Header Ads Widget

Responsive Advertisement

கள்ள உபதேசங்களை கண்டு கொள்வது எப்படி?

இது கடைசிக் காலம் என்பதினால் கள்ளப் போதகங்களின் காலமாகவும் இருக்கிறது. கள்ளப் போதகங்களையும் அவற்றை போதிப்பவர்களையும் அடையாளம் கண்டாலொழிய நாம் வஞ்சிக்கப்படுவதற்கு தப்ப முடியாது. வேதாகமத்தின் துணையுடன் கள்ள போதகங்களை அடையாளம் காண உதவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


கள்ளப் போதகர்கள் யார்?
வேதத்தை வேத வெளிச்சத்தில் காணாதவர்கள். தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அல்லது தங்கள் இஷ்டக் கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ள மட்டுமே வேதாகமத்தை பொய்யாய் யாதொரு நெறிமுறையின்றி மேற்கோளாக பயன்படுத்துவார்கள்.
இவர்கள் வேதசத்தியத்திற்கு வினோதமான விளக்கம் அளிப்பது போதாதென்று தாங்கள் புதுமை படைப்பாளிகள் என்றும் சில வேளைகளில் மார்தட்டிக் கொள்வார்கள்.
தங்கள் போதகத்தின் பயனாக கிறிஸ்து மகிமைப்படுத்தப்பட்டாரா? ஜனங்கள் எச்சரிக்கப்பட்டு பயன்பெற்றார்களா? என்றெல்லாம் அவர்கள் கிஞ்சித்தும் நோக்குவதில்லை.

ஜனங்களை தங்கள் பக்கம் வசப்படுத்தி அடிமைகளாக்கி தங்களுக்கு ஆதாயம் அல்லது பிழைப்பை தேடிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

கிறிஸ்தவ சபைகளில் கொசுக்களைப் போல பெருகியிருக்கும் இவர்களைக் குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
தப்பான போதனைகள் இன்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வேகத்தைப் பார்த்தால் இந்த வெள்ளத்தில் எவருமே மீந்திருக்க முடியாது என்ற அளவுக்கு சிந்தைக்கு தொட்டில் கட்டி அப்பாவி விசுவாசிகளுக்கு மகுடி வாசித்து மயங்கவைக்கும் போதை உபதேசங்கள் விஷம் போல பெருகியிருக்கின்றன.

சர்ப்பமானது தனது தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல உங்கள் மனதையும் (மயக்கி) கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தினின்று விலக்கும்படி (தந்திரமாய்) கெடுத்துப் போடுமோ என்று பயந்திருக்கிறேன் என்று பவுல் சொன்னதில் இப்படிப் பட்ட கள்ளப் போதகர்களும் அடங்குவரோ?
கள்ள உபதேசங்கள் கள்ளப் போதகர்கள் இவற்றைப் பற்றி பேசும் போது முதலாவது நாம் ஒரு காரியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் பிசாசினால் சத்தியத்தினின்று விலகும் படி வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆவர். நாம் அவர்கள் எந்தப் பகுதியில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சரியாய் விளங்கிக்கொண்டால்தான் அவர்களிடம் நாம் தப்பவோ அல்லது சரியாய் பதில் கூறவோ முடியும்.
மேலும் கள்ள போதகம் என்பது தவறான போதனையைக் குறிக்கிறது என்பதை மறவாதிருங்கள். சமயத்தில் சில நல்ல தேவமனிதர்களே கூட தவறான போதனைகளை அளிக்கக் கூடும் அபாயமும் கூட உண்டு என்பதால் எல்லாவற்றையும் வேதாகம வெளிச்சத்தில் சோதித்துப் பாருங்கள் (1தெச.5:21).

வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கள்
"உமது வருகைக்கும் உலகின் முடிவுக்கும் அடையாளம் என்ன?" என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு இயேசு கொடுத்த 93 வசனப் பதிலின் முதல் வாக்கியம் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்பதே. அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார். பகுத்தறிவதில் விசுவாசிகள் வளரவேண்டுமென்று பவுல் ஜெபித்தார் (பிலி.1:9). வஞ்சிக்கப்படுதலை அடையாளங்காண இதோ சில பரிசோதனைகள். வஞ்சிக்கப்பட்ட ஊழியர் அல்லது மக்களில் கீழ்கண்ட ஒன்று அல்லது கூடுதல் அடையாளங்களைக் காணலாம்.

