Header Ads Widget

Responsive Advertisement

விட்டுவிடாதே, விற்றுவிடாதே! "விசுவாசம் விற்பனைக்கல்ல" என்று சொல்லிவிடு - கவிதைபத்மு தீவில் வனவாசம் என்றாலும்
ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும்
மதிப்புமிக்க எங்களது விசுவாசம்
விற்பனைக்கல்ல -என்று
மார்தட்டிச் சொன்ன பரிசுத்தவான்கள்
யாரென்றால்
அப்போஸ்தலனாகிய யோவானும்,
பரிசுத்தப் பவுலடியார்களுமே!


இவர்கள் இருவரும்
விசுவாசத்தை விட்டுவிடவுமில்லை
விற்றுவிடவுமில்லை - மாறாக
எங்கள் விசுவாசம் விற்பனைக்கல்ல என்று
சொல்லிவிட்டார்கள்!


தன் புத்திரன் என்றும், ஏக சுதன் என்றும் பாராமல்
தேவ சத்தம் கேட்டு தன் குமாரனைத் தகனபலியிட
ஒப்புக்கொடுத்த
ஆபிரகாமின் விசுவாசத்தைக் கண்டு


ஈசாக்குக்குப் பதிலாக ஒரு ஆட்டுக்கடாவை
அந்த மலை மேல் ஆயத்தம்பண்ணி
வைத்திருந்தாரே
அந்த தேவன் எத்தனை பெரியவர்!


யேகோவாயீரே என்று
அந்த இடத்திற்குப் பெயர் வைத்து
விசுவாசிக்கிற அனைவருக்கும்
கர்த்தருடைய பர்வதத்திலே
விவரமாகப் பார்த்துக்கொள்ளப்படும்
என்று விளக்கமளித்து
நம்மையயல்லாம் பாட வைத்துவிட்டாரே
உலகமெங்கிலும் உள்ள விசுவாசிகளுக்கெல்லாம்
தகப்பனாகிவிட்டாரே.


அந்த மோரியா மலையில் மலைத்து நிற்காமல்
விசுவாசத்தை விட்டுவிடாமல் மகனுக்காக
விற்றுவிடாமல்,
என் விசுவாசம் விற்பனைக்கல்ல
என்று உறுதிபடச் சொல்லிவிட்டாரே!
தலா நுVற்றுப்பத்து வரு­ங்கள் வாழ்ந்து
இறுதி மூச்சு வரை உறுதி காத்து, உயிர் காத்து
விசுவாசத்தை முன்வைத்து வாழ்ந்து காண்பித்து
முன்மாதிரியைப் பின்வைத்துப் போன
யோசேப்பும் யோசுவாவும்
சரித்திரத்தை மாற்றியமைத்த பரிசுத்த புரு­ர்கள்;
இவர்களது அடிச்சுவடுகள் காஷ்மீர் முதல்
கன்னியாகுமரி வரை போடப்பட்ட
அகல ரயில் பாதை போல, வேதாகமத்தின்
பக்கங்களில் நீண்டுகொண்டே செல்லக்கூடியவை!


சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி
வெற்றிக்கொடி பிடித்து வீர நடை நடந்த இவர்கள்
தங்கள் விலையேறப்பெற்ற விசுவாசத்தை
விட்டுவிடவுமில்லை, வந்த விலைக்கு
விற்றுவிடவுமில்லை - மாறாக
எங்கள் விசுவாசம் விற்பனைக்கல்ல என்று
சொல்லிவிட்டார்களே!


ஆவியினாலே ஆரம்பம்பண்ணின
எத்தனையோ பேர்
விசுவாசத்தை விட்டுவிட்டு, விற்றுவிட்டு
மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறார்களே!
இது எத்தனை புத்தியீனம்? (கலா.3:3)


எரிகோவுக்குச் சமீபமாய் இயேசுவானவர் வந்தபோது
விழிகளிலிருந்தும் பார்வையில்லாத ஒருவன்
வழியருகே உட்கார்ந்து பிச்சை
கேட்டுக்கொண்டிருந்தான்  
ஏமாற்றிப் பிழைப்பதைவிட
பிச்சையயடுத்துப்பிழைப்பதில்
பிழை இல்லை என்பது
அவனது அபிப்பிராயம். ஆனால்
அன்றையத் தினம்
தன் காரியம் மாறுதலாய் முடியும் என்றோ
பிச்சைப் பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டு  
இரட்சிப்பின் பாத்திரம்
இலவசமாய் வழங்கப்படும் என்றோ  
அவன் கனவுகூட கண்டிருக்க மாட்டான்.
வீதியில் உண்டான ஜன சப்தம் கேட்டு
இதென்ன என்று விசாரித்தான்,
அந்த அற்பமான  கேள்வி அவனது வாழ்க்கையைப்
புரட்டிப் போட்டுப் புரட்சி செய்துவிட்டது! இது ஓர்
Million-dollar question என்றுகூடச்
சொல்லலாம்.


