Header Ads Widget

Responsive Advertisement

ஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி

சில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. எனக்கும் மிகவும் பிடித்த மிஷனரிகளில் ஒருவர் ஜிம் எலியட் அதனால் அவரக் குறித்து எழுதுவது நன்மையாகக் கண்டது. இனி அவரைக்குறித்து பார்ப்போம்...

ஜிம் எலியட் அக்டோபர் 8 1927  - ‍ ஜனவரி 8 1956
அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியின்(Benson Polytechnic High School) மாணவனாக இருந்த ஜிம் எலியட் மாணவத் தலைவராகவும், சிறந்த மல்யுத்த‌ வீரராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த ஜிம் எலியட்டின் வாழ்க்கையில், அக்டோபர் 28, 1949 அன்று திருப்புமுனை ஏற்பட்டது ஆம் அன்றுதான்  "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்" (லூக்கா9:24.) என்ற வேத வசனம் தன்னோடு கூட பேசுவதை அறிந்துக்கொண்டார். கல்லூரி ஜெபக்குழுவில் ஈக்வேடார் குறித்தும் அந்த மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அவர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் கேள்விப்பட்ட போது தன்னுடைய எல்லா ஆசைகள் கனவுகளையும் விட்டொழித்து  ஈக்குவேடார் நாட்டுக்கு மிஷனரியாகப் போக தீர்மானித்தார்..

பெற்றொர் நண்பர்கள் எல்லாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் முடிவு நல்லது தான் ஆனால் ஏன் வெளிநாட்டுக்குப் போய் செய்ய வேண்டும்? அமெரிக்காவிலேயே செய்யலாமே? என்று பாசப் போராட்டம் நடத்தினார்கள், அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் அதிகம், வேதமும் எளிதாக கிடைக்கிறது அவர்களுக்கு சுவிஷேசம் சொல்ல வேண்டுவதில்லை, அவர்களது வீடுகளில் உள்ள வேதாகமங்களின் மேல் படிந்திருக்கும் தூசியே கடைசி நாட்களில் அவர்களுக்கெதிராக சாட்சிகொடுக்கும்.. நான் கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத மக்களிடயே சுவிஷேசம் சொல்லவே விரும்புகிறேன் என்று சொல்லி ஈக்குவேடார் செல்ல தீர்மானித்தார்.

அதன்படி பிப்ரவரி 21, 1952 ஆம் ஆண்டு மிஷனரியாக தன்னுடைய கல்லூரி தோழன் பீட்டர் ஃபிளமிங் (Peter Fleming) ‍ என்பவருடன் ஈக்வேடார் நாட்டுக்கு சென்றார், அங்கு நேட் செயின்ட் (Nate Saint) எட் மெக்கல்லி (Ed McCully) மற்றும் ரோஜர் யொடரையன் (Roger Youderian).. ஆகிய உடன் ஊழியர்கள் ஜிம் எலியட்டுக்கு கிடைத்தார்கள் இவர்கள் ஈக்வேடாரில் கீச்சுவா இந்தியர்கள்(Quechua Indians) மத்தியில் ஊழியம் அனுப்பப் பட்டிருந்தனர்,

திருமணமும் குழந்தையும்,
தனக்கிருக்கும் திறமையையும், படிப்பையும் கிறிஸ்துவின் பொருட்டு நஷ்டமென்று எண்ணி மிஷனரியாக வசதிகளற்ற ஈக்குவேடார் காடுகளுக்குச் சென்ற ஜிம் எலியட் 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாளில் செவிலியராகப் பணி புரிந்த எலிசபெத் ஹோவர்ட் என்பவரை மணமுடித்தார். இந்தத் தம்பதிகளுக்கு வாலெரியே (Valerie) என்ற பெண் குழந்தை பிப்ரவரி 27, 1955 ஆம் ஆண்டு பிறந்தது, இவர்கள் ஈக்குவேடாரின் கிட்டோ (Quito) வில் தங்கியிருந்து தேவனுக்கென்று ஊழியம் செய்து வந்தார்கள்

