Header Ads Widget

Responsive Advertisement

கிறிஸ்தவ கீர்த்தனைகள் ஒரு பன்முகநோக்கு


எழுதியவர் முனைவர் மோசஸ் மைக்கல் ஃபாரடே
                                                     தமிழ் கூறு நல்லுலகிலும், இத்தரணியின் பிறவிடங்களிலும் தமிழில் பேசித் தமிழில் பாடித் தமிழால் இறைவனை வழிபடும் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றுள்ள அரும் பெருஞ் செல்வங்களுள் தலையாயது கிறிஸ்தவக் கீர்த்தனைகள் எனப்படும் தமிழிசைப் பாடல்கள் ஆகும். அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனப் புனித யோவான் அடிகளார்(1:1) இயேசுபெருமானைப் பற்றிக் கூறிய வாசகம், தமிழ் கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்கும் ஒருவாரு பொறுந்தும் எனலாம். தமிழ் மண்ணுக்கே உரிய இசை அமைப்போடும், இலக்கிய வளங்களோடும்,, பண்பாட்டு நெறிகளோடும் எந்நாட்டுக்கும் உரியவராம் இயேசு பெருமானையும் அவரது விவிலிய அறங்களையும் பாடிப்பரவும் தமிழ் கிறிஸ்தவக் கீர்த்தனைகளை தமிழ்க் கிறிஸ்தவரே காலப்போக்கில் பெரிதும் போற்றாதிருப்பதும் அவற்றின் அருமை பெருமைகளை உணராதிருப்பதும் இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தின் அவலமான நடப்புகளில் ஒன்று. இந்நிலை மாறி தமிழ்க் கிறிஸ்தவர்கள் இப்பக்திப்பனுவல்களின் சிறப்புகளைத் தாமும் உணர்ந்து, பிறருக்கும் உண்ர்த்திடத் தலைப்படும் நன்னிலை உருவாக உணர்வுள்ள பலரும் பலமுயற்சிகளை இந்நாள்களில் மேற்கொண்டுள்ளனர் அத்தகையதொரு சிறு முயற்சியே இந்த அறிமுகக் கட்டுரை.


கட்டுரைப்பொருள்:

சீர்த்திருத்த (Protestant) ‍பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், தம் வழிபாடுகளில் பயன்படுத்துவதற்காக, சென்னை கிறிஸ்தவ இலக்கிய சங்கம் (CLS) ‍வெளியிட்டுள்ள கிறிஸ்தவ கீர்த்தனைகள் எனும் நூலினை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே இந்த சிறு ஆய்வு. இந்நூல் பல்வேறு மாற்றங்களுடன் பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு பதிப்புகள் கண்டபோதிலும் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பதிப்பில் அடங்கியுள்ள பாடல்களையே இக்கட்டுரை தழுவி நிற்கிறது. இக்கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் பல்வேறு கோணங்களில் நோக்கி, ஒவ்வொரு நோக்கிலும் அவை சிறந்து நிற்கும் சீர்த்தியை ஒரு சில சான்றுகளால் சுட்டிச்செல்வதே இக்கட்டுரையின் நோக்கம். கட்டுரையின் அளவும் காலமும் கருதி, மிகச்சில சான்றுகளே இத் தொகுப்பில் அடங்கியுள்ள 400 பாடல்களிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளன. இவ்வுரைகற்பார், கேட்பார். இவ்வகையான பன்முகப் பார்வைகட்கும் இடம் தந்து நிற்கும் கீர்த்தனைகளின் பெருமையையும் செழுமையையும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்திட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


1. தமிழ்நெறிநோக்கு :

