Header Ads Widget

Responsive Advertisement

நம் அக்கிரமங்களை மன்னித்து ...............................

கட்டுரையை எழுதியவர், சகோ ஜாண்.
கம்பம் என்ற ஒரு சிறு நகரம். அங்குள்ள அரசுப் போக்குவரத்துக் கழக டெப்போவில் அனைவரும் அன்று கலவரத்துடன் காணப்பட்டனர்.காரணம் அங்குள்ள கம்ப்யூட்டர் மதியம் ஒரு மணி அளவில் இயங்காமல் நின்று போனது. திரையில் எதுவுமே வரவில்லை.கணிணியை இயக்கும் மனிதருக்கு ஒன்றும் புரியவில்லை. ஸ்விட்ச்சை ஆன் பண்ணினால் கம்ப்யூட்டர் C.P.U.வில் லைட் எரிகிறது. இயங்கத் துவங்குவது போல் உள்ளே சப்தம் கேட்கிறது.ஆனால் மானிட்டரில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் NO SIGNAL என்ற எழுத்துக்கள் தோன்றி மறைந்து விடுகிறது. அவரும் வயர்கள் ,பிளக்குகள் ஏதாவது லூசாக இருக்குமென்று அனைத்தையும் டைட் பண்ணிப் பார்த்தார். பல தடவை ஆன் பண்ணி ஆஃப் பண்ணினார்.கம்ப்யூட்டரை டமாரெனத் தட்டினார். சண்டித்தனம் செய்யும் கணிணியை மனதிற்குள் திட்டினார்.ஒன்றுமே கதை ஆகவில்லை. அது ஒரு மிகப் பெரிய டெப்போ. இருபத்தேழு நகரப் பேருந்துகளும் , ஐம்பத்து மூன்று புற நகர்ப் பேருந்துகளும் , ஆக மொத்தம் எண்பது பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

மதிய நேரம் மிகப் பரபரப்பானது.ஒரே நேரத்தில் நாற்பது பேருந்துகளின் நடத்துனர்கள் பணி முடித்துப் பணம் கட்ட வருவார்கள். அவர்கள் கொண்டு சென்ற பயணச் சீட்டுக் புத்தகங்கள்,அவர்கள் வழித்தடத்தில் விற்ற டிக்கெட்டுகள், அவர்கள் மிச்சம் வைத்திருக்கும் டிக்கெட்டுகள் ஆகியவற்றைக் கணிணி மூலம் கணக்கிட்டு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பிரின்ட் பண்ணித் தருவார். கடுமையான வேலை. ஒரு மைக்ரோ வினாடி கூட இடைவெளியின்றிப் போராட வேண்டும். கொஞ்சம் தாமதம் செய்தால் கூட நடத்துனர்கள் ஏசுவார்கள்.ஏனென்றால் அவர்கள் பசியுடன் வந்திருப்பார்கள். வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் இருப்பார்கள். இப்போது கணிணி இயங்கவில்லை.

டெப்போவின் கண்காணிப்பாளர் உள்ளூர் சர்வீஸ் எஞ்சினீயரை வரவழைத்தார். ஒரு ஒல்லியான இளைஞன் சாதனங்களுடன் வந்தான். கம்ப்யூட்டரை அக்கு வேறாகக் கழற்றினான்.உள்ளே இருந்த வயர்களைச் சரி பார்த்தான். ராம்களைப் பிரித்தான்.சோதித்தான். கடைசியில் சொ்ன்னான் “ மதர் போர்டு ஹேங் ஆகி விட்டது.என்னால் இங்கு சரி பண்ண முடியாது. வேண்டுமென்றால் என் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்று முயற்சி செய்கிறேன்”. நாங்கள் “வெளியே எடுத்துச் செல்ல எமது கம்பெனி விதிகள் அனுமதிக்காது ” என்று கூறி விட்டு திண்டுக்கல்லில் உள்ள தலைமை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தார்கள். அங்கிருந்து எப்போது ஆள் வந்து எப்பச் சரி செய்யுறது? நடத்துனர்கள் முனகத் துவங்கினர்.
“ எப்ப சார் சரி பண்ணுவீங்க ? பணத்தை வீட்டுக்குக் கொண்டு போகவா ?” என்று ஒரு ஆள் கேட்டது தான் தாமதம் எல்லோரும் ”கிளம்புங்கப்பா ! மேனேஜர் கிட்டச் சொல்லிட்டு அவங்க அவங்க வீடுகளுக்குப் போய்ச் சேர்வோம். கம்ப்யூட்டர் சரியானதும் வந்து கட்டுவோம் ” என்று கூறி கூட்டமாகப் போய் கிளை மேலாளர் அறையில் நுழைந்தனர்.கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தான் பொது மேலாளர் அலைபேசியில் கிளை மேலாளரைத் திட்டு திட்டு எனத் திட்டித் தீர்த்திருந்தார்.அந்தக் கடுப்பில் இருந்த மேனேஜர் இவர்களைக் கண்டு மிரண்டு போனார்.விஷயம் சொன்னார்கள். மேனேஜர் கணிணிப் பிரிவிற்குள் வந்து “கம்ப்யூட்டரை என்னய்யா செஞ்ச ! எதையாவது நோண்டிக் கெடுத்திட்டியா ?”என்று உஷ்ணமாகக் கத்தினார். ஒரே குழப்பம். அப்போது ஒரு அலுவலக ஊழியர் “ எனக்குத் தெரிந்த கம்ப்யூட்டர் சென்டர்ல சொல்லி ஏதாவது கணிணி வாங்கி வர்ரேன். நம்ம கணிணியின் ஹார்ட் டிஸ்க்கை அதில் மாற்றி வைத்து வேலை செய்வோம் ” என்று ஆலோசனை சொன்னார். அதாவது இந்தக் கணிணியின் மூளையை எடுத்து இன்னொரு கணிணியின் தலையில் சொருகுவது.

