Header Ads Widget

Responsive Advertisement

ஜெசிமன் பிராண்டு மற்றும் ஈவ்லின் பிராண்டு தம்பதியினர்

ஜெசிமன் பிராண்டு மற்றும் ஈவ்லின் பிராண்டு தம்பதியினர்
(1913-1974)பிறப்பு - இங்கிலாந்து, மிஷனரி -கொல்லிமலை (தமிழ் நாடு)தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைதிருக்கும் கொல்லிமலை, பச்சமலை, கல்வராயன் மலைகள், போதமலை, பைத்தூர் மலையில் ஊழியம் செய்த திரு. ஜெசிமென் பிராண்டு (1885-1929), அவரது துணைவியாரான ஈவ்லின் பிராண்டு அம்மையார் (1879-1974) அவர்களைப் பற்றியும் இந்த தம்பதியினர் எவ்வாறு மலைமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, கிறிஸ்த்துவின் நற்செய்தியை அறிவித்தனர் என்பதை இந்த மிஷனரி வாழ்க்கை வரலாற்று பகுதியில் காணலாம்.

ஜெசிமென் பிராண்டு ஐயா 1885-ல் இங்கிலாந்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு விவசாய பண்ணையின் அதிபர். ஜெசிமெனின் தகப்பனார் பிள்ளைகளின் ஆவிக்குரிய ஜீவியத்தை குறித்தும், வேதத்தை போதிப்பதிலும் அக்கறை கொண்டவராக இருந்தார். ஜெசிமெனுக்கும் ஆண்டவர் இயேசுவுக்கு பணி செய்யும் வாஞ்சை அதிகமிருந்தது. ஆனாலும்இயேசுவிடம் தன்னை முழுமையாக அற்பணித்திருக்கவில்லை. 

தன்னுடைய 14-ம் வயதில் பிரவ்ன் என்ற பிரசங்கியார், இயேசுவே சீக்கிரம் வாரும் என்று முழு மனதோடே ஜெபித்துகொண்டிருந்ததை கேட்ட ஜெசிமெனுக்கு உள்ளத்தில் ஒரு நடுக்கம் வந்தது. ஒருவேளை இயேசு சீக்கிரமாக வந்துவிட்டால் தான் நரகத்திற்கு போக நேரிடுமோஎன்று ஐயம் கொண்டு நடுங்கினார். தேவ ஆவியானவர் அவருடைய பாவத்தை குறித்து உணர்த்தினார். தேவனிடம் பாவங்களை அறிக்கைசெய்து ஒப்புரவானார் ஜெசிமென்.மிஷனரி பணிக்கு ஒப்புக்கொடுத்தல்தனது 14 வயதிலேயே தன்னை கிறிஸ்த்துவுக்கென்று அர்பணித்த ஜெசிமென் தனது 20-ம் வயதில், அவரது ஊரில் நடைபெற்ற மிஷனரி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.

அந்த கூட்டத்தில் மிஷனரி அழைப்பானது வல்லமையாய் கொடுக்கப்பட்டது. ஒருமுறை கூட இயேசுவை குறித்து கேட்டிராத மக்கள் இந்தியாவில், சீனாவில், மற்ற நாடுகளில் நித்திய நரக ஆக்கினையைநோக்கிச் சென்று கொண்டிருகின்றார்களே! வாலிபனே, அந்த இருண்டநாடுகளில்தேவனுடைய பிரதிநிதியாக ஆண்டவருடைய வார்த்தைகளைச் சுமந்து செல்ல, நீ முன் வருவாயா? அவர்களுக்குள்ளும் ஆத்துமா உண்டு என்பதை அறிவாயா?அவர்களும் தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என்பதை மறந்து விடாதே. அவர்களும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டுமல்லவா?, ஆனால் பிரசங்கிக்கிறவன் இல்லையென்றால் எப்படி ஜீவ வழியை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
பாடுகளையும் துன்பங்களையும் சகித்து தேவனுக்காய் உன்னை அர்பணிக்க நீ வர மாட்டாயா?இதைக்கேட்ட ஜெசிமென் இருதயத்தில் பாரம் கொண்டவராய் தன்னை மிஷனரியாக அர்ப்பணித்தார்.