"ஏழிசைய் இசைப்பயனாய்" விளங்குகிறான் இறைவன் என்பது தமிழ் மரபு. தமிழிசையால் இறைவனைப்பாடும் கிறிஸ்தவ கீர்த்தனைகளும் தமிழ் மரபுகளைப் பின்பற்றியே அமைந்துள்ளமைக்கு எண்ணற்ற சான்றுகளைச் சுட்டலாம். தமிழிலக்கியங்களும் தமிழகக் கோயில் வழிபாடுகளும் பின்பற்றும் இலக்கிய சமய மரபுகள் பலவற்றை கீர்த்தனை ஆசிரியர்கள் பய்ன்படுத்தியுள்ளனர். இறைவனது திருநாமத்தை திருப்பெயரைப் பலவாறு பாடிப்பரவுவது தமிழ்மரபு. திருநாமத் தோத்திரம். திருநாம அர்ச்சனை. திருநாம சங்கீர்த்தனம் எனப்பலவாறு அதனைக்குறிப்பர். "மன்னுயிர்த் தொகுதி ஈடேற" எனத்தொடங்கும் எச். ஏ கிருஷ்ண பிள்ளையின் கீர்த்தனை. இயேசு என்னும் திருநாமத் தோத்திரமாய் அமைவது. "இன்னமுதாயாது இயேசு நாமமே" என நெஞ்சுருகிப் பாடுகிறார் அவர். நமோ நமோ என முடியும் "ஆகமங்கள் புகழ்வேதா"(3) "சீர்த்திருயேகவஸ்தே" (4) ஆகிய பாடல்களும் ஆகிய பாடல்களும் இவ்வாறு திருநாமப் பெருமையைக் குறிப்பாகக் கூறுவன. நமோ என்பது இறை நாமத்தை அர்ச்சிப்பதாக கொள்ளலாம். நமஸ்காரம் என்ற வடசொல்லின் சுருக்கமாகக் கருதவும் வாய்ப்புண்டு. சரணம் சரணம் எனக்கூறி, இறைவனது திருவடிகளில் சரணம் அடவது அடைக்கலம் புகுவது தமிழ்ச் சமயநெறி. இவ்வாறு சரணம் பாடும் கீர்த்தனைகள் பலவுள. "திரிமுதல் கிருபாசனே"(2) "சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா" (49,50) முதலியன சான்றுகள். எத்தகு வழிபாட்டுக்கும் இசைநிகழ்ச்சிக்கும் நிறைவாகவும் நலமான வாழ்த்தாகவும் மங்களம் பாடுவது தமிழ் மரபு. "சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம்" பாடுகிறார்கள் கீர்த்தனைக் கவிஞர்கள். திரியேக இறைவனின் திருப்பண்புகளைத் தமிழ்ச் சமய நெறிகளில் நின்று விளக்கியுள்ளார் மீட்புக் கவிஞர் கிறிஷ்ணபிள்ளை. "சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்" திரித்துவ தேவன் திகழ்கின்றாராம், இறைவனைப் போற்றும் இசைப்பாடல்களைத் தேவாரம் என வகைப்படுத்துதலும் தமிழ் நெறியாம். தே+ஆரம் = இறைவனுக்கு சூட்டப்படும் பாமாலை. இவ்வகை தேவாரப்பாடல்களாக கிறிஸ்தவ கீர்த்தனைகளில் "இன்னிய முகமலர்ந்து"(323). "தந்தையே இவர்க்குமன்னி" (324) "கள்ளமுறுங்கடையேனும்" (191) முதலியன அமைந்துள்ளன. தமிழ்ச்சமய நெறிவழிப்பட்ட பல சொற்களும் தொடர்களும் கிறிஸ்தவக் கீர்த்தனை ஆசிரியர்களால் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. "ஓம்! அனாதி வந்தார்" எனப்பாடுகிறார் வேதநாயக சாஸ்திரியார். 'தியாகராசன்'(88) என இயேசுவை வருணிக்கிறார் இன்னொரு கவிஞர். "சமயம் ஈராறும் சாஸ்திரங்கள் ஆறும் வேதம் நான்கும் தத்துவங்கள் தொண்ணூற்றாறும் கடந்தவன்"(12) எனக் கிறிஸ்து பெருமானைத் தமிழ்ச் சமயநெறிகளோடு ஒப்பிட்டுப்பாடுகிறார் இன்னொரு புலவர். "துதிதங்கிய பரமண்டல சிவிசேடக நாமம்" (81) என்ற கீர்த்தனையில் சாஸ்திரியார் பயன்படுத்திய சொல்லாட்சிகள் இத்தகையன. இவ்வாறு கீர்த்தனைகளின் தமிழ்நெறிக்குப் பலப்பல சான்றுகள் சுட்டலாம். இதனால்தான் சபைமக்கள் ப்லரும் அறியாத‍-‍ பாடாத "வந்தருள் இவ்வாலயத்தில்" (297) எனும் கீர்த்தனையில் "செஞ்சொல் மலிந்த புலவர் செப்பு தமிழ்குகந் உன்றன் சீரடி" என இறைவன் திருவடியைப்பாடுகிறார் கவிஞர்.