ஆக்கா(Auca) இந்தியர்கள்
அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தங்களுக்கு இருந்த சொற்ப வசதிகளை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு, மந்திரம் மூட நம்பிக்கைகளில் உழண்று கொண்டிருந்த அம் மக்களுக்கு மருத்துவம், கல்வி, மற்றும் சுவிஷேசம், என்று சகலத்திலும் அவர்களுக்கு சேவை செய்து வந்தார்கள், கீச்சுவா இந்தியர்கள்(Quechua Indians);  அடர்காடுகளில் வாழும் ஆக்கா இந்தியர்களைக் குறித்து மிகவும் அஞ்சினார்கள், ஆக்கா இந்தியர்கள் மற்றவர்களுக்கு பயந்து அடர்காடுகளில் வசித்தார்கள், மிகவும் முரடர்கள், கொலை மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த ஒரே செயல், பிற இணத்தாரை மட்டுமல்ல தன் சொந்த மக்களையும் சிறிய காரணங்களுக்காக கொல்லக் கூடியவர்கள்.. ஆடையணியாத காட்டு மிராண்டிகள்... மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகளைக் கொண்டு பதுங்கித் தாக்கிக் கொல்வதில் வல்லவர்கள் ஈக்வேடாரின் சட்ட திட்டங்கள் எதுவும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை..

பரிசுப் பொருட்கள் வழங்குதல்
ஜிம் எலியட் உட்பட ஐவருக்கும் ஆக்கா இந்தியர்களைக் குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்கும் சுவிஷேசம் சொல்லி அத்தும ஆதாயம் செய்யவேண்டும் என வாஞ்சித்தார்கள்.. தங்களுடைய இந்த திட்டத்தை வெளியே சொன்னால் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இதற்கு முத்தையா நூற்றாண்டுகளில் மிஷனரிகளாகச் சென்ற யாரையும் ஆக்கா இந்தியர்கள் உயிருடன் விட்டதில்லை என அறிந்து தங்கள் மனைவிகளைத் தவிர வேறு யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.. ஆக்கா என்றால் கீச்சுவா மொழியில் காட்டுமிராண்டி என்று பெயர், இந்த ஐவரும் ஒரு சிறு விமானத்தில் ஆக்கா இந்தியர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் அடர்காடுகளில் பல நாட்கள் அலைந்து ஆக்கா குடியிருப்புகளைக் கண்டு பிடித்தார்கள். அம்மக்களின் குடியிருப்புகளுக்கு மேலாக வட்டமடித்து அவர்களின் கவனத்தை கவர்ந்தார்கள் ஆக்கா இந்தியர்களும் கூரை மேல் ஏறி இவர்களை வேடிக்கை பார்த்து ஆர்பரிப்பார்கள், மிஷனரிகள் அவர்களுக்கு ஆடைகள் மற்றும் கத்திகள் போன்றவற்றை மேலே விமானத்திலிருந்து வட்டமடித்த படியே கயிறுகள் வழியாக கூடையில் வைத்து இறக்குவார்கள் அடுத்த முறை ஆக்கா மக்கள் அந்த ஆடைகளை அணிந்திருப்பார்கள், அடுத்த முறை புது புது பொருட்களை பரிசாக கொடுப்பார்கள், ஒரு முறை ஒரு ஆக்கா இந்தியன் மிஷனரிகள் கயிறு மூலம் விமானத்திலிருந்து அனுப்பிய கூடையிலிருந்து பரிசுப்பொருட்களை எடுத்துக்கொண்டு, சுட்ட குரங்கின் வால் போன்ற சில உணவுப் பொருட்களை வைத்தான். இப்படியாக அவர்களுடனான நட்பு வளர்ந்தது,

