுமையிழந்து அந்த விரோதியின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிடுவான். அப்படி நடந்தால் அந்த மனிதன் தீமைகளில் சிக்கிக்கொள்வான். ஆனால் அந்த விரோதியால் உங்களை நிபந்திக்க முடியுமே தவிர இறுதியான முடிவு உங்களுடையது தான். காரணம் அவனால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது வெளியிலிருந்து மட்டுமே அதை அவனால் செய்ய முடியும். ஆகவே இது போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கையாய் நடப்பது நம்முடைய கையில் தான் இருக்கிறது

ஒளியின் தூதன் வேடம்
மேலும் அந்த விரோதி மனிதர்களை வஞ்சிக்க கடவுளின் தூதன் அல்லது நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு வருவான். மற்ற சோதனைகளில் தப்பிப்பவர்கள் கூட இந்த தந்திரத்தில் விழ வாய்ப்புகள் உண்டு காரணம் எளிதாக மனிதர்களை ஏமாற்றிவிடுவான். சித்து வேலைகளைச் செய்து அல்லது தான் கடவுளின் அவதாரம் என்று சொல்லி விட்டு நன்மையை அல்ல தீமையையே செய்யத்தூண்டுவான். விபச்சாரம், கள்ளப்பணம், ஏமாற்றி சம்பாதிப்பது, போதைகளுக்கு அடிமையாக்குவது, பெண்பித்து பிடிக்க வைப்பது, போன்றவைகளைச் செய்யத் தூண்டுவான். மேலும் தவறான போதனைகளுக்கும் ஆட்படுத்துவான். இதன் மூலமாக நன்மை விளையாது நிச்சயமாக தீமையில் தான் மனிதர்கள் அகப்படுவார்கள். ஆகவே இத்தகைய நம்முடைய விரோதிக்கு கையாளாக வேலை செய்யும் மனிதர்களின் செயல்களில் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த உலகத்தின் அதிபதி
நம்முடைய விரோதி இந்த உலகத்தின் அதிபதியாவான் அவன் தன்னுடைய பேச்சைக் கேட்காத மனிதர்களை நையப்புடைப்பான், மற்ற மனிதர்களை வைத்து எள்ளி நகையாடுவான். உலகத்தையே உங்களுக்கு விரோதமாகத் திருப்பிவிடுவான். உபத்திரவங்களை அனுமதித்து நசுக்குவான். நாம் பெலவீணமாய் இருக்கும் இடங்களிலேயே தாக்குதல் தொடுப்பான். இத்தகைய சூழ்நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்? அவனுடைய குண நலன்களில் சிலதை அறிந்து கொண்டோம் இவனை நாம் எதிர்க்க முடியுமா? அவனுடைய பெலவினங்கள் என்ன? பெலன்கள் என்ன? அவனை எப்படி வெற்றிகாண்பது? முக்கியமாக அவன் யார்? இதையெல்லாம் அடுத்தடுத்து வரும் பதிவுகளில் காண்போம் அதுவரை காத்திருங்கள்.................................

Post a Comment

1 Comments