2. இலக்கிய நோக்கு :

கிறிஸ்தவக் கீர்த்தனைகள், கூறும் பொருள்களால் தமிழ் சமய நெறிகளைப் பின்ப‌ற்றுவதைக் கண்டோம். அடிப்படையில் சிறந்த பைந்தமிழ்ப் பக்திப்பாக்களாக விளங்கும் இவை, இலக்கியச் சுவையிலும் எள்ளளவும் குறைந்தனவல்ல. பல்வேறு வைகையான இலக்கிய நலங்களுக்கும் அணிநயங்களுக்கும் கீர்த்தனைகளில் சான்றுகள் தரலாம். "ஆதிபிதாக் குமாரன் ஆதி திரியேகருக்கு அனவரதமும் ஸ்தோத்திரம்" வரவேனும் எந்தரசே" முதலிய கீர்த்தனைகளின் சரணங்கள் சந்தநயத்துக்குச் சரியான சான்றுகள். அற்புதமான உவமைகள் பலவற்றைக் கீர்த்தனைகள் ஆசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். சான்றாக 'சுயஅதிகார சுந்தரக்குமாரா'(16) என்ற கீர்த்தனையில் 'கறைமதகற்றகுளம் புவியிலுண்டோ' என்றும் நரர்பாலர் கோடியொரு மனிமுடிக்க' என்றும் தொடங்கும் சரணங்களில் அரிய உவமைகளைக் காணலாம். 'அகிலத்தைப் பம்பரம் போலிசைத்தனையே' எனக் கடவுளின் படைப்புத் தொழிலை வியக்கிறார் கவிஞர். கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முன்னோடி அருள் தொண்டரான வீரமாமுனிவரின் அற்புதமான கீர்த்தனை ஒன்றுதொகுப்பில் இடம் பெற்றுள்ளது.  ஜகநாதா குருபரநாதா(41) எனத் தொடங்கும் பாடலில் 'தனையர் வல்நோயைக் கண்டதாயார் மருந்துட்கொண்ட தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே' என்று இறையன்புக்கு இனிய உவமை கூறுகிறார் கவிஞர். இன்னொரு கீர்த்தனையில் சொல்லொண்ணாத் துன்பம் சகித்த இயேசுவின் திருமேனிக்கு நொய்ய உழுத நிலத்தை உவமைகாட்டுகிறார் இன்னொரு கவிஞர்.(48) கீர்த்தனைக் கவிஞர்களின் வருணனைத் திறத்துக்கு ' தோத்திரம் செய்வேனே', 'இத்தைரைமீதினில் வித்தகனாயெழுந்த' முதலிய பாடல்களிலிருந்து சான்று காட்டி விளக்கலாம் பல்வேறு கீர்த்தனைகளில் இடம்பெறும் நெஞ்சை அள்ளும் அற்புதமான சொல்லாட்சிகளையும் தொடர்களையும் பட்டியலிட்டால் அதற்கோர் முடிவிராது. தேசோ மயத்தாரகை(23). ஆதத்தின் தீதற்ற மனுவாலர் (86) உதிரவேர்வை (44) ஆவீட்டில் ஏர் காடுதேவாட்டுக்கு (26) காமருதேங்கனிவாய்கள்(38) முத்தர்குழம்(328) சேனைகளின் கர்த்தரின் திருவிலம்(288) சிக்கடர்துன்மனம் எனச் சொல்லிக் கொண்டே செல்லலாம். பல்வேறு அணிநயங்களை உள்ளுறுத்தித் தம்பாடல்களை அமைத்துள்ளனர் அப்பாவலர்கள். ஆ! என்ன இது! வானம் பூமியோ! பராபரன் மானிடம் ஆனாரோ!(27) என்ற தொடர் அணிநலஞ்சான்ற‌து. இலக்கியச் சுவைகளின் களஞ்சியமாக இலங்குவன இக்கீர்த்தனைகள்.


