Header Ads Widget

Responsive Advertisement

சர்ப தோஷம் ஒரு எளிய பரிகாரம் (என் வாழ்க்கை அனுபவம்)


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடுஇனையில்லா நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் இன்று நாம் ஒரு புதிய கோணத்தில் அனேகமாயிரம் பேர் சிக்கித்தவிக்கும் ஒரு பிரச்சனையைக் குறித்தும் அதன் பரிகாரம் குறித்தும் என் வாழ்க்கை அனுபவத்திலிருந்து தேவனை மகிமைப்படுத்தும் ஒரு சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று ஜோதிடம் ஜாதகம், தோஷங்கள் பரிகாரங்கள் போன்ற காரியங்களை நாம் கேள்விப்படுகின்றோம், சில பெயர் கிறிஸ்தவர்களும் கூட ஜோதிடம் ஜாதகம் போன்றவற்றை நம்புவதையும் கேள்விப்படுகின்றோம், அப்படிப்பட்ட நிலையிலிருந்து தேவன் உடைத்தெரிந்த என் வாழ்க்கை அனுபவத்தை உங்களோடுகூட பகிர்ந்து கொள்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறேன்.

என் சாட்சியைப் படித்தவர்கள் சர்ப தோஷம் என்பதைக் குறித்து நான் எழுதியிருந்ததையும், அதற்காக நான் யாகம் செய்தத்தையும், ஆண்டவருக்குள் வந்த பின்பு அந்த பிசாசின் உடன் படிக்கையை முறித்துக்கொண்டதையும் எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியான சில காரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சர்ப தோஷம் என்றால் என்ன?
முதலில் சர்ப தோஷம் என்றால் என்ன? என்பதைப் பார்த்து விடுவோம், பொதுவாக தோஷங்கள் என்பது முன்னோர்கள் செய்த பாவத்தின் தண்டனை அவர்கள் வம்சத்தார்களின் குழந்தைகளுக்கு ஏழு தலமுறை வரைக்கும் தொடர்வது ஆகும், இதை ஜோதிடத்தில் குழந்தை பிறக்கும் நேரத்தின் கிரக நிலைமைகளை கொண்டு கணிப்பார்கள், இதில் சர்ப தோஷம் என்பது கன்னியின் சாபம் ஆகும், இந்த சாபம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் திருமண வாழ்க்கை சரியாக அமையாது, கனவன் மனைவிக்குள் பிரச்சனை, கருத்து வேறுபாடுகள், பிரிந்து வாழ்தல், விவாகரத்து, என்று திருமணத்திற்கு பிந்தைய சமாதாணமற்ற வாழ்க்கையாகும்.

இதிலிருந்து வெளியேறவே முடியாதா?
இன்று இந்த தோஷத்தைக் கண்டுபிடிப்பவர்கள் பல்வேறு பரிகாரங்களை செய்கிறார்கள், பல்வேறு இடங்களுக்குச் சென்று தோஷம் கழிக்கிறார்கள், பல துர் தேவதை வணக்கம், தோஷமுள்ள ஜாதகத்தையுடைய துணை என்று ஏதேதோ செய்கிறார்கள். ஆனால் 

இன்றைய சமூகச் சூழலில்  திருமணத்துக்குப் பிந்தைய சமாதாணமற்ற நிலை சாதாரனமாகிவிட்டது. இதை ஒரு இயல்பாகவே மக்கள் எடுத்துக் கொள்ளப் பழகியிருக்கிறார்கள், ஆனால் அது ஒரு சாபம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும், என்னதான் ஜாதகப் பொருத்தம் பார்த்து, நாள் நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்தாலும், பரிகாரங்கள் செய்தாலும் பலர் இதிலிருந்து தப்பிப்பதில்லை. அப்படியானால் இதற்கு முடிவுதான் என்ன? ஆம் இப்படிப்பட்ட சாபத்திலிருந்து நான் தப்பி வந்திருக்கிறேன். அதை நான் சாட்சியாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளட்டும்,

