Header Ads Widget

Responsive Advertisement

எது தேவன் விரும்பும் காணிக்கை…?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே..,

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்களுடைய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,

கிறிஸ்மஸ் என்றாலே மனமகிழ்ச்சியும் குதூகலமும் நம்மைப் பிடித்துக்கொள்கிறது. புத்தாடைகள் அணிவதும் ஆலயங்களுக்குச் செல்வதும் உறவினர்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதும் நம்முடைய வழக்கம் ஆனால் கிறிஸ்து உலகத்திற்கு ஏன் வந்தார்? எவ்வித பொறுப்புகளை நமக்குக் கொடுத்தார் என்பதை மறந்துவிட்டு அனேக வருடங்களாக நாம் கிறிஸ்மஸை வெறும் பண்டிகையாகவே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்மஸ் என்றாலே கொடுத்தலைத் தான் நினைவு படுத்த வேண்டும். பிதா நம்மேல் கொண்ட அன்பினால் தம் ஒரே பேரான குமாரனை இந்த பூமியில் நமக்காக கொடுத்ததை நினைவு கூறும் நாள் தான் கிறிஸ்மஸ். ஆனாலும் தேவன் இந்த கிறிஸ்மஸ் நாட்களில் நம்மோடு வழ‌க்காடுகிறார் காரணம்: நாம் கிறிஸ்துவை காணிக்கைகளால் வஞ்சிக்கிறோம் என்பதே…!!!

உங்கள் கைகளில் உள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல (மல்கியா 1:10)
அன்று வேதாகம காலம் தொடங்கி இன்று நவீன காலம் வரை (2008ஆம் ஆண்டு வரை) பக்தர்கள் தேவனுக்கு காணிக்கை கொடுப்பது என்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது காரணம் கொடுத்தல் என்பது ஆராதனையின் ஒரு பகுதியே மனிதன் தேவனுக்கு நான் கடவுளை பிரியப்படுதுகிறேன் என்பதற்கும் கனப்படுத்துகிறேன் எனப‌தற்கும் அடையாளமாகவே காணிக்கை கொடுக்கிறான், ஆனாலும் தேவன் எல்லா பக்தர்களின் காணிக்கைகளையும் அங்கரிப்பதில்லை. ஆனால் ஆபேல், தாவீது போன்ற பக்தர்களின் காணிக்கையில் பிரியமாக இருந்திருக்கிறார். காரணம் என்ன? அவர்கள் தேவனுடைய இருதயத்தை அறிந்து கொடுத்தார்கள் என்பதே மாபெறும் உண்மை. வேதாகமம் இல்லாதநாட்களில் ஆபிரகாம் விசுவாததோடு தசம பாகம் கொடுத்தான், யாக்கோபு நிபந்தனையோடு தசம பாகம் கொடுத்தான். யோபு தனக்கும் தன் குடும்பத்திற்கும் எந்த தீமையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் தவறாமல் பலி செலுத்தினான். மேலும் தாவீது, இஸ்ரவேல் மக்கள், பர்னபா, ஆதித்திருச்சபை விசுவாசிகள், மக்கதோனியா சபை விசுவாசிகள் போன்றவர்கள் உற்சாகமாய் காணிக்கை கொடுத்தார்கள் என்பது நாமும் தேவனுக்கு உற்சாகமாக கொடுக்க வேண்டும் என்ற உணர்வை நமக்கு கொடுக்கின்றது.

இன்றும் தசம பாகம், நன்றி படைப்பு காணிக்கை, பொருத்தனை காணிக்கை, மிஷினரி காணிக்கை, கட்டிட நிதி போன்ற எல்லா விதமான காணிக்கைகளையும் திருச்சபையில் படைக்கின்றோம். நல்லது, ஆனால் இருதயத்தின் ஆழத்திலிருந்து நாம் கொடுக்கின்றோமா? வாரா வாரம் ஆராதனைக்கு செல்கிறோம் ஆராதனையில் காணிக்கை எடுப்பதால் நாமும் கொடுக்க வேண்டும் என்று சடங்காச்சாரமாக கொடுக்கின்றோமா? அல்லது அந்த வாரம் முழுவதும் தேவன் நமக்கு செய்த நனமைகளை நினைத்து நன்றியோடு கொடுக்கின்றோமா? நம்மை நாமே நிதானிப்போம். வீணான வைராக்கியத்தினால் சகோதரனை மன்னிக்க முடியாத கசப்புகளை நமக்குள் வைத்துக்கொண்டு நாம் கொடுக்கும் காணிக்கையில் தேவன் பிரியமாக இருப்பாரோ? சபையில் நான் தான் அதிகமாக காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற‌ பெருமையோடு நாம் படைக்கும் காணிக்கை தேவனுக்கு அருவருப்பானது. இஸ்ரவேல் மக்கள் அன்னிய தேவர்களைப் பணிந்து கொண்ட போது அவர்களுடைய காணிக்கையை தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை, சிறப்பானதை கொடுக்காத காயீனின் காணிக்கையை தேவன் அங்கீகரிக்கவில்லை. அன‌னியா சாப்பீராள் காணிக்கையை வஞ்சித்த போது தேவன் தண்டித்ததை நாம் நினைவில் கொள்வோம். ஆனால் நோவா ஜலப்பிரளயத்திற்கு பின்பு பரிசுத்தமானவைகளில் இருந்து பலி செலுத்தினான் தேவனும் அதை முகர்ந்து பார்த்தார் காரணம் நோவாவினுடைய பலி சிறப்பானதானது என்பதால் அல்ல நோவாவின் கீழ்படிதலையே தேவன் பார்த்தார். ஆம், அன்பானவர்களே நாம் கோடி கோடியாய் காணிக்கை கொடுப்பதைக் காட்டிலும் தேவனுக்கு கீழ்ப்படிவதே தேவனுக்கு பிரியம்.