ஸ்டிரிக்ட் பாப்டிஸ்ட் மிஷினில் தன்னை மிஷனரியாக இணைத்து கொண்டு ஒரு வருடம் மருத்துவ கல்வி பயின்ற அவர் தனது 22-ம் வயதில் மிஷனரியாக தனது செல்வ செழிப்பான வாழ்கையை உதறி விட்டு, 1907-ம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின், சென்னைக்கு வந்தார். கப்பலைவிட்டு இறங்கிய அவர், தமிழ் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை. அவர்களுக்குள் இருந்த விலையேறப்பெற்ற ஆத்துமாக்களையும் பார்த்தார்.

சென்னை, வேப்பேரியில் இருந்த ஸ்டிரிக்ட் பாப்டிஸ்ட் மிஷினில் இருந்து, தமிழ்மொழி கற்க ஆரம்பித்தார். கடினமான மொழி. ஆனால் ஆத்துமாக்களிடம்அவர்கள் தாய் மொழியிலேயே சத்தியத்தை சொல்ல தாகம்.
மிஷனரிகளுக்கு வழங்கப்படும் இரண்டு வருட மொழிப்பயிர்ச்சியில் நன்கு தமிழ் கற்றுக்கொண்டார். பின்பு ஜெப கூட்டங்களிலும்,ஞாயிறு ஆராதனையிலும் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஊழியம்1907-ல் சென்னை வந்த ஜெசிமென் இரண்டு வருட தமிழ் பயிற்சிக்குபின், 1909-ல் தனது 24-ம் வயதில் சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்திற்கு அனுப்பப்பட்டார். அவர் தங்குவதற்கு ஒரு குடிசை கொடுக்கப்பட்டது. அந்த குடிசையில் எலித்தொல்லைகள் அதிகம். ஜெசிமென் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தான் மருத்துவ கல்லூரியில் கற்ற மருத்துவ அறிவை உபயோகப்படுத்த ஆரம்பித்தார். ஒரு சிறிய ஆஸ்பத்திரியை சேந்தமங்கலத்தில் அமைத்தார். அங்கு வந்த நோயாளிகளுக்கு மருத்துவ உதவி மூலம் இயேசுவின்அன்பை வெளிப்படுத்தினார். அதனால் அந்த நாட்களில் பரவிய கொள்ளை நோய்களான ப்ளேக் மற்றும் காலரா போன்ற நோய்களில்இருந்து அநேகருடைய உயிரை அவர் காப்பாற்றினார்.

ஜெசிமெனுக்கு கொல்லிமலை அறிமுகம்அந்த நாட்களில் கொல்லிமலை மக்கள், தங்கள் காட்டு பகுதியில் விளையும் பழங்களை விற்பதற்காக20 கிலோ மீட்டருக்கும் அதிகமாக நடந்து சேந்தமங்கலத்திற்கு காலை நேரங்களில் வருவார்கள். 

ஜெசிமென் இவர்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. இந்த மலை மக்களை பாக்கும் போது ஒரு பாரம் ஜெசிமெனை ஆட்கொண்டது. இவர்கள் ஆண்டவருடைய சத்தியத்தை ஒருபோதும் அந்த மக்கள் கேட்டிருக்கமாட்டார்களே என்பதே அந்த பாரம்.

ஒருநாள் வயதான ஒரு மனிதன், தட்டுத்தடுமாறி மிஷன் ஆஸ்பத்திரி வெராண்டாவில் வந்து நின்றார். அதிகம் களைப்படைந்தவராக, தோய்ந்து போனவராக காணப்பட்டார். அந்த மனிதன் தான் கொல்லிமலையில் இருந்து நடந்து வருவதாக ஜெசிமெனிடம் தெரிவித்தார். தன்னுடைய வயிற்று போக்கு குணமடைய மருந்துகள் தரும்படி கேட்டுக்கொண்டார். 

ஜெசிமென் அவருக்கு சிகிச்சை அளித்து, அவர் தேறியவுடன், கொல்லிமலை மக்களை பற்றி அநேக காரியங்களை கேட்டு அறிந்துகொண்டார்.