இரட்சிக்கப்படுவதற்கு முன்னால் என் நிலைமை
என் வாழ்க்கையில் ஜாதகம், ஜோதிடம், வாஸ்து, யோகா, தியானம், மந்திரம், பூஜைகள் என்று வாழ்ந்த கால கட்டத்தில் இந்த சர்ப தோஷத்தைக் குறித்த அறிவு என்னை மிகவும் பயங்கொள்ளச் செய்தது, காரணம் எங்கள் இரத்த சொந்தத்தில் பலருடைய திருமணவாழ்வு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை, எனக்கும் இந்த சாபம் வந்துவிடுமோ என்ற பயம் என்னை வாட்டியது, இதற்காக ஜோதிடரின் ஆலோசனைப்படி யாகம் மூலம் பரிகாரம் செய்து கொண்டேன். இது போல மந்திர தந்திரங்கள், யாகங்கள், தாயத்து யந்திரம், செப்புத்தகடு என்று எல்லாவற்றையும் எல்லாவற்றுக்காகவும் நம்பி ஏமாந்ததுதான் மிச்சம்...

இரட்சிக்கப்பட்ட பின்பு என் நிலைமை,
தோல்வியின் விளிம்பில் தற்கொலைதான் முடிவு என்ற சூழ்நிலையில் இருந்த நான் உதாசீனப்படுத்திய வழியான கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தில் வந்து அவருடைய அன்பை ருஷித்த பின்பு சர்ப தோஷப்பரிகாரம் என்று சொல்லி என்மீது ஏவி விட்டிருந்த பாம்பின் ஆவியை இயேசுவின் நாமத்தில் அருமையான நண்பர்கள் உதவியோடு என்னைவிட்டு அகற்றினேன், பரிகாரத்தை உடைத்து  அந்த அசுத்த உடன்படிக்கையை விட்டு வெளியேறினேன்.

திருமண ஏற்பாடுகள்
நான் இந்த உடன்படிக்கையை விட்டு வெளியேறி கிறிஸ்துவை அறிகிற அறிவிலும் அவரைப் பற்றும் விசுவாசத்திலும் அனுதினமும் வளர்ந்து வந்தேன். 

மேற்சொன்ன அசுத்த உடன்படிக்கையை விட்டு வெளியே வந்தேன் ஆனாலும் என் திருமணத்தைக் குறித்து தேவனிடத்தில் அதிகம் வேண்டுதல் செய்ததாக என் நினைவில் இல்லை, இந்த சூழ்நிலையில் எங்கள் வீட்டிலோ திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது, ஆனால் தேவனோ அந்த சம்பந்தம் வேண்டாம் என்றார், இதையெல்லாமா ஆண்டவர் சொல்லுவார்?? என்று விசுவாசமில்லாமல் இருந்தேன், ஒருமுறைக்கு இரண்டு முறை மூன்று முறையும் எச்சரிப்பு வந்தது, மூன்றாம் முறை இந்த சம்பந்தம் நடந்தால் நீ தற்கொலை செய்ய வேண்டியது வரும், என்றும் ஆண்டவர் பேசினார், 

ஆனால் தட்டிக்கழித்தேன் கொடிய இக்கட்டில் அகப்பட்டுக்கொண்டேன், அந்தப் பிரச்சனையை விட்டு வெளியே வர ஆறு மாதங்கள் பிடித்தது பஸ்டேண்டில் படுக்கும் நிலைவரைக்கும் கொண்டு சென்றது, துக்கம் தாங்காமல் அதிகாலை 2, 3, மணிக்கெல்லாம் எழுந்து அவாந்திரமான இடங்களுக்குச் சென்று கதறி அழுது ஜெபிக்குமளவு துக்கம் நிறைந்ததாக அந்த கீழ்படியாத அனுபவம் இருந்தது, 

டைபாயிடு, மலேரியா, நிமோனியா, என்று மூன்று கொடிய நோய்கள் தாக்கி  ஒரு மாதம் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய நிலைக்கு உள்ளானேன், அந்த நாட்களில் ஆண்டவருடைய வார்த்தைக்கு செவி சாய்த்திருந்தால் இத்தனை பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்க மாட்டேனே.. திருமணத்துக்கு முன்பே இத்தனை பிரச்சனை என்றால் திருமணத்திற்குப் பிறகு ஆண்டவர் சொன்னது படி நிச்சயமாக தற்கொலைதான் செய்திருப்பேன் என்று சொல்லி என் திருமண காரியத்தில் மற்ற எல்லா காரியங்களைப் போலவும் தோற்று பெலனற்றவனாக, போரில் தோல்வியுற்ற நிராயுத பானி சரணடைவது போல‌ தேவனிடத்தில் மனப்பூர்வமாக சரணடைந்தேன்.