3. இசை நோக்கு :

கிறிஸ்தவ கீர்த்தனைகளின் தமிழ் மரபுகளையும் இலக்கிய நயன்களையும் காட்டும் நேரத்தில், அவற்றின் இசைச் சிறப்புகளைக் கொடிட்டுக் காட்ட மறந்திடலாகாது. கீர்த்தனைகள் என அவை பெயர் பெறுவதே. அவை மரபுவழிப்பட்ட தமிழிசை தழுவினிற்கும் காரணத்தாலேயே, பல்வேறு கருநாடக சங்கீத மரபுவழிப்பட்ட இராகங்களிலும் பண்களிலும் தாளங்களிலும் அவை பொருத்தமுற அமைந்துள்ள பொலிவினை இசைநூல் வல்லார் பலவாறு பேசுகின்றனர். இக்கட்டுரையாளர் அவற்றின் ஆழங்களைச் சொல்லும் திறனும் பயிற்சியும் பெற்றிலாமையாலும் இடச்சுருக்கம் கருதியும் இங்கி அவை விவரிக்கப்படவில்லை. எனினும் 'கதிரவன் எழுகின்ற காலையில்' என பூபாளராகத்தில் புறப்படும் கீர்த்தனையும் 'எங்கே சுமந்து போகிறீர்' எனப் புன்னாகவராளிப் பண்ணில் உள்ளமுருக்கும் கீர்த்தனையும் எத்துணை பொறுத்தமான பண்களில் அமைந்து நம் சிந்தையைச் சிறைபடுத்துகின்றன எனக் குறிப்பிடாமல் இருக்கவியலாது. மரபுவழிபட்ட பண்களே அன்றி நாட்டுப்பாடல் போக்கில் அமைந்த 'பெத்தலகேம் ஊரோரம்'(32) 'ஆர் இவர் ஆராரோ'(33) போன்ற பாடல்களும் உள்ளன. கும்மி, தாலாட்டு வகையினவாக இவற்றைக் கொள்ளலாம்.


4. மறைநெறி நோக்கு :