ஜெசிமென் அந்த மலைவாழ் மனிதனிடம் காண்பித்த அன்பு, அவரை வெகுவாய் கவர்ந்தது. ஐயா, எங்கள் மலைக்கும் நீங்கள் வரமாட்டீர்களா?.நாங்கள் நாகரீகம் அற்றவர்களாக ஜீவிகின்றோம். எங்களின் வறுமை கொடியது. மருந்து வசதி என்பது கொஞ்சமேனும் இல்லை. தயவு செய்து வாருங்கள் ஐயா, என்று ஜெசிமெனை அழைத்தார். அந்த காட்டு மனிதனின் அழைப்பு தேவனுடைய அழைப்பாகவே ஜெசிமெனுக்கு தெரிந்தது. அன்றிலிந்து தனது எண்ணம், பேச்சு, யோசனை எல்லாமே கொல்லிமலை தான்.

ஒரு நாள் ஜெசிமனும் அவரது நண்பர்கள் நாலவருமாக, எந்த வித போக்குவரத்து வசதியும் இல்லாத கொல்லிமலைக்கு செல்ல திட்டமிட்டனர். காட்டுப்பகுதியில் கரடு முராடான வழியில் இருபது கிலோ மீட்டருக்கும் அதிகமாக நடந்தால் கொல்லிமலையை அடையலாம். ஆனால் காட்டு வழியில் கரடியும், செந்நாய்களும் உண்டு. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, வலது கைக்கும், இடது கைக்கும் வித்தியாசம் அறியாத ஜனங்களை சந்தித்து, எப்படியாவது கிறிஸ்த்துவின் அன்பை சொல்ல வேண்டுமென புறப்பட்டார் ஜெசிமென். 

பல கிலோமீட்டர்கள் நடந்து மலை உச்சியை அடைந்தார். தூரத்தில் குடிசைகள் தெரிய, உற்ச்சாகத்தோடு ஜெசிமென் அந்த கிராமத்தை நோக்கி சென்றார். மலைமக்கள், பேண்ட், சட்டை போட்டமக்களை கண்டால் ஓடிவிடுவார்கள்.அதே போல கிராம மக்கள் ஜெசிமெனை பார்த்து ஓட துவங்குகையில், அவரிடத்தில் சிகிச்சை பெற்ற மனிதன் அவரை அடையாளம் கண்டு, அவர் மருத்துவர் என்றும், யாரும் அவருக்கு அஞ்ச வேண்டாம் என்று அவன் சொன்னதிநிமித்தம் மலை மக்கள் ஜெசிமென் அருகில் வந்தார்கள்.
தான் எடுத்து சென்றிருந்த மருத்துவ பெட்டியின் துணையோடு அநேகருக்கு மருத்துவ உதவி செய்து இயேசுவின் அன்பை கூறினார் ஜெசிமென். அந்த மக்கள் மூலமாக ஏறக்குறைய 200-க்கும் அதிகமான கிராமங்கள்கொல்லிமலையில்இருப்பதை அறிந்து கொண்ட ஜெசிமென், தான் திரும்பி வந்து உங்களுடனே இருந்து உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு இரவில் சேந்தமங்கலத்திற்கு வந்து சேர்ந்தார். 

பின்னர் சென்னையில் ஊழியம் செய்யும்படி பாப்டிஸ்ட் மிஷன் மூலம் அழைக்கப்பட்டு, பின்னர் விடுமுறைக்காக அங்கிருந்து இங்கிலாந்து (Furlough) சென்றார். ஆனால் அவரது இதயமோ கொல்லிமலை மக்கள் மீதே இருந்தது. இங்கிலாந்தின் பலசபைகளிலும், பாப்டிஸ்ட் மிஷன் பத்திரிக்கையிலும் தொடர்ந்து கொல்லிமலை குறித்த பாரங்களை பகிர்ந்து கொண்டார்.
ஜெசிமெனுக்கு ஈவ்லின் அறிமுகமாகுதல்1911- ம் ஆண்டு கொல்லிமலையை குறித்த ஜெசிமெனின் கட்டுரை அநேகருக்கு ஆத்தும ஆதாய பாரத்தை ஏற்படுத்தியது. 

அதில் ஒருவர் திருமதி. எல்னா என்ற விதவை மற்றொருவர் ஈவ்லின்: ஒரு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர், ஜெசிமெனைப் போல எல்லா செல்வத்தையும் உதறி விட்டு இந்தியாவில் தேவப்பணி செய்ய தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். 

