Header Ads Widget

Responsive Advertisement

கைவிடாத கர்த்தர் (புதுவருட சிறப்புச் செய்தி சகோ D.G.S ‍ தினகரன்)

"...நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை..." (எபி 13:5)

புத்தாண்டிற்குள் பிரவேசித்திருக்கிற நமக்கு ஆண்டவர் அருளும் அருமையான வாக்குத்தத்தம் இது, ஆண்டவர் தாமே உங்கள் ஓவ்வொருவரையும் ஆசீர்வதித்து, இந்த ஆண்டில் இதுவரைக்கும் நீங்கள் பெற்றிராத நன்மைகளை, ஆசீர்வாதங்களை பெருமழைபோல் பொழியவேண்டும் என்று நான் அவரை வேண்டிக்கொள்கிறேன்.

கண்களைக் கலங்க வைக்கும் ஒரு சரிதை வேதத்தில் உன்டு. "நகோமி" என்ற ஒரு யூதப் பெண் தன் கணவனோடு மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தாள். அவளுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள், ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன், அவர்கள் இருவரும் அந்த நாட்டில் பெண் கொண்டார்கள், அதன்பின் இன்பமாக வாழ்ந்த அவர்களுடைய வாழ்க்கையில், ஒன்றன் பின் ஒன்றாய் பேரிழப்புகள் வந்தன. முதலாவது, அவளது கணவன் எலிமெலேக்கு இறந்து போனான். அதன் பிறகு அவளுடைய இரண்டு குமாரர்களும் இறந்து போனர்கள். நகோமி தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளாகி, தன் மருமக்களான ஓர்பாள், ரூத் இருவரோடுங்கூட தனித்து நின்று அழுது புலம்புகிறாள். அவளோடு கூட அவர்களும் அழுகிறார்கள். அவளுடைய மருமக்களில் ஒருத்தியாகிய ஓர்பாள் தன் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றாள். ஆனால் மற்ற மருமகள் ரூத்தோ தன் மாமியாகிய நகோமியை விட்டுவிடாமல் பற்றிக்கொண்டாள் என்று வேதம் கூருகிறது(ரூத்1:14) அப்பொழுது நகோமி: " இதோ உன் சகோதரி ஓர்பாள் தன் ஜனங்களிடத்துக்கு திரும்பிப் போய்விட்டாளே, நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ" என்று கெஞ்சியபொழுதும், ரூத் கண்ணீரோடு நகோமிமீது வைத்திருந்த அன்பினிமித்தமாக பின்வருமாறு கூறினாள்:


"...நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம், உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வெறொன்றும் உம்மைவிட்டு என்னைப்பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகயாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்" (ரூத்1:16,17).

இதன்பிறகு, இருவரும் செர்ந்து நகோமியின் சொந்த ஊரான பெத்தலெகேமுக்குத் திரும்பிச் சென்றனர்.