சரி என்றார் மேனேஜர். வேறொரு கணிணி வரவழைக்கப் பட்டது. ஹார்ட் டிஸ்க் கழற்றப்பட்டு அதில் பொருத்தப்பட்டது. அதிர்ச்சி.அப்போதும் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை.நடத்துனர்கள் கொதித்துப் போய் கோஷமிடத் துவங்கினர். அப்போது அங்கு தற்செயலாக பக்கத்துக் கிளையிலிருந்து ஒரு ஊழியர் வந்தார்.அவர் “ இங்க பாருங்க ! U.P.S.ல் பவர் இல்லாம இருக்கு. மின்சார அழுத்தத்தைக் காண்பிக்கும் முள் கீழ வந்து விட்டது ” என்றார்.

கணணி ஆப்பரேட்டர் ஓடிப் போய்ப் பார்த்தார். கணிணியின் U.P.S பழுதடைந்து போய் இயக்கமின்றிக் கிடந்தது. இந்தச் சாதனத்தின் வேலை என்னவென்றால் மின்சாரத்தைச் சீராக கணிணிக்கு வழங்கும். திடீரென மின்தடை ஏற்படும் 
பட்சத்தில் பேட்டரிகளிலிருந்து மின்சாரத்தை

எடுத்து கணிணிக்கு ஊட்டி விடும். இதற்காகவே பெரிய பேட்டரிகள் நான்கு அங்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த U.P.S ல் பிரச்சனை ஏற்பட்டு மின்சாரம் குறைந்த அளவே கணிணிக்குச் சென்றுள்ளது. லோ வோல்டேஜினால் கணிணி இயங்கவில்லை. அதைக் கவனிக்காமல் மதர்போர்டு , ஹார்ட் டிஸ்க் என்று எதை எதையோ சொல்லி நிலவரத்தைக் கலவரமாக்கி விட்டார்கள். கடைசியில் ஒரு எலக்ட்ரீஷியன் வரவழைக்கப் பட்டார். U.P.S ஐச் சரி செய்தார். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கணிணி உற்சாகமாக இயங்கத் துவங்கியது.

கிறிஸ்துவிற்குள் பிரியமான சகோதரரே ! நமக்கும் வியாதிகள் வருகின்றன. நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகின்றன. அந்த நோய்களுக்கான காரணத்தையும் ,அவற்றிற்கான தீர்வையும் தேடி அலைகிறோம். மருத்துவ விஞ்ஞானம் ஆயிரக் கணக்கான வியாதிகளையும் ,அவற்றிற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறது. வயிற்றில் அல்சரா ? நேரா நேரத்திற்குச் சாப்பிடாததன் விளைவே அது. சிறுநீரகத்தில் கல்லா ? சரியாகத் தண்ணீர் குடிக்காததே காரணம். இதயத்தில் அடைப்பா ? எண்ணெய்ப் பதார்த்தங்களையும் , கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்பதே காரணம்.இப்படி கணக்கிலடங்காக் காரணங்கள். ஆனால் உண்மையில் நோய்கள் ஏன் வருகின்றன? சங்கீதம் 107 : 17 ல் இவ்வாறு சொல்லப் படுகிறது “நிர் மூடர் தங்கள் பாதக மார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய் கொண்டு ஒடுங்கிப் போகிறார்கள்”.