பாரத்தோடு இந்தியா நோக்கி பயணம் செய்தார்கள். ஈவ்லின், நீலகிரி மலையில் உள்ள குன்னூரில் தமிழ் மொழி கற்க அனுப்பபட்டார்கள். ஜெசிமனுக்கோ சென்னையில் இருந்து ஊழியம் செய்வதோடு, பாப்டிஸ்ட் சங்கத்தின் மற்ற பொறுப்புகளையும்கவனிக்க வேண்டியதாய் இருந்தது. எல்லா மிஷனரிகளுக்கும்சங்கத்தின் செய்திகளை கடிதம் அனுப்பும் வேலையும் நியமிக்கப்பட்டது. 

இந்த நிலையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஈவ்லினை கடிதங்கள் மூலம் தேற்றினார் ஜெசிமென். தேவனிடமிருந்து பெற்ற “TRUST and TRIUMPH’ என்ற வார்த்தையை ஈவ்லினோடு பகிர்ந்து கொண்டு குணமடைய உதவி செய்தார் ஜெசிமென்.

ஜெசிமென் கொல்லிமலை ஊழியத்தை ஆரம்பித்தல்
1912-ம் வருடத்தில் அதாவது தனது 27-ம் வயதில், ஜெசிமென்னுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. அதாவது இங்கிலாந்து சென்று மருத்துவ பட்ட படிப்பு படித்து வரும்படிமிஷனரி சங்கம் வாய்ப்பளித்தது.டாக்டர் பட்டமா? கொல்லிமலை ஊழியமா? ஜெசிமென், கொல்லிமலை ஊழியத்தையே முதலாவதாக வைத்தார். ஆகவே மருத்துவ பட்ட படிப்பை உதறி தள்ளினார். 1912-ம் வருடம் மார்ச் மாதம், கொல்லிமலை மிஷனரியாக சங்கத்தாரால் நியமிக்கப்பட்டு, சென்னையிலிருந்து சேந்தமங்கலம் வந்து சேர்ந்தார் ஜெசிமென்.

அங்கிருந்து அவரது நண்பர் மார்லிங் என்பவருடன் கொல்லிமலையின் வாழவந்தி என்ற இடத்திற்கு நடந்து சென்றார்கள். அந்த ஊர் பூசாரி கொடுத்த சிறிய ஓலைக்குடிசையில்தங்கி, அருகிலிருந்து கிராமங்களுக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும், அவர்களுக்கு கர்த்தரை அறிவித்து ஊழியம் செய்ய தொடங்கினார்.ஜெசிமென், மனைவி ஈவ்லினோடு கொல்லிமலையை அசைத்தல்:1913-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் சேந்தமங்கலத்தில் ஜெசிமெனுக்கும் ஈவ்லினுக்கும் SBM ஆலயத்தில வைத்து திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்று மாலையே திருமனதம்பதியினர் கொல்லிமலையை நோக்கி பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே ஜெசிமென் வாழவந்தி என்ற இடத்தில் கட்டியிருந்த மரவீட்டிற்கு பல கிலோ மீட்டர்கள் நடந்தும், டோலியிலும் வந்து சேர்ந்தார்கள். பின்னர் அநேக மெடிக்கல் கேம்ப்கள் மூலம், கிராமங்களை சந்தித்தனர். கிட்டத்தட்ட 10 நாட்கள் ஒரு பகுதியில் தங்கி மெடிக்கல் கேம்ப்கள் நடத்தினர். அந்த நேரத்தில் அந்த கிராமங்களில் இருக்கும் ஆடு அல்லது மாட்டு கொட்டகைகளே அவர்களுக்கு தங்குமிடமாக இருந்தது. 

இந்த சூழ்நிலையில் 1914-ம் வருடம் உலக வரலாற்றின் சிறப்பு மிக்க மருத்துவராக விளங்கிய பால் பிராண்டு அவர்களுக்கு மகனாய் பிறந்தார். குஷ்டரோகிகளுக்கு நரம்புகள் பாதிப்பதால் கை விரல்கள் குறுகி உபயோகிக்க முடியாததாக மாறிவிடும். இவைகளில் டாக்டர் பால் பிராண்டு ஆராய்ச்சி செய்து நரம்புகளை மாற்றியமைக்கும்அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்தார். ஜெசிமென் தனக்கு முன்னிருந்த மருத்துவ படிப்பிற்க்கான வாய்ப்பை உதறித்தள்ளிவிட்டு கொல்லிமலை வந்திருந்தாலும், கர்த்தர் அவரது மகனை உலக சிறப்பு மிக்க மருத்துவராக மாற்றினார். எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.பாடுகளின் மத்தியில் ஊழியம்கொல்லிமலை பூசாரிகள் அந்த மக்களை ஆளுகிரவர்காளாக இருந்தார்கள். மக்கள் யாவரும் பூசாரிகளின் ஆலோசனைப்படியே நடப்பார்கள். 

