Header Ads Widget

Responsive Advertisement

தசமபாகம் கேட்பது சரியா? தவறா?

சமீபத்தில் ஒரு அருமையான சகோதரர் மின்னஞ்சல் வழியாக கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார், அந்தக் கேள்விக்கான பதில் மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதால் அதை ஒரு கட்டுரையாகப் பதிக்கிறேன்.

கேள்வி:...தசமபாகம் கொடுக்கக் கூடாது, அது பழைய உடன்படிக்கைக் காலத்தில் செய்யப்பட்ட பழைய முறைகளில் ஒன்று அதை தற்கால ஊழியர்கள் தங்கள் சம்பாத்தியத்துக்கு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது, புதிய உடன்படிக்கைக் காலத்தில் தசமபாகம் என்பது தவறானதே என்று நானும் கருதுகிறேன், என்னுடைய கேள்வி தசமபாகம் கேட்பது சரியா? தவறா?

அன்பு சகோதரர் மணிராஜ் அவர்கக்ளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்புடன் வாழ்த்துகிறேன், ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள், இது போன்ற சந்தேகங்கள் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதால் இதை ஒரு கட்டுரையாகப் பதிக்கிறேன். பொதுவாக நாம் வேதாகமத்தின் முதல் பகுதியை பழைய ஏற்பாடு என்று குறிப்பிடுகிறோம், ஆனால் அந்த பழைய ஏற்பாடு என்பது தேவன் மனிதர்களோடு செய்துகொண்ட முதல் உடன்படிக்கை ஆகும், ஆகவே அதை முதல் உடன்படிக்கை என்று சொல்லுவதே சிறப்பானதாக இருக்கும்.

சரி தற்போது கேள்விக்கு வருவோம், சகோதரரே நாம் தற்போது கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்ட தேவபிள்ளைகளும் வஞ்சிக்கப்படத் தக்கதான கடைசி காலங்களில் வாழ்ந்துவருகிறோம், ஆகவே இப்படிப்பட்ட நூதனமான உபதேசங்கள் வருவது தவிர்க்க முடியாததே, நானும் வேதத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்பதாக தங்களைப் போலவே ஒரு தவறான போதனைகளால் தசமபாகம் தவறானது என்றே கருதி வந்தேன், ஆனால் வேத வெளிச்சத்தில் ஆராயும்போது இப்படிப்பட்ட எண்ணம் தவறானது என்பதைப் புரிந்துகொண்டேன்.

தசம பாகம் என்றால் என்ன?
தசமம் என்பது பத்து என்பதாகும், தசமபாகம் என்பது பத்தில் ஒரு பங்கு என்பதாகும், இந்த நடைமுறை முதன்முதலாக ஆபிரகாம் சாலேமின் இராஜாவாகிய மெல்கிசேதேக்கு அவர்களுக்கு தன் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தான் என்று வேதம் சொல்லுகிறது. தசமபாகம் என்பது தேவன் நமக்கு அருளியிருக்கும் ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துவதன் அடையாளம் ஆகும்,

நம்முடைய பிதாவாகிய தேவன் நம்மீது கொண்டிருக்கும் அன்பினால் தன்னுடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் அவரை நமக்கு பலியாக ஒப்புக்கொடுத்து தம்முடைய அன்பை நமக்கு நிரூபித்திருக்கிறார். அப்படிப்பட்ட இரக்கமும் அன்பும் நிறைந்த தேவனுக்கு நம்முடைய ஆசீர்வாதங்களில் பத்தில் ஒருபங்கைக் கூட தரவேண்டாம் என்ற போதனைகள் நிச்சயமாக சாத்தானுடையவைகளாகத் தன் இருக்க முடியும்.

தசமபாகத்தின் சிறப்பு
பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது(சங் 24:1, 50:12, I கொரி10:26,28,) என்றிருக்கும் போது தேவனுக்கு நம்முடைய எல்லாவற்றிலும் தேவனுக்கென்று தசமபாகம் கொடுப்பது என்பது எந்தவகையில் சரியானது என்ற கேள்வியையும் கேட்டிருந்தீர்கள், தசமபாகம் என்பது கர்த்தருக்கு உரியது என்பதோடல்லாமல் அது கர்த்தருக்கு பரிசுத்தமானது என்றும் வேதம் நமக்கு போதிக்கிறது(லேவி 27:30). அதே போல பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதிருங்கள்(மத் 7:6) என்றும் வேதம் போதிக்கிறது, கர்த்தருக்கு பரிசுத்தமான தசமபாகத்தை, உலகக் காரியங்களான நாய்களுக்குக் கொடுப்பது எந்தவகையில் நியாயம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்,