நம் தேவன் சர்வ வல்லவர்தான், பராக்கிரமம் நிறைந்தவர்தான், இல்லாதவைகளைக் கொண்டு இருகிறவைகளாக அற்புதம் செய்கிறவர்தான். ஆனாலும் அவருக்கும் ஒரு பற்றாக்குறை உண்டு. அவருடைய பணியைச் செய்ய வேலையாட்கள் தேவை என்ற பற்றாக்குறை அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டே இருகின்றது. நம்முடைய பொருட்களாளும் பணங்களாலும் ஆலயங்களை நிரப்பும் நாம், நம் பிள்ளைகளை தேவனுடைய பணிக்கு அனுப்பாதது ஏன்? எதிர்காலத்தில் என் பிள்ளைகள் நல்ல மருத்துவராகவும், பொறியாளராகவும் உயர்ந்த அரசு அதிகாரிகளாகவும் ஆசிரியர்களாகவும், சமுதாயம் அங்கீகரிக்கும் அளவுக்கு உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று விரும்பி கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களே…!!! என் மகன் நல்ல போதகராக வரவேண்டும், என் மகள் தேவனை அறியாத மக்கள் உள்ள இடத்திற்கு மிஷினரியாக செல்ல வேண்டும் என்று ஜெபித்து உங்கள் பிள்ளைகளை தேவனுக்காக பிரதிஸ்டை பண்ணாதது ஏன்? யாத்திராகமம் 13:12-ன் படி உங்கள தலையீற்றுகள் கர்த்தருக்கு உரியது. உங்கள் பிள்ளைகளை தேவனுடைய ஊழியத்திற்கு கொடுக்காமல் வஞ்சித்து வைத்துக் கொண்டு எழுப்புதலுக்காக ஜெபிப்பதும் உபவாசிப்பதும் உண்மையான காணிக்கை செலுத்துதல் ஆகுமா?

உங்கள் குழந்தைகள் வியாதிப்பட்டிருக்கும் போது ஊழியத்திற்கு அனுப்புவேன் என்று பொருத்தனை செய்யும் நீங்கள் தேவனிடம் சுகம் பெற்ற பின் உண்மையாகவே அனுப்பிவிட்டீர்களா? சகரியா எலிசபெத், யெப்தா, மனோவா தம்ப‌திகள் அண்ணாள், தம்பதிகள் மரியாள் இவர்களுடைய வாழ்க்கை நமக்கு தேவனுடைய பணிக்கு பிள்ளைகளை அர்பணிக்க வேண்டும் என்ற உண்ர்வைக் கொடுக்கவில்லையா?

பிதா நம்மேல் கொண்ட அன்பினால் தம்முடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவை நம் பாவங்களை நீக்கும் பரிகார பலியாக ஒப்புக்கொடுத்ததை நாம் ஏன் மறந்து போனோம். அன்று இயேசு சிலுவையில் பாடுபட்டபடியால்தான் இன்று நாம் பாவமன்னிப்பு பெற்றவர்களாய் பரலோகம் செல்வோம் என்ற நம்பிக்கையில் சுக போகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசுதான் மெய்யான தேவன் என்று அறிந்திடாத கோடிக்கணக்கான மக்கள் நரகத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கும்போது உங்கள் பிள்ளைகளை நீங்கள் அனுப்பாவிட்டால் அல்லது நீங்கள் போகாவிட்டால் யார் அவர்களை காப்பாற்ற முடியும்?

பிரியமானவர்களே.., இந்த கிறிஸ்மஸ் காலங்களில் தேவன் இதுவரையிலும் நம்மை நடத்தினதற்காக நீங்கள் தேவனுக்கு என்ன காணிக்கை செலுத்தப் போகிறீர்கள்? உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கொண்டு தேவன் உலகை இரட்சிக்க திட்டம் வைத்திருக்கும் போது நீங்கள் உலக வேலைகளில் உங்களை பிணைத்துக்கொள்வது ஏன்? தேவனுக்கு தேவை உங்கள் பணமல்ல நீங்கள்தான்…..!! உங்கள் குடும்பதினர்தான்……..!! உங்கள் பிள்ளைகள் தான்…!!
இதுவே தேவன் விரும்பும் உன்ன‌தமானதும், உயர்வானதுமான காணிக்கை. ந‌ம்மை நாமே நிதானிப்போம்…!! தேவ‌னுடைய‌ பாத‌த்தில் ந‌ம்மை முழுமையாக‌ ஒப்புக்கொடுப்போம், வ‌ருகிற‌ புது வ‌ருட‌த்தில் தேவ‌னுக்காக‌ செய‌ல்ப‌டும் செய‌ல் வீர‌னாக மாற‌ தேவ‌ன் உங்க‌ளை அழைக்கிறார். அனைவ‌ருக்கும் இனிய கிறிஸ்ம‌ஸ் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள்.

- Pr. M.Pradeep Kumar

Post a Comment

0 Comments