ஊர்கட்டுபாடுகளும், ஜாதி கட்டுப்பாடுகளும் இன்றளவும் கொல்லிமலை மக்கள் இரட்சிக்கப்ட முக்கிய தடையாக உள்ளது. கொல்லிமலை பூசாரிகள் இந்த மக்களுக்கு பூசைகள் செய்து, வியாதியில் மந்திரம் ஓதி, பிசாசுகளை ஓட்டுவதற்கு அதிக பணம் பெற்று வந்தார்கள். மக்கள் இயேசுவை பின்பற்றினால் தமது வருமானம் நின்றுவிடும் என்பதற்காக இந்த பூசாரிகள் ஊழியத்திற்கு எதிராய் செயல்பட்டார்கள். கிறிஸ்துவை ஏற்றுகொள்ளுபவர்கள் ஊரை விட்டும், குடும்பத்தை விட்டும் துரத்தபடுவார்கள் என்றும் பயமுறுத்தி மக்களை இயேசுவின் பக்கமே விடாமல் தடுத்தனர். 

வருடங்கள் கடந்தன. ஜெசிமெனின் கொடுத்த அணைத்து மருத்துவ உதவிகளையும் மக்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் ஒருவர் கூட இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து, இயேசு எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னாலும், இந்த மக்களை இயேசு தன் பக்கம் இழுக்க வல்லவராய் இருக்கின்றார் என்ற விசுவாச அறிக்கை செய்தார் ஜெசிமென் 

பள்ளிகளை நிறுவ தொடங்கினார்.
1919-ம் ஆண்டில் மலையில் ஊழியம் ஆரபிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியிருந்த நிலையில், விடுமுறைக்கு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பை உதறிவிட்டு ஜெசிமென் தம்பதியினர் கொல்லிமலையில் ஊழியத்தை தொடர்ந்தனர். 

அந்த வருடத்தில் விஷ காய்ச்சல் கொல்லிமலை முழுவதும் பரவ தொடங்கியது. விஷக்காய்ச்சளால் பாதிக்கப்பட்ட மக்களை மலைமேலுள்ள பாறையில் போட்டு வந்து விடுவார்கள். நோய் நீங்கி உயிரோடு இருந்தால் மீண்டும் அவர்கள் கிராமத்திற்குள்அனுமதிக்கப்படுவார்கள். அதனாலேயே அந்த பகுதி சீக்கு பாறை (SICK MOUNT) என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது. ஜெசிமெனும், ஈவ்லினும் அரிசி கஞ்சியை இந்த மக்களுக்கு அளித்து அநேகரை காப்பாற்றினர்.ஆயினும் நோயின் தாக்கம் கொடிதாய் இருந்ததால் அநேகர் மரித்து போனார்கள். ஜெசிமெனது மரவீட்டின் அருகில் இருந்து, ஊழியத்தை எதிர்த்து வந்த பூசாரியும் இந்த விஷ காய்ச்சலுக்கு பலியானார். பின்னர் இந்த பூசாரியின் மகனையும் மகளையும் ஜெசிமென் தம்பதியினரே தத்தெடுத்து வளர்த்தனர். 

ஈவ்லின் அம்மையார்இந்த பூசாரியின் பிள்ளைகளுக்கு தாயாக மாறினார்.இந்நிலையில் ஜெசிமென், ஈவ்லின்தம்பதியினருக்கு கோனி என்ற பெண்குழந்தை பிறந்தது. இந்த கோனி பின் நாட்களில் இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவில் மிஷனரி ஊழியம் செய்தவர்.ஜெசிமெனுக்கு வாழவந்தியில் ஆலயத்தை கட்டவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த 30பவுண்டில் ஒரு சிறிய ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார். 