பலவருடங்களுக்கு முன்பு, ஒரு தாய் எனக்கு பிவருமாறு கடிதம் எழுதியிருந்தார்கள். "ஐயா, எனக்கு கணவன் இல்லை. ஒரே ஒரு மகன், அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஏற்ற வேளையில் ஓர் அழகிய ஆண் குழந்தையை அவன் மனைவி பெற்றெடுத்தாள், அந்தக் குழந்தையின் வரவால் என் உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகித்தது. நான் இன்பத்தில் மூழ்கியிருந்த வேளையில் திடீரென என்னுடைய ஒரே மகன் மரித்துப் போனான். என் உள்ளம் சுக்கு நூறாக உடைந்துபோனது, என்னுடைய பேரக்குழந்தையைப் பார்த்தால் மகனைப்போலவே இருப்பான். நான் அவனைப் பார்த்துதான் ஓரளவு ஆறுதல் அடைகிறேன். என்றாலும், என் மருமகளைப் பற்றி எனக்கு அதிகக் கவலை. அவள் இளவயதுள்ளவள். ஆகவே, அவள் தன் சொந்த வீட்டிற்கு சென்று, தன் பெற்றோரோடு தங்கி, மறுபடியும் திருமணம் முடித்து இன்பமாக வாழ வேண்டும் என்ற விருப்பத்தில், "மகளே நீ போய் உன் பெற்றோரோடு வாழ்ந்து, மறுமணம் செய்துகொள், இந்தக் குழந்தையோடு இன்பமாக வாழ்" என்று ஒவ்வொரு நாளும் நான் அவளை வர்புறுத்துகிறேன். ஆனால் அவளோ, "நான் உங்களைவிட்டுப் போவதே இல்லை" என்ரு உறுதியாக சொல்லுகிறாள், ஒரு ஆசிரியையாக வேலைசெய்துகொண்டு, என்னோடே தங்கியிருக்கிறாள். அவள் என்னிடம், "அம்மா, இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் உங்கள் மகன் முகத்தைப் பார்த்ததுபோல் இருக்கிறது என்று சொல்லுகிறீர்களே! அது ஒன்ருதானே உங்களுக்கு ஆறுதல். நான் இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விட்டால் உங்களுக்கு என்ன ஆறுதல் இருக்கும்? நான் போய்விட்டால் உங்களைக் கவனிப்பது யார்? நீங்கள் தனித்து விடப்படுவீர்களே" என்கிறாள். ஆகவே, "ஐயா, நீங்களாவது என் மருமகளுக்கு,:நீ போய் உன் பெற்றோரோடு வாழ்ந்து, மறுபடியும் உன் வாழ்க்கையை கட்டிக்கொள்" என்ரு ஆலோசனை சொல்லி ஒரு கடிதம் எழுதுங்கள்." இந்த மக்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு என் உள்ளத்தை உருக்கியது.

என் அன்பிற்குரியவர்களே! என் அருள்நாதர் இயேசுவின் அன்பும் இணையற்ற, இனிமையான ஓர் அன்பு, அவர் தான் புத்தாண்டில் பிரவேத்திருக்கிற நம்மைப்பார்த்து, "என் அன்பு மகனே மகளே, (என்ன வந்தாலும்) நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று மிகுந்த பாசத்தோடு கூறுகிறார்.

இந்த வாக்கை நினைத்து, புத்தாண்டில் உங்களுடைய உள்ளத்தைத் தேற்றிக்கொள்ளுங்கள். உலகபிரகாரமாக ஒரு மருமகள், அன்புனிமித்தமாக தன் மாமியைவிட்டுப் பிரிய மறுத்தால், தேவாதி தேவன் அதைவிட மேலாக நம்மைவிட்டுப் பிரிய மறுப்பது உண்மையல்லாவா! அவர் பின்வரும் அருமையான வாக்குத்தத்தத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

"...இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" (மத் 28:20)

"உங்களுடனே கூட இருக்கிறேன்" என்று வாக்குப்பண்ணும் இயேசு, இந்தப் புத்தாண்டில் "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று வாக்களிக்கிறார்.

கர்த்தர் புத்தாண்டில் பிரவேசித்த்திருக்கிற நம்மை எப்படியெல்லாம் கைவிடாமல் காப்பார், ஆசீர்வதிப்பார் என்பதைக் குறித்து சற்று தியானிப்போம்.