தொடரும் பாடுகள்,
தேவனுடைய ஒரு வார்த்தைக்குக் கீழ்படியாமல் போனதன் நிமித்தமாக நான் சிக்குண்ட சாத்தானின் கன்னி என்னை மனம் மற்றும் உள்ளம் சார்ந்த பிரச்சனைகளில் மாத்திரம் சிக்கவிடவில்லை, கூடவே குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் வெறுப்புக்கும் உள்ளானேன், என் வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்றே இனி சம்பவிக்காது என்பது போன்ற நம்பிக்கையற்ற நிலைமை, குடும்பத்தார், உறவினர்கள் திருமணக்காரியத்தில் கைவிட்ட நிலைமையில் யார் எனக்காக பெண் பார்க்கக்கூடும்? யார் முன்னின்று என் திருமணத்தை நடத்தி வைக்கக் கூடும்?? ஆனாலும் என் தேவன் வாக்கு மாறாதவர், அவர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்து யார் தயவையும், முகத்தையும் நாடாமல், தேவனை மட்டுமே பார்த்து சுமார் மூனரை ஆண்டுகள் தேவனை மாத்திரமே நோக்கிக் காத்திருந்தேன்,

தேவன் செயல்பட ஆரம்பித்தார்,
ஆம் என் அன்பு தேவ பிள்ளைகளே, தேவன் தன்னை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் சமீபமாய் இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது போலவும், அவர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதையும் மீண்டும் உறுதி செய்யும் வண்ணமாக தேவன் வல்லமையாய் செயல் பட ஆரம்பித்தார். அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக என்னோடு பேசிச் சொல்லிய வார்த்தைகளில் ஒன்றும் கீழே விழவில்லை.. ஆம்.. மனிதனின் அறிவுக்கு எட்டுகிற வழிகளில் திருமணம் வாய்க்கவில்லை. மனித அறிவைப் பொறுத்த வரையில் தோண்றுகிற எல்லா வழிகளும் என் வாழ்க்கையில் அடைக்கப்பட்டு தாழ்ப்பாழ்கள் துறுப்பிடித்துக் கிடந்தன. ஆனால் என் வாக்கு மாறாத தேவன் வானத்துக்கும் பூமிக்கும் இடையிலுள்ள வித்தியாசமளவுக்கு மனித சிந்தனைகளிலிருந்து உயர்ந்த சிந்தனையுடைய என் பரம தகப்பன். வழியைத் திறந்தார்.

அற்புதமான வழி, அது என் ஆண்டவர் இயேசுவின் வழி
எல்லா வழிகளும் அடைப்பட்டு தேவனை மாத்திரமே நோக்கிப்பார்த்திருந்த எனக்கு, மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்பற்றுப் போன என் நண்பர் என்னை இந்த இனையம் வழியாக கைபேசி எண்ணை வாங்கி என் சகோதரியை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்ட போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது, நண்பா விளையாடுகிறாயா? நகைச்சுவைக்காக கேட்கிறாயா?? என்று கேட்டேன் இல்லை இல்லை, உண்மையாகத்தான் ஜெபித்து ஆண்டவரிடமே கேட்டு உன் விருப்பத்தைச் சொல் உன் முடிவு எதுவானாலும் கவலையில்லை என்றார்.