சில ஆட்களை தனக்கு உதவியாக வைத்துக்கொண்டு தானே அந்த ஆலயத்தை கட்டினார். 1920-ம் கிறிஸ்மஸ் தினத்தில் ஆலயம் திறக்கப்பட்டது.
ஜெசிமென் குடும்பத்தோடு விடுமுறைக்காக இங்கிலாந்து செல்லுதல்
1923-ம் ஆண்டு ஜெசிமென் தம்பதியினர் கொல்லிமலை ஊழியத்தை தொடங்கி 10 வருடங்கள்நிறைவேறின. பால் பிராண்டுக்கு 9 வயதும், கோணிக்கு 6 வயதும் ஆனதால் அவர்களை பள்ளியில் சேர்க்கும்படி தம்பதியினர் இங்கிலாந்து சென்றார்கள். இருவரும் இங்கிலாந்து பள்ளி ஒன்றின் விடுதியில் சேர்க்கப்பட்டனர். 

ஜெசிமெனும், ஈவ்லினும் கொல்லி மலை அனுபவங்களை சபையிலும் தனிப்பட்ட விசுவாசிகளிடமும் பகிர்ந்து கொண்டார்கள். அப்பொழுது ஈவ்லினுடைய அண்ணன் மகள் ரூத் ஹாரிஸ் தன்னை மிஷனரியாக கொல்லிமலை பகுதிக்கு அர்ப்பணித்தார்.விடுமுறை முடிந்தது.. பிள்ளைகளை விட்டு பிரிவது தம்பதியருக்கு கடினமாகவே இருந்தது. ஆனாலும் தன்னுடைய தகப்பனையாவது, தாயையாவது, தன்னுடைய குமாரனையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு பாத்திரன் அல்ல என்ற தேவ வார்த்தை அவர்களோடு பேசிற்று. 

ஜெசிமெனுக்கு தெரியாது அதுவே பால் பிராண்டையும், கோணியையும்பார்க்கும் கடைசி முறை என்று. ஈவ்லின் அம்மையார் குழந்தைகளை விட்டு பிரிந்து வருகையில், தனக்குள் இருந்த பாச உணர்வுகள்மரித்து போவதாக என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். உள்ளத்தில் கொல்லிமலை மக்களின் மீது கொண்ட ஆத்துமபாரம் ஒரே மாதத்தில் மீண்டும் ஜெசிமென் தம்பதியினரை கொல்லிமலைக்கு திரும்பிவர செய்தது.மலைமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய ஜெசிமென்:கொல்லிமலையில் வாழ்ந்து வந்த அநேக ஏழை மற்றும் அநாதை குழந்தைகளை குறித்த பாரம் ஜெசிமெனுக்கு இருந்தது. சிறுவயது கலியாணம் அந்தநாட்களில் அதிகம் இருந்தது. நான்கு, ஐந்து வயது பெண் குழந்தைகளை வாலிப அல்லது பெரியவயது ஆட்களுக்கு திருமணம் செய்து விடுவார்கள். ஆனால் அந்த மனிதன் வேறு பெண்களை தனக்கு வைத்து கொண்டு, இந்த சிறு பெண்களை துரத்தி விடுவான். இவ்விதமான குழந்தைகள் அனாதைகள் போல இருந்தார்கள். தான் இங்கிலாந்து சென்ற பொழுது பெற்ற உதவியைக்கொண்டு முதலில் பெண்களுக்கான விடுதியையும், பின்னர் ஆண்களுக்கான விடுதியையும் கட்டினார். இந்த விடுதியில் இருந்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போலவே ஜெசிமெனும், ஈவ்லினும் வளர்த்தனர். மரிக்கும் தருவாயில் வியாதிப்படும் குழந்தைகளையும் சிகிச்சை அளித்து விடுதியில் வைத்து பராமரித்து வந்தனர். 

விடுதியில் இருந்த பிள்ளைகள் காலை ஏழு மணிக்கு ஆலயம் சென்று ஜெபித்த பிறகு, ஜெசிமென் கட்டியிருந்த பள்ளிக்கு செல்ல வேண்டும். அங்கே அவர்களுக்கு தோட்டக்கலை, பாய் நெய்வது, நெசவு, பட்டுபூச்சி வளர்ப்பு, பட்டு தயாரிப்பு, கட்டிட வேலை, மற்றும் தச்சு வேலையும் கற்றுதரபட்டன.கொல்லிமலையில் 9 பள்ளிக்கூடங்களைகட்டி அந்த ஜனங்களின் கல்வி அறிவை வளர்த்தார். 