தனிமையில் கைவிடாத கர்த்தர் 
நாம் வேதத்தில் பார்க்கும்பொழுது கர்த்தர் முதன்முதலாக, "யாக்கோபு" என்ற ஒரு வாலிபனுக்குத்தான் இந்த வாக்குத்தத்ததை கொடுத்தார். ஈசாக்கு என்ற பக்திமானுக்கு மகனாக பிறந்தவன் தான் யாக்கோபு; ஏசா என்பவனுக்கு சகோதரனாக இருந்த இவன் குணசாலியும் கூடார வாசியுமாய் இருந்தான் (ஆதி25:27). எப்பொழுதும் தன் தாயோடு இருந்தான். "யாக்கோபு" என்ற பெயருக்கு அர்த்தம் "எத்தன் (ஏமாற்றுக்காரன்) (ஆதி27:12); அதன்படியே, அவன் தன் சொந்த சகோதரனை இரண்டு முறை ஏமாற்றி அவனுடய சேஷ்ட புத்திர பாகத்தையும், தகப்பன் அவனுக்கென்று வைத்திருந்த சிறப்பு ஆசீர்வாதங்களையும் தந்திரமாக பெற்றுக்கொண்டான் (ஆதி 27:36), எனவே , ஏசாவின் கோபம் அவன்மீது மூள, அவன் தன் வீட்டை விட்டு ஓடும் ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது, எனினும் அவன் வீட்டை விட்டுப்போகுமுன்பு, தன் தகப்பனாரிடம் மறுபடியும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறான்.

பின்பு தன்னந்தனியனாய் புறப்பட்டு ஒரு வனாந்திரப் பாதை வழியாக போகிறபோது, அங்கே மாலை மயங்கி இருள் அவனை மூடிக்கொள்கிறது. மிகவும் திகில் நிறைந்தவனாய், அவ்விடத்து கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து களைப்பின், கவலையின் மிகுதியினால் அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொள்கிறான். அந்த நேரத்தில் தேவாதி தேவன் அவனுக்கு தரிசனமாகிறார். அந்தக் காட்சியில் அவனுக்குப் பிவருமாறு வாக்குக்கொடுக்கிறார்.

"கர்த்தர்...நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்" (ஆதி28:13‍_15)


இதைக்கேட்ட அவன் உள்ளத்தில் நம்பிக்கை துளிர்விட்டது! ஆசியின்மேல் ஆசி பெற்றான்.

1956வது ஆண்டு முதன்முறையாக நான் சென்னை நகருக்கு வேலையற்ற ஒரு வாலிபனாக வந்தேன். ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கினேன். "வேலை காலி இல்லை" என்றே எங்கும் சொன்னார்கள். கடைசியில், என்னுடைய தந்தைக்கு அறிமுகமான பெரியவர் ஒருவர் என்னை ஒரு அமைச்சரிடம் அழைத்துச் சென்று, என்னைக் குறித்து பேசினார், "தம்பி நாளைக்கு நீ இந்த குறிப்பிட்ட இடத்திற்கு வா! அங்கே வரும் பெரிய அதிகாரியிடம் உன்னை அறிமுகப்படுத்தி வைத்து, நீ விரும்புகிற வேலையை நான் உனக்கு வாங்கித் தருகிறேன்" என்றார். ஒவ்வொருநாளும் மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கே போய் நிற்பேன். அவர் வரவேமாட்டார். அங்குள்ள சிப்பந்திகள் என்மீது பரிதாபப்படுவார்கள். நான் காலையில் அந்த அமைச்சரை அவர் வீட்டில் சந்திக்கும்போது, "ஓ மறந்து விட்டேன், இன்று மாலையில் நிச்சயம் வருவேன்" என்பார்; ஆனால் வரவேமாட்டார். அந்த சூழ்நிலையில் தான், என்னுடய தகப்பனார் எனக்கு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார். "தம்பி நீ உடனே புறப்பட்டு வா, எப்பொழுதோ நீ எழுதிய வங்கி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாய், உனக்கு வேலை ஆயத்தமாய் இருக்கிறது". உடனே வீட்டிற்கு திரும்பிச்சென்றேன். வங்கி வேலையில் சேர்ந்தேன்.
என் அன்புக்குரியவர்களே, ஒருவேளை நீங்கள், "எனக்கு வேலை இல்லையே, வேலைக்காக எத்தனை காலங்கள் காத்திருப்பது, எனக்கு இன்னும் திருமணமாகவில்லையே, என் எதிர்காலம் எப்படி இருக்குமோ" என்ரு கண்ணீருடன், வேதனையுடன் புலம்பிக்கொண்டிருக்கலாம். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! எனக்கு உதவி செய்த ஆண்டவர் உங்களுக்கும் உதவி செய்வார். அவர் உங்களுக்குக் கொடுக்கும் இந்த அருமையான வாக்கை நீங்கள் உங்களுக்கென்று எடுத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்! உங்களைக் கைவிடவேமாட்டார்.