இனிக் கிறிஸ்தவக் கீர்த்தனைகள் விவிலியத் திருமறை உண்மைகளைப் பிழிந்து சாறாகத் தரும் சத்தியப் புதையல்களாக உள்ளதையும் சுட்ட வேண்டும். ஆழ்ந்த விவிலிய உண்மைகளை அடுக்கடுக்ககவும் வெளிப்படுத்துவதைப் பல பாடல்களில் காண்கிறோம். சான்றாக 'சருவலோகாதிபா நமஸ்காரம்'(5) 'துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே'(7) முதலிய பாடல்கள் மூவர் ஒருவராக விளங்கும் கடவுளின் இயல்புகள் எளிய முறையில் தெளிவுபடுத்துகின்றன. 'எனது கர்த்தரின் ராஜரீகநாள்'(74) என்ற பாடல். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி புதிய ஏற்பாட்டு நிருபங்கள், ஏசாயா நூல் வெளிப்படுத்தினவிசேடம், முதலிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உண்மையகளையும் அழகுறத் தொகுத்தளிக்கின்றது. அவ்வாறே 'தேவதேவ ஓர் ஏகவஸ்து'(90) என்ற கீர்த்தனை. தேவ லட்சணங்களைப் பற்றிய வேதவிளக்கங்களை நயமுறக் கூறுகிறது. வெள்ளை அங்கிகள் தரித்த விமல முத்தர்(327) என்ற பாடல் வெளிப்படுத்தின நூலில் கூறப்படும் பரலோக ராஜ்ஜியத்தின் வருணனைகளைக் கவிந‌யம் படக்கட்டுரைக்கிறது. 318 ஆம் கீர்த்தனை, சங்கீதம் 128இன் பாடல் வடிவம், 254ஆம் கீர்த்தனை, 1கொரிந்தியர் 13 ஆம் அத்தியாயத்தையும் கீர்த்தனை 252, ஆண்டவரின் மலைப்பொழிவையும் பாடல்வடிவில் வடித்தளிக்கின்றன. "கீர்த்தனைகளால் புத்தி சொல்லிக் கொள்ளக் கடவீர்கள்" (எபேசியர் 5:19) என்ற விவிலிய வாசகத்தின் நிறைவேற்றமாக இப்பாடல்கள் அமைகின்றன.

5. அறநெறி நோக்கு :

கீர்த்தனைகள் தெய்வீக உண்மைகளை வெளிப்படுத்துவதும் இறைவனைப் போற்றி வழிபடுவதுமான முதற்பயன்கள் உடையனவே. எனினும் சமுதாய அறங்களையும் நடைமுறை வாழ்வியலுக்குத் தேவையான அறிவுரைகளையும் அவை வெளிப்படுத்தாவிடில், அவை மக்களுக்கு நடைமுறைப்பயன் நல்காதுபோகும். முழுமையான நிறைவாழ்வையே கிறிஸ்து பெருமான் வலியுறுத்தினார். அவரைப் போற்றும் வழிபாட்டுப் பாடல்களிம் அத்தன்மையைப் பிரதிபலிப்பதே பொருத்தமானதும் பொருளுடையதுமாகும். சில சான்றுகள் காண்போம். 'தொண்டு செய்ய தோழரே! துடிப்புடன் செல்வோம்(395) என்ற கீர்த்தனை, விசுவாசிகள் செய்ய வேண்டிய சமுதாயப் பணிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. 'எங்கும் புகழ் இயேசுராசனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே'(397) என்ற பாடலில் 'கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு கடன்பட்டவர் கண்திறக்கவே'! எனக்கூறப்பட்டுள்ளது. 'கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்கசட‌ர்குத்தூக்கு மரம் அங்கே உண்டாம்' என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்வரியை இது நினைவூட்டுகிறது, "இயேசுவுக்கு நமது தேசத்தை சொந்தமாக்கும்" போது அங்கு தீய மாமூல் வழக்கம் ஓயவேண்டும்(371) எனப்பாடுகிறார் இன்னொரு பாடகர். 'எது வேண்டும் சொல் நேசனே'(262) என்ற பாடல், குடிகெடுக்கும் குடியைக் கடிந்துரைக்கும் திறம் அறிவோம். இப்படிப் பல சமுதாய மேம்பாட்டுக் கருத்துக்கள். நமது கீர்த்தனைகளில் மலிந்து கிடக்கின்றன.