மலை மக்களுக்காக தான் தங்கிருந்த வீட்டையும் மருத்துவ மனைபோல பயன்படுத்தியுள்ளர். இவை எல்லாவற்றிலும் ஈவ்லின் அம்மையார், ஜெசிமென் பிராண்டு ஐயாவிற்கு உறுதுணையாக இருந்தார். 

ஒரு வருடத்தில் ஏறக்குறைய 25000 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களுக்கு கிறிஸ்த்துவின் அன்பை வெளிபடுத்தினார். 

அறுநூறுக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை கொல்லிமலை மக்களுக்காக செய்துள்ளார்.மலைவாழ் மக்கள் பணக்காரர்களிடம்வட்டிக்கு வாங்கி கொத்தடிமைகள் போல வாழ்ந்துவந்தார்கள். இதை மாற்றியமைக்க வேண்டும் என்று உறுதிகொண்ட ஜெசிமென், காடு மேடு என பாராமல் கொல்லிமலையின்எல்லா வீடுகளுக்கும் சென்று புள்ளிவிவரம் சேகரித்து அதை சர்க்காருக்கு அனுப்பிவைத்தார். அந்த புள்ளி விவரப்படி எல்லா பழங்குடி மக்களும் முப்பது முதல் முப்பத்தைந்து வரை கடன்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த நாட்களில் 35 ருபாய் என்பது பெரிய தொகையாய் இருந்தது. மக்கள் பணக்காரர்களிடம்பணம் வாங்குவதை தடுக்க சர்க்காரே மக்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டுமென சர்க்காருக்கு தெரிவித்தார். 

இதினால் உதித்ததே இன்றைக்கு அநேக இடங்களில் காணப்படும் கூட்டுறவு வங்கி (Co-Op Credit Society Bank) என்னும் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் வங்கி. அதை அறிமுகப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்தவர் ஜெசிமென் பிராண்ட் ஆவார். வருவாய் துறை அதிகாரிகளால் 400-க்கும் அதிகமான பழங்குடி மக்கள் 20 வருடத்திற்கும் அதிகமாய் குடியிருந்த மக்கள் மிருகத்தனமாக துரத்தப்படத்தை அறிந்து, நாமக்கல் வரை மக்களோடு சேர்ந்து முன்னின்று நடந்து சென்று, சேலம் ஆளுனரை சந்தித்து நடந்ததை எடுத்துக்கூறி மக்களின் நிலங்களை அரசிடமிருந்து மீட்டுக்கொடுத்தார். 

இப்படியாய் அந்த மக்களுக்காக அரும்பாடு பட்டு அவர்களில் ஒருவராகவே தன்னையும் இணைத்து ஊழியம் செய்தார் திரு. ஜெசிமென் பிராண்ட்.சிறந்த கட்டிட கலைஞரும், தச்சருமான திரு. ஜெசிமென் பிராண்ட் வாழவந்திக்கு வந்த பிறகுதான்மரம்வெட்டி பலகை அறுத்தல், பலகைகளை பக்குவப்படுதுதல் போன்ற தொழில்கள் அங்கு அறிமுகமாயின. 

அதுவரை ஒலைகுடிசைகளில் வாழ்ந்த மக்கள் மரபலகைகள் மூலம் தங்களுக்கு வீடுகள் அமைக்க தொடங்கினர்.கொல்லிமலை மக்களுக்கு, விஞ்ஞானமுறையில் நூதனமாக தயாரிக்கப்பட்ட உரத்தை எப்படி உபயோகித்து, எப்படி விளைச்சலை பன்மடங்காக பெருக்குவது போன்றவற்றை முதலில் கற்றுக்கொடுத்தவரும் திரு. ஜெசிமென் பிராண்ட் தான். 

அந்த காலத்தில் இந்தியாவில் உரமிடுவது என்றால் எப்படி என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது. இங்கிலாந்தில் தான் ஒரு விவசாய பண்ணை அதிபரின் மகனாக இருந்ததால் அவருக்கு தெரிந்திருந்த உரமிடும் முறையை, கொல்லிமலை மாக்ளுக்கு அறிமுகப்படுத்தி, தமிழக மக்களை விவசாயத்தில் முன்னேற்றினார்.