ஆக்கா இந்தியர்களை சந்திக்கச் செல்லுதல்
கிச்சுவா இந்தியர்கள்(Quechua Indians) வாழ்ந்தபகுதியில் ஆக்கா இந்தியர்களிடமிருந்து தப்பி வந்த ஆக்கா இளம் பெண் டையுமா(Dayuma) என்பவரிடம்; ஆக்கா இந்தியர்கள் குறித்தும் அவர்களது கலாச்சாரம் மொழி போன்றவற்றை மிஷனரிகள் கற்றுக்கொண்டார்கள், ஆக்கா இந்தியர்கள் குடியிருப்பு அமைந்திருந்த குராரை (Curaray) ஆற்றங்கரை அருகில் சிறிய விமானத்தை இறக்க வசதியான இடம் ஒன்றில் விமானத்தைத் தரையிறக்கினார்கள்., அந்த அடர் காடுகளில் இறங்கி கிடைத்த சொற்பமான வசதிகளைக் கொண்டு ஒரு மரத்தில் வீடு ஒன்றை எளிமையாகக் கட்டிக்கொண்டார்கள், அருகாமையில் வாழும் கொலை செய்யும் ஆக்கா காட்டுமிராண்டிகளின் மொழியில் சுற்றும்முற்றும் நடந்தவாரே 'நாங்கள் உங்கள் நண்பர்கள்' என்று குரல் கொடுத்தார்கள்.,

முதல் ஆக்கா மனிதனை சந்தித்தல்
மிஷனரிகள் ஐவரும், குராரை ஆற்றங்கரையில் இறங்கிய செய்தியை தங்கள் மனைவிகள் தங்கியிருந்த இடத்திற்கு செய்தி சொல்லி மகிழ்ந்தார்கள், அப்போது ஆக்கா இந்தியர்களில் ஒரு வாலிபன் அடையணியாத இளம் பெண்கள் இருவரை கூட்டி வந்து மிஷனரிகளிடம் ஏதேதோ அவர்கள் மொழியில் பேசினான்., அந்தப் பெண்களை இவர்களிடம் விற்க முயன்றதாகத் தெரிகிறது, அதன் பிறகு வந்த ஆக்கா மனிதன் தன்னுடன் வந்த பெண்களைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான். மிஷனரிகள் முதல் ஆக்கா மனிதர்களை சந்தித்த மகிழ்ச்சியை கிட்டோவிலே தங்கியிருந்த தங்கள் மனைவிகளிடத்தில் ரேடியோ வழியே பகிர்ந்து கொண்டார்கள்., மீண்டும் மாலை நான்கு மணிக்கு தொடர்பு கொள்வதாகவும், விரைவில் வேறு ஆக்கா மக்களை சந்திக்க ஆவலாய் இருப்பதாகவும் சொன்னார்கள்.,

அடர்காடுகளுக்கு நடுவே விதைக்கப்பட்ட கோதுமை மணிகள்
ஜனவரி 8, 1956 ஆக்கா இந்தியர்களிடம் சுவிஷேசம் அறிவிக்க இரகசியமாக சென்ற ஜிம் எலியட் உட்பட ஐந்து மிஷனரிகளும், அடர் காடுகளுக்கு நடுவே போய் தரையிறங்கிய முதல் நாளின் மாலை வேளையில் சுமார் 60 மைல்கள் தொலைவில் சிறு நகரத்தில் வசிக்கும் தங்கள் மனைவிகளை ரேடியோ மூலம் தொடர்புகொள்வதாக சொல்லியிருந்தபடியால் கீட்டோ நகரில் இருந்த மனைவிகள் மாலை நான்கு மணிக்கு அவர்களின் அழைப்புக்காக ஆவலாய் காத்திருந்தார்கள், ஆனால் அழைப்பு எதுவும் வரவில்லை, மனைவிகள் மிஷனரிகளை தொடர்பு கொள்ள முயன்றார்கள்., ஆனால் பதில் எதுவும் வரவில்லை..