தசமபாகம் என்பது முதன்மையான பாகம்
தேவனுடைய அன்பிற்கு ஈடாக நீசர்களாகிய நம்மால் எதைக் கொடுத்துவிடமுடியும்? ஆனாலும் தேவனுக்கு பரிசுத்தமானதை நாம் அவருக்குக் கொடுத்துவிட கட்டளை பெற்றிருந்தும், அதை நாம் வஞ்சிப்போமானால் எத்தனை பெரியபாவிகளாய் இருப்போம்? சிலர் தங்கள் முக்கியத்துவம் வாய்ந்த தேவைகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகையில் தசமபாகத்தை எடுத்து வைப்பார்கள். அது தவறானகாரியம் ஆகும், எல்லாவற்றிலும் முதன்மையான பாகத்தை தேவனுக்கென்று கொடுப்பது தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கும் அல்லவா? ஆகவே பத்தில் ஒருபாகம் தானே அது எந்த பாகமாக இருந்தால் என்ன? கொடுத்தால் போதும் என்ற போலியான வாதங்களை விட்டுவிட்டு, முதற்பலனாகிய முதலாம் பாகத்தை தேவனுடைய பரிசுத்தமாக இருக்கும் பாகத்தை வஞ்சியாமல் தேவனுக்குக் கொடுக்க வேண்டும்.

தசமபாகம் கேட்பது சரியா? தவறா?
தசமபாகம் கேட்பது சரியா? தவறா? என்ற முக்கியமான தங்களுடைய கேள்விக்கு வருவோம், இந்த சரியா தவறா என்ற வாதமே தவறு ஆகும், தசமபாகம் என்பது கேட்காமலேயே தேவன் மீது கொண்ட நன்றி உணர்வினால் நாம் கொடுக்க வேண்டும், ஒருவேளை உணர்வில்லாத இருதயத்துக்கு தசமபாகம் கொடுக்கச் சொல்லித் தூண்டும் செயல் என்பதாகவே கேட்பதைப் பார்க்கவேண்டும், பணத் தேவைகளுக்காக ஊழியர்கள் தசமபாகம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டுமே என்ற பயத்தினால் தசமபாகத்தை கேட்காமல் இருப்பது, மனித தூஷனங்களுக்கு பயந்து கர்த்தருக்கு பரிசுத்தமானதை தராமல் வஞ்சிக்கும்படியான சாத்தானின் தந்திரத்திற்கு துணைபோவதற்கு ஒப்பானதாகும், ஆகவே தூஷனங்கள் வந்தாலும் தசமபாகம் பற்றிய கருத்தை கிறிஸ்தவர்களிடம் சரியாக சென்றடையச் செய்தலும், தசமபாகத்தைத் கொடுக்கும்படி தூண்டுவதும் ஊழியர்களின் கடமையாகும்.

ஒருவேளை ஒரு குறிப்பிட்ட ஊழியருக்கு அளவுக்கு அதிகமாக காணிக்கை வருகிறது என்று ஒரு விசுவாசி நினைத்தால், வசதியற்ற மற்றொரு ஊழியருக்கு தசமபாகம் கொடுக்கலாம், அல்லது திக்கற்றவர்கள், அனாதைகள் விதவைகளுக்குக் கொடுக்கலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் அதை தன் சுய தேவைகளுக்காகப் பயன்படுத்தி கர்த்தருக்கு பரிசுத்தமானதை வஞ்சிக்கக் கூடாது, உலகப்பிரகாரமான சுகங்களைத் துறந்து தேவனுக்காக தன்னை முற்றிலும் விற்றுப்போட்ட தேவ ஊழியர்களுக்கும்,ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் தேவன் தம்முடைய பரிசுத்த பங்கை சுந்தரமாகக் கொடுத்திருக்கிறார்(உபா26:12) என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆகவே தசமபாகத்தை வஞ்சிப்பது இப்படிப்பட்டவர்களை வஞ்சிப்பதற்கு ஒப்பானதாகும்.


புதிய உடன்படிக்கையில் தசமபாகம் சரியானதா?
நாம் இப்போது புதிய உடன்படிக்கைக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம், ஆகவே தற்போது தசமபாகம் கொடுப்பது ஏற்புடையதா என்று ஆராய்வதற்கு முன்பு நம்முடைய இரட்சகர் இயேசு கிறிஸ்து தசமபாகத்தை விட்டுவிடக்கூடாது என்பதை போதித்திருக்கிறார்(மத்23:23) என்பதை நாம் நினைவில் நிறுத்திக்கொண்டு மேற்கொண்டு வாசிக்கலாம்,