வாக்குமாறாத தேவன்
தேவன் என்னிடம் பேசிச் சொல்லிய எல்லா அறிகுறிகளும் மேற்கண்ட சம்பந்தத்தில் 100 விழுக்காடு இருந்தது, ஆனால் முன்னமே ஒரு கொடிய அனுபவத்தில் சிக்கித்தவித்த எனக்கு பயம் மேற்கொண்டது, இதனால் மகிழ்ச்சிக்கு பதில் கலக்கம் சூழ்தது, ஆண்டவரின் பாதத்தில் மூன்று நாள் உபவாசம் இருந்து ஆண்டவரே அவருக்கு என்ன பதில் சொல்வது என்னோடு பேசும் நீர் சொன்னபடி செய்கிறேன். என்று அமர்ந்திருந்தேன், ஆண்டவர் இதுவே என் சித்தம் என்றார், ஆம் என் தேவன் ஆபிரகாமின் வேலைக்காரன் ரெபெக்காளைக் கண்டுபிடிக்கச் சென்ற போது எப்படி ஒருவார்த்தையும் கீழே விழவில்லையோ அப்படியே என் வாழ்க்கையிலும், ஆண்டவர் சொன்ன ஒரு அறிகுறியும் கீழே விழாமல் என் திருமணத்திற்கு பெண் வாய்க்கும் படி செய்தார்.

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து,
ஆம் பூட்டப்பட்டிருந்த கதவுகளை உடைத்து துறுப்பிடித்துப் போயிருந்த இரும்புத்தாழ்பாள்களை என் தேவன் உடைத்து, பெற்றோர், உறவினர்கள் முழு சம்ம‌தத்தோடு திருமணம் நடக்கும்படி தேவன் வாய்க்கச் செய்தார், 

நான் இந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் போது பெண்ணின் போட்டோவைக் கூட பார்க்கவில்லை, கருப்ப்பா சிவப்பா உயரமா குட்டையா? எதுவுமே தெரியாது.. என் தேவன் மீது கொண்ட விசுவாசத்தினால் மாத்திரமே முடிவுகளை எடுக்க வேண்டும், வேறெந்த உலகக் காரியமும் என் முடிவுகளை பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன், ஆனாலும் என் தேவன் மீது கொண்ட விசுவாசத்தின் பலனாக  அவருக்கு முதலிடம் கொடுக்கும் அருமையான பெண்ணையே, நேர்த்தியான குணநலன்களுள்ளவரையே கொடுத்தார்..

எனக்குப் பிரியமான என் சகோதரனே சகோதரியே திருமணக்காரியத்தில் என்ன செய்வோம் என்று கலங்கிக்கொண்டிருக்கிறாயா? எனக்கு யாருமே இல்லையே என்று ஏங்கித்தவித்துக் கொண்டிருக்கிறாயா? உன் பரம்பரை சாபங்களை நிர்மூலமாக்கி உன்னுடைய எல்லா சூழ்நிலைகளையும் மாற்றி உன்னுடைய காரியத்தில் வெற்றி சிறக்க வைக்கவும், மறுமையிலேயும் மகிழ்ச்சியுடன் நித்திய வாழ்வையும் தர ஆவலாய் காத்துக்கொண்டு ஒருவர் இருக்கிறார் அவரே இயேசு கிறிஸ்து..


ஒரே ஒரு முறை அவரிடம் உன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து அவர்மேல் நம்பிக்கை வைத்து பொறுமையாய் அவர் சமூகத்தில் அவர் முகத்தை மாத்திரமே நோக்கிப்  பார்த்திரு.. நீ நினைத்ததற்கும் வேண்டிக்கொள்வதற்கும் விட பெரிய காரியங்களை அவரால் செய்யமுடியும், அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் வெட்கமடைவதில்லை என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த இந்த அனுபவமே சாட்சி.. 

நான் என்ன செய்ய வேண்டும்??
மனிதர்களை நம்புவது உனக்கு கன்னியாய் இருக்கும், அது உன் தகப்பனும் தாயும், உற்றார் சுற்றார், நண்பர்கள், கனவன், மனைவி, பிள்ளைகள், யாராக இருந்தாலும் இதுவே நீதியாகும், ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்பு அவரே எல்லா தோஷங்களுக்கும் பரிகாரி.. அவரை நம்பிக் காத்திரு நீ வெட்கப்படுவதில்லை...

Post a Comment

0 Comments