1. நான் மிகவும் வித்தியாசமானவர் என்று வஞ்சிக்கப்பட்டவன் நினைக்கத் துவங்குகிறான். மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென அவன் எண்ணுகிறான்.

2.எழுதப்பட்ட வசனத்தை விட சொல்லப்படும் வார்த்தைகளில் அவன் அதிகம் ஆர்வம் காட்டுகிறான். வேதாகமத்துக்கும் மிஞ்சிய வெளிப்பாடுகளை தேவனிடமிருந்து வரும் புதிய காரியம் என்று அணைத்துக் கொள்ளுகிறான்.

3. சொப்பனங்கள், தரிசனங்கள், சத்தங்கள் மற்றும் கவர்ச்சியானதும் உடலுக்கடுத்ததுமான உணர்ச்சிவசக்காரியங்களில் அவன் அலாதிப் பிரியங்கொள்ளுகிறான். நூதனக்காரியங்களிலே அவனுக்கு நாட்டம் அதிகம்.

4.அவன் ஒரு புறம் சாய்ந்துவிடுகிறான். மற்றவை மறக்கப்படுமளவிற்கு ஏதோ ஒரு உபதேசம் அல்லது அனுபவத்தையே திரும்ப திரும்ப வலியுறுத்துகிறான். இது வேதத்தை திருக்குவது என்று அவன் அறியான்.

5. பக்குவப்பட்ட வேத போதகர்கள் முதிர்ச்சியடைந்த தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனையை அவன் நாடுவதில்லை. அவர்களது கண்காணிப்புக்குள் அடங்குவதுமில்லை. எல்லாமே நேரே பரலோகத்தில் இருந்து தனக்கு கிடைத்துவிடுகிறது என அவன் எண்ணுகிறான். முடிவை வைத்து முறை சரியென்று சாதித்துவிடுகிறான்.

6. ஏதோ விளக்கம் கூறி தன் வாழ்விலுள்ள சில பாவங்களுக்கு அவன் சாக்குப் போக்கு சொல்லி விடுகிறான். அவன் பொதுவாக பிறர்மீது கடினமாகவும், தன்மீதோ சலுகையுடனும் இருப்பான்.

7.வேதத்தை ஆழமாய் ஆராய்கிறேன் என்ற போர்வையில் அவன் மறைவான இரகசியமான காரியங்களில் அசாதாரண பிரியம் காட்டுகிறான்.

8.மிஷனெறிப்பணியிலும் நற்செய்தி அறிவிப்பிலும் அவனது நடைமுறை ஈடுபாடும் விருப்பமும் தணிகிறது.

9. யாராவது அவனது தவறுகளை சுட்டிக் காட்டினால் அதை நல்மனதுடன் அவன் ஏற்பதில்லை. நான் சத்தியத்திற்காக பாடனுபவிக்கிறேன் என்று பிசாசு அவனை எண்ணச் செய்கிறான்.

10. தான் வஞ்சிக்கப்பட்டுள்ளது அவனுக்குத் தெரியாது. அதை ஒத்துக் கொள்ளவும் மாட்டான். வெற்றிகள் அவன் கண்களை குருடாக்கிவிட்டன. நான் தவறென்றால் தேவன் எனது ஊழியத்தை இவ்விதம் ஆசீர்வதிப்பது எப்படி? என்பதே அவனது விவாதம்.

மேலே தரப்பட்டிருக்கும் குறிப்புகள் ஓரளவிற்காவது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவை குறை காண்பதற்காக அல்ல, களைகளை களைவதற்காகவே எழுதப்பட்டிருக்கிறது. கர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோவென்று வகைதேடி திரிகிற பிசாசுக்கு இடங்கொடாமல் யூத ராஜ சிங்கமாகிய இயேசுவின் நாமத்தில் ஜெயிப்போம். ஜெயம் பெறுவோம். மாரநாதா! (1பேதுரு.5:8, எபேசியர்.4:27, வெளிப்படுத்தல் 5:5, 22:20,21).



தொகுத்து எழுதியவர்

S.அற்புதராஜ்

Post a Comment

0 Comments