ரேடியோ ஏதாவது பழுதாகியிருக்கும் என்று காத்திருந்தார்கள், ஆனாலும் மௌனமே அந்த இளம் மனைவிகளுக்கு பதிலாகக் கிடைத்தது, அந்த இரவு முழுவதும் கலக்கம் நிறைந்த மௌனமே அந்த 5 இளம் மனைவிகளின் மொழியாக இருந்தாலும், அவர்களிடத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த கிச்சுவா இந்தியர்களுக்கான மருத்துவ சேவையில் எந்த குறையையும் வைக்கவில்லை.,

மறுநாளும் எந்த பதிலும் வராததால் ஏதோ விபரீதம் என்று அறிந்து தங்கள் மிஷனுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தினார்கள், மிஷனைச் சேர்ந்தவர்கள் ஈக்குவேடார் அரசாங்கத்தை தொடர்பு கொண்டார்கள், ஈக்குவேடார் அரசும், அமெரிக்க இராணுவமும் இணைந்து தேடும்பணியை மேற்கொண்டார்கள்., குராரே ஆற்றின் அருகே விமானம் ஒன்று சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள்., அங்கே மிஷனரிகளின் மனைவிகளோடு கூட சென்றார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு அழுகிப்போயிருந்த நான்கு உடல்கள் அங்கொன்றும்  இங்கொன்றுமாக கண்டுபிடிக்கப்பட்டன.. அவர்கள் அங்கேயே விதைக்கப்பாட்டார்கள்..

ஆக்கா மக்களிடையே மாபெரும் எழுப்புதல்
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.(யோவான் 12:24) என்ற வேதவசனம் இந்த மிஷனரிகளின் வாழ்க்கையில் எத்தனை உண்மை என்பதை அறியும் வண்ணமாக, விதைக்கப்பட்ட மிஷனரிகள் அதோடு மறைந்து போகவில்லை., ஆம் அம் மக்கள் மீது அன்பு கொண்ட அந்த மிஷனரிமார்களின் மனைவிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பிப் போய் சுகவாழ்வை அனுபவிக்க விரும்பவில்லை மாறாக ஈக்குவேடாரிலேயே தங்கினார்கள் ஆக்கா மக்களிடம் அருட்பனி செய்தார்கள்.,

காட்டுமிராண்டிகள் என்று அழைக்கப்பட்ட ஆக்கா மக்கள் கொலைத் தொழிலை விட்டு மெல்ல மனந்திரும்பினார்கள்., மிஷன்ரிகள் அந்த மக்களின் பெயரை கிச்சுவா மொழியில் காட்டுமிராண்டிகள் என்று பொருள்படும் ஆக்கா என்ற பெயரை  மாற்றினார்கள் இவர்களது தற்போதைய பெயர் ஹௌரனி(Huaorani) என்பதாகும்., இன்று இந்த மக்கள் இயேசு கிறிஸ்துவை உண்மையான தெய்வம் என்று ஏற்றுக்கொண்டார்கள் மாபெரும் எழுப்புதல் உண்டாகியிருக்கிறது


எலிசபெத் எலியட்
இன்றைக்கும் ஜிம் எலியட்டின் மனைவி எலிசபெத் எலியட் இந்த எழுப்புதல் அருட்பனிக்கு சாட்சியாய் வாழ்ந்துவருகின்றார்கள். அவர் எழுதிய Gateway to Joy, ‍ என்ற புத்தகம் உல்கப் புகழ் பெற்றதாகும், ஜிம் எலியட் மற்றும் மற்ற நால்வரின் வாழ்வின் நடந்த சம்பவங்களை அழகாக விளக்கியுள்ளது அந்தப் புத்தகம் மாத்திரமல்ல இதன் தொடர்ச்சியான புத்தகத்தில் ஆக்கா இந்தியர்கள் இரட்சிக்கப்பட்டதையும் விரிவாக விளக்குகின்றது., இந்தப்புத்தகம் தமிழிலும் வெளிவந்திருக்கிறது நூலின் பெயர்: மகிமையின் வாசல் வழியாய்  - ‍ எலிசபெத் எலியட் தற்போது எலிசபெத் எலியட் அம்மையார் மூப்பின் காரணமாக நேரடி ஊழியத்தில் ஈடுபடாமல் இனையதளம் மற்றும் மின்னனஞ்சல் வழியாக மக்களை சந்தித்து வருகின்றார்கள்

அம்மையாரின் இனைய தள முகவரி:http://www.elisabethelliot.org

Post a Comment

0 Comments