ஜெசிமென் பிராண்ட் நடத்தி வந்தகைத்தொழில் பள்ளியில் அநேக மாணவர்கள் பயின்று வந்தார்கள்.அவர்கள் மூலம் யாருமே சாதரணமாகமனதிலும் நினைக்ககூடாத பட்டு பூச்சி வளர்க்கும் தொழிலையும் ஆரம்பித்துவிட்டார். ஏராளமான முசுக்கொட்டை செய்திகளை வளர்த்து, அதில் பட்டு புழுக்களை வளர்த்து, அதன் மூலம் நெசவுத்தொழில் ஆரம்பித்து அழகான பட்டு துணிகள் தயாரிக்கப்பட்டன. 

இவைகளுக்கு வெளிஊர்களில் நல்ல வரவேற்ப்பு இருந்தால் மக்களின் வாழ்க்கை தரமானது படிப்படியாய் உயர ஆரம்பித்தது.அடர்ந்த காடுகளினூடே இங்கும் அங்குமாய் செல்லும் கொடி பாதைகளைத் தவிர சற்றும் வசதியான பாதைகளை கொல்லிமலையில் காணமுடியாது. இந்த குறையை தீர்க்க திரு. ஜெசிமென் பிராண்ட் ஒரு திட்டம்போட்டு அதிக மக்கள் நடமாட்டம் இருந்த கொல்லிமலையின் வட பகுதிகளுக்கு அநேக கிலோ மீட்டர்கள் நல்ல பாதையை வெட்டுவித்தார்.

இது தான் திரு.ஜெசிமென் பிராண்ட் அவர்கள் மக்களுக்காக செய்த கடைசி சேவையாகும்.திரு. ஜெசிமென் பிராண்ட் அவர்கள் தமது சொந்த முயற்ச்சியால் தேவாலயம், 9 பள்ளிகள், மருத்துவ மனை, அனாதைப் பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, விவசாய பண்ணை மற்றும் பட்டு புழு வளர்க்கும்பண்ணை போன்றவை அமைத்து கொல்லிமலை என்று அழைக்கப்பட்ட மரண மலையை, மக்கள் வாழும் இடமாகமாற்றிக்காட்டினார்.
இவை எல்லாவற்றிலும் சுவிசேஷம் சொல்ல அவர் மறந்திருக்கவில்லை. ஜெசிமென் செய்த சமுதாய சீர்திருத்த புரட்சி இன்றளவும் கொல்லிமலையில் நினைவு சின்னங்களாக நிற்கின்றது.ஜெசிமெனின் கடைசி நாட்கள்கொல்லிமலையில் பரவி வந்த மலேரியா காய்ச்சலும், விஷ காய்ச்சலும் ஜெசிமெனையும் விட்டுவைக்கவிலை. கரறுப்பு நீர் காய்ச்சல் :”Black Water Fever” என்னும் வினோத காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்களும், ஈவ்லினும்எவ்வளவோ முயன்றும் காய்ச்சல் விட்டபாடில்லை. 1929-ம் வருடம் ஜூன் மாதம் 15-ம் தேதி மாலை வேளையில், நல்ல போர்சேவகன் தன் ஆத்துமாவை நேசரின் கையில் ஒப்படடைத்து, கிறிஸ்துவுகாய் நல்லதொரு போராட்டத்தை போராடி முடித்தார்.
ஜெசிமென், தான் கட்டின மர வீட்டின் அருகிலேயே கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்குள் தன்னுடைய வாழ்வில் நேர்ந்த இழப்பை தாங்கமுடியாமல் ஈவ்லின் கதறினார். ஜெசிமென் ஐயா அவர்களின் சவகுழிக்கு அருகில் முழங்கால் படியிட்டு, கோதுமை மணி நிலத்தில் விழுந்தது, மிகுந்த பலன் எப்போது என்று கண்ணீர வடித்தார்.44 வயதே வாழ்ந்த திரு. ஜெசிமென்பிராண்ட் அவர்கள் தமது வாழ்நாளில் 17 வருடங்களை கொல்லிமலை மக்களுக்காக தியாகம் செய்து மலைமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இன்றளவும் மலைமக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வருகிறார். 

நீங்கள் கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்க திட மனதோடு ஆயத்தமாய் இருகீன்றீர்களா?

Post a Comment

0 Comments