உத்திரவத்தில் கைவிடாத கர்த்தர்

"கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பர்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்... (உபா 31:8)

தீர்க்கன் மோசே, யோசுவாவுக்கு கொடுத்த அருமையான வக்குத்தத்தம் இது. நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திய தீர்க்கன் மோசே, தனது மரணநேரம் நெருங்கியபோது, தன் ஊழியக்காரனாகிய போசுவாவிடம், இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; நான் இப்பொழுது தேவனிடம் போகிறேன்" என்று சொன்னபோது, யோசுவாவின் உள்ளம் "ஐயோ, நான் எப்படி இந்த மக்களை கானான் தேசத்திற்கு நடத்திக்கொண்டு போய் சேர்க்கப்போகிறேன்" என்று கலங்குகிறது. அந்த நேரத்தில் தான் மோசே, கர்த்தர்தாமே உனக்கு முன்னே போவார், அவர் உன்னோடே இருப்பார். அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று தீர்க்கதரிசனமாக இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்துவிட்டு, தன் கண்களை மூவிவிடுகிறான். யோசுவா தன் ஊழியத்தை ஆரம்பிக்கும்பொழுது, அவன் உள்ளம் கலங்கிய நிலைமையில் தான் தேவாதி தேவன் அவனுக்கு தரிசனமாகி,

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடு இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை" (யோசுவா 1:5)

என்ற அதே வாக்கை கூறி அவனைத் திடப்படுத்துகிறார்.

எம் அன்பிற்குரியவர்களே யோவான் 16:33 இல் இயேசு கிறிஸ்துவும் நம்மைப் பார்த்து "...உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்" என வாக்களித்துள்ளாரே!


ஆண்டவர் இயேசுவின் மீது அன்புகொண்ட ஓர் தாய் தன் வாழ்க்கையில் நேரிட்ட ஒரு சோக சம்பவத்தை பின்வருமாறு என்னிடம் பகிர்ந்துகொண்டாள்:

வெளிநாடு ஒன்றில் என் திருமணம் இனிதே முடிந்தது; நாங்கள் இந்தியாவிற்கு கப்பலில் புறப்பட்டோம். முதல் நாள் பகல் வேளையை இன்பமாக கப்பலில் கழித்தோம். இரவு நேரம் வந்தது; நான் நன்றாக அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் என் கழுத்தை தொடுவதுபோல் எனக்கு தெரிந்தது. பயந்து நடுங்கி, கண்களைத் திறந்து பார்த்தேன். கூரிய கத்தி ஒன்று என்னுடைய தொண்டையில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு நடுங்கிப்போனேன்; என்னால் கூச்சலிடவும் முடியவில்லை. யார் இந்தக் கத்தியை வைத்துக்கொண்டு நிற்பது என்று உற்றுப் பார்த்தேன். வேறு யாரும் இல்லை, என்னுடைய அன்புக் கணவரே தான். அவர் பல மணி நேரங்கள் அப்படியே நின்றுகொண்டிருந்தார். பிறகு தானாகவே கத்தியை மடக்கி வைத்துவிட்டு படுத்துக் கொண்டார். காலையில் எழுந்தவுடன், இதைப்பற்றி என் கணவனிடம் கேட்டபோது, அவருக்கு ஒன்றுமே ஞாபகமில்லை. அப்பொழுதுதான் நான், "என் கணவருக்கு இரவுதோறும் ஒரு பயங்கர பைத்தியம் வருகிறது என்பதை விளங்கிக்கொண்டு, இதை மறைத்து எனக்கு இவரைத் திருமணம் முடித்து வைத்துவிட்டார்களே" என்று உள்ளம் உடைந்து போனேன். ஒவ்வொரு இரவும் எனக்கு இதே வேதனைதான்!