இதென்ன   என்ற கேள்வியை அவன் கேட்காமல்
அய்யா அம்மா என்று மட்டும் அடம்பிடித்து,
நடைப்பிணங்களைப் பார்த்துப் பைசாக்களை மட்டும்
கேட்டிருந்தால்
காலமெல்லாம் கபோதியாகவே வாழ்ந்திருப்பான்.
பிச்சைப் பாத்திரமே பிரதானமான பாத்திரமாக
இருந்திருக்கும்.


இதென்ன என்ற அவனது கேள்விக்கு
நசரேயனாகிய இயேசு போகிறார்
என்று பதில் கிடைத்தது.
பதில் சொன்ன புண்ணியவாளன் யாரோ?
சிலர் அதையும் மறைத்து,
யார் போகிறார்கள் என்று தெரியாது
யார் போனால் உனக்கென்ன?
நீயே ஒரு கபோதி என்று
போதிக்கவும் தொடங்கிவிடுவார்கள்.


நல்ல வேளை
ஒருவன் உண்மையைச் சொன்னான்.


""நசரேயனாகிய இயேசுவா?''
கிடைத்த பதிலைப் பிடித்துகொண்டு சொற்போர் நடத்தி
முன் நடப்போரைப் பின்னுக்குத் தள்ளி
தன்னைவிட்டுக் கடந்துவிட்ட
கர்த்தரின் காதில் விழுந்துவிட்டான்.


மனிதர்களின் காலில் விழுவதைவிட , தன் சத்தம்
கர்த்தரின் காதில் விழுவதே மேல்
என்பதைத் தெரிந்துகொண்ட மகான் அவன்.
பாவத்தை மன்னிக்க அதிகாரமில்லாதவர்களின்
காலில் விழுவதைவிட,
பாவத்தை மன்னிக்க அதிகாரமுள்ளவரின் காதில்
விழுவதே மேல் என்று எண்ணிவிட்டான்!


முன் நடப்பாரின் அதட்டலை அல்லத்தட்டிவிட்ட அந்த
மாற்றுத்திறனாளியை
இயேசு அல்லத்தட்டவில்லை,
அலட்சியப்படுத்தவில்லை, அதட்டவில்லை.
அல்லத்தட்டுகிறவர்களும்,
அலட்சியப்படுத்துகிறவர்களும், அதட்டுகிறவர்களும்
கண்தெரிந்த குருடர்களே என்பது அந்தக் குருடனின்
புதிய கண்டுபிடிப்பு - காரணம்
குருடருக்குப் பார்வையைப் பிரசித்தப்படுத்தவும்
நொறுங்குண்டவர்களை
விடுதலையாக்கவும் அபிஷேகம் பண்ணப்பட்டு
அனுப்பப்பட்ட ஆண்டவரை
நெருங்கவிடாமல் தடைசெய்கிறார்களே!
நொந்து நுVலாகி நொறுங்கிப்போன
என் உள்ளத்தை நொறுக்குகிறார்களே!
பத்துப் பைசா போட முடியாத இவர்கள்
தடையுத்தரவைப் போடுகிறார்களே!
பார்வையைச் சொந்தமாக்கி அதையே
சொத்தாக்கிக்கொள்ள முயற்சிக்கும்
என்னைப் போன்ற
மாற்றுத்திறனாளியை மட்டுப்படுத்த
நினைக்கிறார்களே! இந்த
எரிகோவில் போடப்பட்ட
மனிதத் தடை உத்தரவை நான் மீறுவேன்,
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று
கூப்பிடுவேன் - என்று
திடீரென்று தெருவில் ஒரு வாகனம் தீப்பிடித்துவிட்டால்
அதன் உரிமையாளர் தீவிரிப்பாரே அதுபோல
தீவிரித்துக் கூப்பிட்டான். சொல்லப்போனால்
அந்த எரிகோ வீதியில் நெருப்புதான்
பற்றிக்கொண்டது.


முன்னொரு நாளில் சாரிபாத் ஊரில் சாப்பிட்டுச்
சாகப்போன விதவையை
கூப்பிட்டுக் குறை தீர்த்த தேவனை
அறிந்திருந்தானோ என்னவோ?
ஏங்கித் தவித்தவன் ஓங்கிக் கூப்பிட்டு  
இயேசுவின் அழைப்பைப் பெற்று
புதிய பார்வையைப் பரிசாகப் பெற்றுக்கொண்டான்.
நடுவழியிலேயே அவனுக்கு
நல்வாழ்வைப் பரிசளித்து
ஒரு ஜோடிக் கண்களைப் புதிதாக ஈந்தாரே, எத்தனை
பெரிய அற்புதர்! அற்புதம்!


அந்தப் புதிய கண்கள் முதன் முதலாக, தடை
செய்தவர்களை அல்ல
புண்ணியரைப் பார்த்து பூரித்தன;
இயேசு அந்த எரிகோ வீதியிலேயே பயணத்தைச்
சற்று நேரம் ஒத்திவைத்து
வீதியிலே ஓர் விழா எடுத்து,
பாராட்டிப் பாடம் நடத்தினார்
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது
என்று சொல்லி
தன்னை மறைத்துக்கொண்டு
விசுவாசித்தவனை வெளிப்படுத்திக் காண்பித்தாரே!

-பாஸ்டர் J இஸ்ரேல் வித்ய பிரகாஷ்

Post a Comment

0 Comments