முதல் உடன்படிக்கை என்பது இஸ்ரவேல் மக்களிடத்தில் செய்யப்பட்டது, ஆனால் புதிய உடன்படிக்கை இயேசு கிறிஸ்துவின் சொந்த இரத்தக் கிரயத்தால் வாங்கப்பட்ட நம் அனைவருடனும், அதாவது இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நம் அனைவரிடமும் செய்யப்பட்டது, ஆகவே தசமபாகம் என்ற நியாயப்பிரமானத்தை நாம் கடைபிடிக்கலாமா? என்ற கேள்வி சரியானது அல்ல,

தசமபாகம் ஒரு ஆரம்பமே..
நியாயப்பிரமானம் இல்லாத காலத்திலேயே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆபிரகாம் தசமபாகம் செலுத்தினார்(ஆதி 14:20). யாக்கோபு தன்னுடையவைகள் எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்துவதாக வேண்டிக்கொண்டான்(ஆதி 28:22). அகவே தசமபாகத்தை நியாயப்பிரமான வட்டத்துக்குள் வைத்து அதை ஒதுக்கக்கூடாது,

அதோடு மட்டுமல்ல இயேசு கிறிஸ்து தசமபாகத்தைக் கொடுப்பதை விட்டுவிடக்கூடாது என்று சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நாமே தேவனுக்கு சொந்தம் பத்தில் ஒரு பங்கை எதற்காக கொடுக்கவேண்டும் என்று சாத்தானின் தந்திரமான ஆலோசனைகளை விட்டுவிட்டு, தேவன் மீது நாம் கொண்டிருக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்த நாம் தசமபாகம் கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனாலும் கட்டாயத்தின் பேரிலோ, கடமைக்காகவோ, பெயருக்காகவோ கொடுக்காமல் தாராளமாய் (2 கொரி 8:2),உற்சாகமாய் (2 கொரி 9:7),தியாகமனப்பான்மையுடன் (2 கொரி 8:3) கொடுக்க வேண்டும், அப்படியில்லாமல் நம் மனம் அந்த முதன்மையான பாகத்தை வஞ்சிக்க நினைக்குமானால், நம்முடைய இரட்சிப்பும், தேவன் மீது நமக்கிருக்கும் அன்பிலும் கோளாறு இருப்பதாக எளிதாக அறிந்துகொள்ள முடியும்,

யாரெல்லாம் தசமபாகம் கொடுக்கக் கூடாது?
தன் சகோதரனுக்கு ஒப்பான சக மனிதர்கள் எத்தகைய குற்றம் செய்திருப்பினும், அதை மன்னிக்க மனமின்றி இருக்கும் போலி கிறிஸ்தவர்கள் தசமபாகம் மட்டுமல்ல, மற்ற எந்த காணிக்கையைக் கொடுத்தாலும் தேவன் அதை அங்கீகரிக்க மாட்டார், அப்படிப்பட்டவர்களை தேவன் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்வதில்லை. வெளி உலகுக்கு வேண்டுமானால் அவர்கள் கிறிஸ்தவர்களாக அறியப்படுவார்களேயன்றி, கிறிஸ்துவுக்கும் இவர்களுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை, ஆகவே மன்னியாதவர்கள் மாத்திரம் தசமபாகம் செலுத்தாமல் அந்த முதல்பங்கை தன் இஷ்டத்துக்கு செலவு செய்ய உரிமை பெற்றவர்களாக இருப்பர்.

தசம பாகத்தின் நிறைவு
முன்பே பார்த்தது போல தசமபாகம் என்பது ஒரு ஆரம்பமே,ஆனால் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய அடிப்படைத் தகுதிக்குப் போக மீதம் இருப்பவைகள் யாவற்றையும் கொடுக்கலாம், அதாவது தசமபாகம் போக மீதமிருக்கும் பகுதியில் தன்னை பாதிக்காத அளவுக்கு தேவனுக்குக் கொடுக்கலாம், (தேவனுக்கு என்றால் ஊழியர்களுக்கு, திக்கற்றவர்களுக்கு ஆகும்). அதையும் மீறி தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தேவனுக்கென்று கொடுப்பது சிறிதானதாகிலும் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது ஆகும்.

முடிவாக..
தசமபாகம் கொடுக்கக்கூடாது என்ற தூஷனாமான சாத்தானின் உபதேசங்களுக்கு மயங்கிவிடாதபடிக்கு நன்றியுணர்வுள்ளவர்களாக உற்சாகமாக நம்மால் முடிந்த மட்டும் தேவனுக்கென்று கொடுப்போம், தேவன் மீது வைத்திருக்கும் அன்பை பணம் என்ற விக்கிரகத்துக்கு முன் விற்றுப்போட்டு உலகத்தின் போக்கில் சென்றுவிடாதபடிக்கும் எச்சரிக்கையாக இருப்போம்....

Post a Comment

0 Comments