ஒருநாள் பகலில் கப்பல் ஓரத்தில் நின்றுகொண்டு கடல் அலைகளை என் கணவர் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் நின்றுகொண்டிருந்த நான், இவருடைய இரண்டு கால்களையும் பிடித்து கடலுக்குள் தள்ளிவிட்டு நாமும் குதித்துவிடலாமா? என்று கூட யோசித்தேன். அத்தனை வேதனை, உபத்திரவம், என்றாலும் நாம் நரகத்திற்கு போய்விடுவோமே என்ற பயம் தான் என்னை தடுத்தாட்கொண்டது.ஒவ்வொரு நாளும் ஆண்டவரிடம், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொன்னீரே, நீர் என்னைக் காப்பற்றும் என்று கண்ணீர் வடிப்பேன். ஆண்டவர் என் கண்ணீரைக் கண்டார். அவருக்கும் தெரியாமலேயே அந்த நோய் அவரைவிட்டு அகலும்படி அருள்புரிந்தார். இன்பமான ஒரு குடும்ப வாழ்க்கையை ஆண்டவர் எனக்குக் கொடுத்தார். என் பிள்ளைகளை வளர்க்க அருள்புரிந்தார்". இந்த சோக சம்பவத்தை நான் கேட்டபோது என் உள்ளம் உருகியது. உபத்திரவத்தின் மத்தியிலும் அந்த மகளைக் கைவிடாமல் காப்பாற்றிய கர்த்தரை மனதார ஸ்தோத்தரித்தேன்.

என் அன்பிற்குரியவர்களே, சோதனைகள், உபத்திரவங்கள் வரலாம். ஆனால் அந்த சோதனைகள், உபத்திரவங்கள் மத்தியிலும் கர்த்தர் விலகிவிடமாட்டார். அவர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார்.


குறைவை நிறைவாக்கும் கர்த்தர்

"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்..."(எபி13:5)

எபிரேயர் 13:4 யும் செர்த்து வாசித்துப் பார்த்தால், இது குடும்ப வாழ்க்கைக்கென்று கர்த்தர் கொடுக்கும் ஓர் ஆசிர்வாதம் என அறியலாம். "உங்களுக்கு இருக்கிறவைகள் போதும் என்று எண்ணுங்கள், காரணம், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" 1தீமோத்தேயு6:6 "போதுமென்கிற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்" என்கிறது.

பவுலடிகள் "போதும்" என்று ஏன் சொன்னார்?

ஒரு நாள் வனாந்தரத்தில் அருள்நாதர் இயேசு, ஐயாயிரம் பேருக்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அவர்கள் பசியினால் வாடியபோது, தம் சீடர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார். அதற்கு அவர்கள், "இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை" என்றார்கள். அப்போது இயேசு சொன்னார் "அது போதும், அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்" என்றார். அவற்றையே ஆசீர்வதித்து அத்தனை பேரையும் போஷித்தார். மீதியும் 12 கூடைகள் நிறைய இருந்தது(மத் 14:17_20 15:36_38).

என் அன்பிற்குரியவர்களே, இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்ய உங்களிடம் இருக்கும் கொஞ்சம் போதும். உங்கள் கையில் இருக்கும் கொஞ்சம் வருமானத்தை அப்படியே அவரிடம் கொடுங்கள், அவர் அதையே பெருகச் செய்து அற்புதம் செய்வார். "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று வாக்களித்தபடியே உங்களைக் கைவிடாமல் காப்பாற்றுவார்.