நமது பாவங்களாலும் , நாம் புரியும் அக்கிரமங்களாலுமே வியாதிகள் உண்டாகின்றன.எனக்கு சரீரத்தில் பலப் பல வியாதிகள் இருந்தன. எனது 2002ம் ஆண்டு டையரியின் ஆகஸ்ட் மாதத்துத் தேதி ஒன்றில் “நான் சீக்கிரம் மரிக்கவே போகிறேன்.என் மனைவி , குழந்தைகளை ஆண்டவர் காப்பாராக” என்று எழுதி வைத்து மரணத்திற்காகக் காத்திருந்தேன். வேதத்தை வாசிக்கையில் பாவ எண்ணங்களே வியாதிகளை வரவழைக்கும் கிருமிகள் என உணர்ந்து எனது அக்கிரம சிந்தைகளிலிருந்து விலகினேன். இன்று நான் ஒரு ஆரோக்கியமான மனிதன்.எந்த வைத்தியரும் , மருந்தும் தேவையின்றி ஜீவ வைத்தியராம் கிறிஸ்தேசுவை மட்டுமே நம்பி வாழ்கிறேன்.
நம்மிலிருக்கும் பொறாமை ,பெருமை ,கோபம் போன்ற பாவங்களை நம் சிந்தையிலிருந்து கழற்றி விடும் போது நம் வியாதிகள் நம்மை விட்டு ஓடிப் போகின்றன. மாறாக நாம் பார்வோன்களை நாடி ஓடுகிறோம்.பெரிய மருத்துவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று பொய்யாக நம்புகிறோம். எனது ஊரில் ஒரு பிரபல டாக்டர் உண்டு. அவர் பெயர் “ரெண்டு ஊசி பழனிச்சாமி” அதாவது ஐந்து ரூபாய்க்கு ஒரு ஊசி போடுவார். நாம் பத்து ரூபாய் தந்தால் பாக்கி தருவதற்கு சில சமயங்களில் அவரிடம் ஐந்து ரூபாய் இருக்காது. உடனேயே நம்மை அருகே அழைத்து இன்னொரு ஊசி போட்டு “ இனி நான் மீதம் தரத் தேவையில்லை ”என்பார். மிகவும் கைராசியான டாக்டர். ஆனால் அவருக்கே ஒரு பயங்கரப் பிரச்சனை வந்தது. இடுப்பிலும் ,கால்களிலும் பயங்கர வலி. பல மாத்திரை ,மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் தண்டவடத்தில் சவ்வு விலகியுள்ளது. ஒரு சோகம் என்னவென்றால் ஆங்கில மருத்துவத்தில் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது.தற்காலிகமாக வலி குறைக்கும் மருந்துகள் மட்டுமே உண்டு. டாக்டர் பார்த்தார். கிளினிக்கை இழுத்து மூடினார். படுத்த படுக்கையானார். அப்போது ஒரு நண்பர் “மைசூர் அருகே ஒரு நாட்டு வைத்திய்ர இருக்கிறார்.நரம்பு ,எலும்பு சம்பந்தமான எல்லா வலிகளையும் தீர்த்து வைப்பார் ”என்று சொன்னதைக் கேட்டு மைசூர் போய் அந்த ஊரைக் கண்டுபிடித்து நாட்டு வைத்தியர் காலில் மடாலென விழுந்திருக்கிறார். “ ஐயா ! நான் ஒரு எம்.டி. படித்த டாக்டர். ஆனாலும் என் வலிகளை என்னால் போக்கிக் கொள்ள முடியவில்லை. தயவு செய்து என்னை வலிகளற்ற மனிதனாக மாற்றுங்கள் ” என்ற கதறி அழுதிருக்கிறார். நாட்டு வைத்தியருக்கு ஒரே மகிழ்ச்சி.நம்ம காலில் பெரிய டாக்டர் ஒருத்தர் விழுந்துட்டாரே என்று.

பழனிச் சாமியைப் படுக்கப் போட்டு தண்டவடத்தில் ஏதோ செய்து விட்டு, ஒரு தைலம் தந்து கை,கால்களி்ல தடவச் சொல்லியுள்ளார். இரண்டு மாதங்கள் சாப்பிடுவதற்கு மருந்து தந்துள்ளார். டாக்டரும் நம்பிக்கையுடன் திரும்பினார். ஆனால் சுகம் கிடைக்கவில்லை. இதை வாசிக்கும்
சகோதரனே ! உலக டாக்டர்கள் இப்படித் தான். தங்களையே சரி பண்ணிக்கொள்ள முடியாது அவர்களால். அப்படிப் பட்ட வைத்தியர்களை நம்ப வேண்டாம். “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன் நோய்களையெல்லாம் குணமாக்குவார் ” என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான்.

ஆகவே நம் பாவங்களையும் ,அக்கிரமங்களையும் அறிக்கையிடுவோம். விட்டு விடுவோம்.நம்மை வாட்டும் நோய்களிடமிருந்து விடுதலை பெறுவோம்.

Post a Comment

0 Comments