6. சமய ஒருமை நோக்கு :

தமது கீர்த்தனைப் பாடல்கள் சிலவற்றைக் கூர்ந்து நோக்கினால், அவை கிறிஸ்தவ சமயம் சாராத பிறசமயத்தவரும், எச்சமயமும் சாராத‍‍ - இறை நம்பிக்கையுடையோரும் பாடக் கூடிய சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளாக விளங்குவதையும் காணலாம். ஒருசில கீர்த்தனைகளில் ஓரிரு சொற்களை மட்டும் நீக்கிவிட்டால், அவை பொதுவான இறை வழிபாட்டு ‍- ‍இறை வணக்க - இறைவேண்டல் பாடல்களாக அமைவதையும் காணமுடியும், சில சாண்றுகள் வருமாறு:

அ. சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமியமும் இலதாய் (1)

ஆ. சீர்மிகுவான் புவிதேவா (6)

இ. நெஞ்சே நீ கலங்காதே (232)

ஈ. ஆத்துமமே என் முழு உள்ளமே (78)

உ. எத்தனை நாவால் துதிப்பேன் (108)

ஊ. கருணாகர தேவா (338)


இக்கீர்த்தனைகளின் ஆசிரியர்கள் பிறசமயத்தவரையும் உளங்கொண்டே இப்பாடல்களைப் புனைந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலை.


7. சபை நெறி நோக்கு :

நமது கிறிஸ்தவக் கீர்த்தனைகளை இதுகாறும் கூறப்பட்ட பல்வகை நோக்குகளே அன்றி. நமக்கு மிகவும் நேரடியான அண்மையான ஒரு நோக்கிலும் பார்க்கலா,. அதனைச் "சபை நெறி நோக்கு" எனலாம். அதாவது, நமது திருச்சபை ஒழுங்குகளையும் நியமங்களையும் நாம் தெளிவுறப் புரிந்து, அவற்றின் உட்கருத்துக்களை உணர்ந்து, அவற்றைக் கடைபிடிக்க நமக்கு வழிகாட்டும் கீர்த்தனைகள் பலவுள. சான்றாக, குழந்தைகள் பெறும் திருமுழுக்கைப் பற்றிய உண்மைகளை, 'இந்த குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்'(300) 'ஞானஸ்நானமா ஞானத்திரவியமே'(302) போன்ற கீர்த்தனைகளும் திடப்படுத்தல் பற்றி "என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்" (22) என்ற பாடலும் காணிக்கை. தசமபாகம் தருதல் முதலிய ஒழுங்குகளை "காணிக்கை தருவாயே"(278) என்ற பாடலும் ஓய்வுநாள் ஆசரிப்பைப் பற்றி "ஓய்வுநாள் இது மனமே"(340) போன்ற பாடல்களும் திருவிருந்து பற்றி "கர்த்தரின் பந்தியில் வா(306) போன்ற கீர்த்தனைகளும் தெள்ளத் தெளிவாக நமக்கு உணர்த்தி நிற்கின்றன அல்லவா?


இவ்வாறு பன்முகப் பரிமாணம் கொண்ட பைந்தமிழ்ப் பனுவல்களாக - பக்திப் பாசுரங்களாக விளங்கும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் பன்முக நோக்கில் கண்டு நாம் பாராட்டுதல்தகும். இந்த கிடைத்தற்கரிய அருட் செல்வங்களை - ஆண்மீகப் புதையல்களை நாம் நன்கு பயன்படுத்தி இறையுணர்வும் அறவுணர்வும் பெறுவதுடன், தமிழ் கூறு நல்லுலகம் முழுவதும் இவற்றால் பயன் பெறுமாறு இவற்றைப் பாடிப்பரவுவோம்! பலவாறு பரப்புவோம்!


ஆசிரியர் குறிப்பு: முனைவர் மோசஸ் மைக்கல் ஃபாரடே, சென்னை கிறிஸ்தவக் கல்லூரித் தமிழ் துறைத்தலைவர், கவிஞர், ஆராய்ச்சியாளர், அருளுரையாளர். தரு, ஒன்றே வழி இதழ்களின் ஆசிரியர். நல்ல பேச்சாளர்.

கட்டுரைக் குறிப்பு: தமிழும் கிறிஸ்தவமும் கருத்தரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை (2001) கிறிஸ்தவ இலக்கியப்பேரவை சென்னை

Post a Comment

0 Comments