என் உறவினர் ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவியிலிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பொழுது, கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைத்தது. அவருடைய நண்பர் ஒருவர் ஒரு தொழில் அதிபர். "உன்னுடைய வருமானம் முழுவதையும் என்னிடத்தில் கொடுத்துவிடு, வங்கியில் கிடைக்கும் வட்டியைவிட அதிகமான வட்டியை நான் உனக்குத் தருகிறேன்" என அவர் கூற என் உறவினர் அவ்வாறே சந்தோஷமாக தனக்குக் கிடைத்த பணம் முழுவதையும் அவரிடம் கொடுத்துவிட்டார். அவரிடம் ஒரு ரசீது கூட வாங்கிக் கொள்ளவில்லை. துரதிருஷ்டவசமாக ஒரே மாதத்தில் அவர் இறந்துபோனார். அவருடைய மகனிடம் என் உறவினர் சென்று, "தம்பீ உன் அப்பாவிடம் இவ்வளவு பணம் கொடுத்தேன்" என்று கேட்டபோது, அவர், "அங்கிள் கணக்குப் புஸ்தகம் எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்துவிட்டேன். நீங்கள் அப்படி கொடுத்ததாக ஒரு அத்தாட்சியும் இல்லையே என்று கூறிவிட்டார்.

அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். அவர்கள் நான்குபேரும் திருமணத்திற்காக காத்திருந்த நேரம் அது. அவரது உள்ளம் தடுமாறியது, அவருடைய மனைவி ஒரு ஆசிரியை, அவர்கள் கொண்டுவரும் சொற்ப வருமானத்தில் தான் அவர்கள் தன் குடும்பத்தை ஓரளவு பராமரித்து வந்தார்கள். ஆனால் அவருடைய மனைவி அருள்நாதரை நம்புகிறவர்கள்! ஒவ்வொரு நாளும் அவரிடம் கண்ணீரோடு மன்றாடி வந்தார்கள். மாத சம்பளம் வாங்கும் போதும், "ஆண்டவரே இவ்வளவுதான் என் கையில் இருக்கிறது, இதை ஏற்றுக்கொள்ளும். இந்த மாதம் முழுவதும் என் குடும்பத்தை நடத்தும்; அற்புதமாக என் பிள்ளைகளுக்கும் திருமணத்தை முடித்துத் தாரும், எங்களைக் கைவிடாதிரும்" என்று கண்ணீரோடு கதறுவார்கள். அவர்களின் ஜெபத்தை கேட்ட கர்த்தர், அவர்களைக் கைவிடவேயில்லை. அந்த நான்கு பிள்ளைகளையும், உயர்ந்த பதவியில் இருந்த நான்கு வரன்கள், "எங்களுக்கு ஒரு பைசா கூட வரதட்சணை வேண்டாம்" என்று கூறி, திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள், நான்குபேருக்கும் திருமணம் சிறப்பாக முடித்து, தங்கள் வாழ்க்கையை இன்பமாக நடத்தும்படி அருள்நாதர் உதவி செய்தார்.


என் அன்பிற்குரியவர்களே, "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று சொன்ன இயேசு, இந்தப் புத்தாண்டில் உங்கள் முன்னே போவார், அவர் உங்களோடு கூட இருப்பார். யாக்கோபு தவித்த வேளையில் கைவிடாதவர், யோசுவா கலங்கினபோது அவனோடிருந்து நடத்தினவர் புத்தாண்டு முழுவதிலும் உங்களோடிருந்து உங்களையும் காப்பார். உங்கள் வாழ்வின் குறைவுகளை நிறைவாக்கி உங்களைப் பரவசப்படுத்துவார்.

நன்றி: இயேசு அழைக்கிறார் ஜனவரி 2012
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post a Comment

1 Comments

  1. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது....!!!

    ReplyDelete